வாழ்வும் மெய்யியலும்



"வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம்" நாவல் வாசித்தேன். அமலன் ஸ்டான்லியின் வேறு எந்தப் புத்தகத்தையும் முன்னர் வாசித்ததில்லை. இந்த நாவலில் வரும் ஜெரியை மையமாக வைத்து ஒரு நல்ல வெகுஜன திரைப்படத்தை கூட எடுக்கலாம். ஜெரி எல்லா வகையிலும் ஒரு ஹீரோ. நாவலில் வட சென்னை பற்றிய விவரணைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. சென்னை எனக்குப் பிடித்த நகரம். பாந்தமான ஊர்.சென்னையின் பின் மதியப் பொழுதுகள் அழகானவை. பெங்களூரு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன.நெய்வேலி என் சொந்த ஊர்.ஆனால் சென்னை போன்ற நெருக்கத்தை நான் வேறு எங்கும் உணர்ந்ததில்லை. அந்தச் சாலைகளில் , மனிதர்களில் தென்படும் உயிர்ப்பு , சலனம் வேறு எங்கும் பார்த்ததில்லை.

நாவலில் பிரதானமாக வட சென்னை இடம் பெறுகிறது.அதிலும் முக்கியமாக அயனாவரமும் அதைச் சுற்றி உள்ள இடங்களும்.பின் பகுதியில் தாம்பரம், படப்பை , தரமணி, திருவான்மியூர் போன்ற இடங்கள் வருகின்றன.ஆனால் வட சென்னைப் பற்றிச் சொல்லும் போது இருக்கும் உயிர்ப்பு பின்னர் இல்லை.

இந்த நாவலில் நூற்றுக்கணக்கான சிறுகதைகள் கொட்டிக்கிடக்கின்றன. முற்பகுதி ஜெரியின் பால்ய காலம்.அதில் முழுக்க முழுக்க அவனது நண்பர்கள் , சுற்றம் பற்றிய விபரங்கள் தான் தொடர்ந்து இடம் பெறுகின்றன. இன்றைய குழந்தைகள் வளர்ந்து தன் வரலாற்று நாவல் எழுதும் போது இந்தளவுக்கு சுற்றத்தை விவரித்து எழுத இயலுமா என்று தெரியவில்லை.இன்று நமக்கு பக்கத்து வீட்டில் வசிப்பவரின் பெயர் கூட தெரியாது.

ஜெரியின் தமக்கை அவனது பத்தொன்பதாம் வயதில் இறந்துவிடுகிறார்.அந்த மரணம் அவனை வெகுவாக பாதிக்கிறது.அவனது இறை நம்பிக்கையை அசைக்கிறது.அவனுள் ஏதோ ஒன்று அறுந்து போகிறது.அது அவனை எதையும் செய்ய இயலாதவனாக ஆக்கவில்லை.அதே நேரத்தில் ஒரு குழந்தைமையின் குதூகலத்தை அவன் இழக்கிறான்.

இந்த நாவல் இரு வேறு தளங்களில் பயனிக்கிறது.ஒன்று அவனது பால்ய காலம், சுற்றம் , நண்பர்கள், அவர்கள் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள், பொழுதுகள், அங்கே நிகழும் கொண்டாட்டங்கள், பள்ளி, பருவ வயதின் காதல்கள், ஜெரியின் தாய் தந்தையர் , சகோதரர்கள்,அவர்களின் வாழ்க்கை , பின்னர் கல்லூரிக் காலம், திருமணம் , பிரிவு , மறுமணம் , குழந்தைகள் , பணியும் அது சார்ந்த சிக்கல்களும் என்று புற விவரிப்புகளின் வழி செல்லும் கதை.

மற்றொன்று ஜெரியின் மெய்யியல் நாட்டம்.அவன் சிறுவயதில் விவிலியத்தை தீவிரமாக படிக்கிறான்.அவனது தந்தை நல்ல வாசிப்பு உள்ளவர் என்பதால் சிறு வயதிலிருந்தே புத்தகங்கள் வாசிக்கிறான்.தந்தை இடதுசாரி சிந்தனையும் திராவிட இயக்க ஆதரவாளராகவும் இருக்கிறார். தாயார் கிறிஸ்தவர். இருவரும் ஜெரியை பாதிக்கின்றனர்.அவன் கல்லூரி காலத்தில் இடதுசாரி அமைப்பில் இணைந்து போராட்டங்களில் கலந்து கொள்கிறான். அவனது சகோதரியின் மரணத்திற்கு பிறகு கடவுள் மீதான நம்பிக்கையை இழக்கிறான்.ரமணர், ஓஷோ, ஜே.கிருஷ்ணமூர்த்தி, பெளத்த தியானம் என்ற தளங்களில் பயனிக்கிறான்.அவனுக்கு தியானம் கைகூடுகிறது.

ஒரு புறம் இச்சைகள் கொண்ட மனிதன் , மறுபுறம் அவனது ஆன்மிக தேட்டம்.மனிதனால் தன் இச்சைகளை வெல்வது அத்தனை எளிதல்ல என்ற எண்ணம் மறுபடி மறுபடி நாவலில் வருகிறது. ஜெரி நச்சுயியல் படித்து ஆராய்ச்சியில் ஈடுபடுவதால் மிருகங்களின் நடவடிக்கைகளை கொண்டு மனித வாழ்வை கவனிக்கிறான்.அதன் வழி அவன் மனிதனின் ஓழுக்கம் சார்ந்த மதிப்பீடுகள் உண்மையில் எத்தனை பலவீனமானவை என்பதை கண்டடைந்தபடியே இருக்கிறான்.காக்கை, வளர்ப்பு மீன் , பூனை என்று அன்றாட வாழ்வின் எளிய பிராணிகள் அவனுக்கு மிகுந்த உற்சாகத்தையும் புத்துணர்வையும் தருபவையாக இருக்கின்றன.

ஜெரி முழுமையாக வளர்ந்த ஓர் ஆளுமை.அதற்கு முக்கிய காரணம் அவனது தந்தை தான்.அவன் பள்ளிப்பருவத்தில் காதலியை சந்திக்க சைக்கிளில் விரைந்து சென்று மோட்டார் வண்டியில் மோதி காலை முறித்துக் கொள்கிறான்.அவனுடைய தந்தை உடனடியாக பதறி அவனை மருத்துவமனையில் சேர்க்கவில்லை.வீட்டில் உள்ளவர்கள் அளிக்கும் சிகிச்சைகள் பலனின்றி போகவும் அவன் மிகவும் அவதிப்படுவதைப் பார்த்தப் பின்னரும் தான் அவர் அவனை ரயில்வே மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்.அவன் நிதானமாக வந்திருக்க வேண்டும் என்று அவர் எண்ணுகிறார்.அதனால் முதலில் அவனுக்கு உதவ அவர் முற்படவில்லை.

ஐஐடியில் படித்த ஜெரியின் சகோதரனை அடித்து வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார்.பிடிவாதமும் கோபமும் கொண்டவராக இருக்கிறார்.அவரது இந்த ஆளுமைப் பண்பு அவரது குழந்தைகளை தனித்து நிற்பவர்களாக மாற்றுகிறது.அநேகமாக அனைவரும் காதலித்து தங்கள் துணையை தேர்வு செய்கிறார்கள்.அதற்கு வீட்டில் எந்தத் தடையும் இல்லை.அறிவையும் ஒழுக்கத்தையும் தருவது மட்டும் போதுமானது என்று அவனது தந்தை எண்ணுகிறார்.இப்படியான தந்தை தான் பின்னர் மொபட் ஓட்டிச் சென்று லாரியில் அடிபட்டு இறந்து போகிறார்.

இதில் வரும் மெய்யியல் தளத்திற்குள் என்னால் வெகு தூரம் செல்ல இயலவில்லை.நான் ஒரு காலத்தில் ரமணர், விவேகானந்தர் , ஜெயமோகன் வாசித்திருக்கிறேன். ஓ.ரா.ந.கிருஷ்ணன் வழி பெளத்த நூல்கள் அறிமுகமாகி அவற்றையும் வாசித்தேன்.ஆனால் எனக்கு அவை சலிக்க ஆரம்பித்துவிட். எனக்கு வாழ்வை அர்த்தப்படுத்திக் கொள்ள ஆல்பர் காம்யூவும் , தஸ்தாயெவ்ஸ்கியும் போதுமானவர்களாக இருக்கிறார்கள்.

மறைந்த மனித உரிமை ஆர்வலர் கே.பாலகோபால் மார்க்ஸியம் பற்றிச் சொல்லும் போது அதனால் மனிதனை உற்பத்தியாளனாக மட்டுமே பார்க்க முடிந்தது.ஆனால் மனிதன் பிறழக் கூடியவனும் தான்.அதைப்பற்றி மார்க்ஸியம் ஒன்றும் சொல்லவில்லை என்கிறார்.எனக்கு அந்த இடத்தை தஸ்தாயெவ்ஸ்கி ஈடு செய்தார்.எனக்கு சமூக ஓப்பந்தம் பற்றி பேசும் ரூசோ தான் முதன்மையாகத் தெரிகிறார். இருத்தலியம் மீது எனக்கு முன்னர் இருந்த ஈர்ப்பு இப்போது இல்லை.

மனிதன் அமைப்பின் வழி வருபவன்.அவன் தனிப்பட்ட உலகமும் அமைப்பின் வழி நிர்ணயம் பெறுகிறது என்றே நான் எண்ணுகிறேன்.நமது கையறுப்பு நிலை , அச்சம், அர்த்தமின்மை, இருத்தலியக் குழப்பங்கள் இவைகளைப் பற்றி என்ன சொல்ல முடியும்.இதற்கு ரூசோவிடமோ மார்க்ஸிடமோ பதில் இல்லை.இவை குறித்து நீங்கள் தேட வேண்டும் என்றால் மெய்யியல் வழி சில திறப்புகளை அளிக்கலாம்.நான் அதனுள் செல்ல விரும்பவில்லை.

மரபணு சார்ந்து உருவாகி வரும் குணங்கள் பற்றிச் சொல்லும் போது நீயூரோ பிளாஸ்டிசிட்டி போன்றவற்றால் இவற்றை மாற்ற முடியும் என்று நாவலில் ஜெரி சொல்கிறான்.அவை எனக்குப் பிடித்திருந்தன.ஜெரி நச்சுயியல் ஆராய்ச்சி பற்றிச் சொல்லும் இடங்கள் முக்கியமானவை. பொதுவாக தமிழ் நாவல்களில் பணியும் பணி சார்ந்த விஷயங்களும் அதிகம் பேசுப்படுவதில்லை.அவன் தன் வேலை, அங்கே மிருகங்களை ஆராய்ச்சிக்கு பயன்படுத்துதல், அது ஏற்படுத்தும் அறக்குழப்பங்கள் , தன் டாக்டரேட் படிப்புக்காக கடல் கிராமங்களில் தொழிற்சாலைகளால் ஏற்படும் புளோரைட் பாதிப்புகள் பற்றிய ஆய்வுகளை விரிவாக பதிவு செய்திருக்கும் விதம் ஆகியவை முக்கியமானவை.இந்த நாவலின் முக்கிய வெற்றி இதில் பாவனைகள் இல்லை என்பது தான்.ஜெரி தன்னைப் பற்றிய ஒரு பிம்பத்தை  நிலைநிறுத்த போராடவில்லை.அவன் தன்னை பதிவு செய்தபடியே இருக்கிறான்.

மனிதன் வீட்டில் பிறந்து வீட்டில் மடிவதில்லை.அவன் புறத்தே செல்கிறான்.வேலை செய்கிறான்.அங்கே அவனுக்கு விழுமியங்கள் சார்ந்த கேள்விகள் எழும்.நண்பர்கள் அமைவார்கள்.காதல் கைகூடும்.ஒரு மனிதனின் பெரும்பகுதி வாழ்க்கை தொழில் அல்லது பணியால் முடிவு செய்யப்படுகிறது. அதைக் குறித்து பேச நாம் ஏனோ தயங்குகிறோம். இந்த நாவல் அந்த வகையிலும் நல்ல முயற்சி.

வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம் - வி.அமலன் ஸ்டான்லி - தமிழினி


No comments: