கதெ





இமையத்தின் எங் கதெ விநாயகத்துக்கும் கமலாவுக்குமான காதலை பற்றிய நெடுங்கதை.கமலா இரண்டு பெண் குழந்தைகளின் தாய்.கணவனை இழந்தவள்.கணவனை இழந்தபின் விநாயகத்தின் ஊரில் கிளார்க் வேலை பெற்று வருகிறாள்.கமலாவும் விநாயகமும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகிறார்கள்.காதலிக்கிறார்கள்.பேசுகிறார்கள்.முப்பத்து மூன்று வயதான விநாயகம் நாற்பத்தி மூன்று வயது வரை கமலாவுடனான பித்தேறிய காதலில் வாழ்வை கழிக்கிறான்.சட்டென்று அந்த உறவு இறுதியில் முறிகிறது.விநாயகத்தின் ஊரில் அனைவரும் விநாயகத்தை எச்சரிக்கிறார்கள், கேலி செய்கிறார்கள்,கெஞ்சுகிறார்கள்.ஆனால் விநாயகம் சுழலில் சிக்கியவன்.அவன் அதிலிருந்து மீள இயலாமல் தன்னை இழக்கிறான்.திருமணம் செய்து கொள்ளச்சொல்லி பெற்றோரும் தங்கைகளும் கெஞ்சுகிறார்கள்.ஆனால் அவனால் எதையும் தீர்மானமாக செய்ய முடியவில்லை.அவன்  கமலாவின் வீட்டுக்கு செல்வதும் அவளுக்கு உதவிகள் செய்வதும் என்று அவளே உலகமாக வாழ்கிறான்.

இந்த நெடுங்கதையில் மூன்று கேள்விகளைத்தான் விநாயகம் மறுபடி மறுபடி கேட்டுக்கொள்கிறான்.ஒவ்வொரு முறை சண்டையிட்டுக்கொள்ளும் போதும் அவன் முற்றிலும் உருக்குலைகிறான்.உண்ண முடியாமல் உறங்க இயலாமல் சோர்கிறான்.அவளும் அப்படி ஏங்குவாள் என்று நினைத்து அவளை சென்று சந்திக்கும் போது அவள் உண்டு உறங்கி தலையனையை போட்டுக்கொண்டு தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டு இருக்கிறாள்.இதை அவனால் ஏற்கவே இயலவில்லை.அந்த பத்து வருடங்களில் அவள் எப்போதும் அவனிடம் உருகுவதில்லை.காதலின் பரவசத்தில் அவனுடன் உரையாடுவதில்லை.எப்போதும் சமநிலையுடன் இருக்கிறாள்.அவள் தண்னென்று இருக்கிறாள்.அவள் சிதறுவதே இல்லை.பித்தேறி அலைவதில்லை.இதைத்தான் முக்கியமாக விநாயகத்தால் புரிந்துகொள்ளவே இயலவில்லை.ஏன் அவள் அவனின் இருப்புக்காக ஏங்கவில்லை.அதே நேரத்தில் அவனிடம் வெறுப்பையும் அவள் காட்டுவதில்லை.வந்தாலும் சரி , சென்றாலும் சரி என்று இருக்கிறாள்.அதுதான் எப்போதும் விநாயகத்தை எரிச்சலூட்டுகிறது.

இரண்டாவது தன்னால் ஏன் அந்த உறவிலிருந்து விலக முடியவில்லை.மூன்றாவது அவள் ஏன் கடலூர் சென்ற பின் ஏன் மேலதிகாரியுடன் மட்டும் தங்கமே என்று குறுஞ்செய்தி அனுப்பினாள்.அவனிடம் மட்டுமே ஏன் உருகினாள்.அவனைப் போய்  எப்படி தேர்தெடுத்தாள்.எதற்காக தேர்தெடுத்தாள்.அவனுக்கு இறுதிவரை இந்த மூன்று கேள்விகளுக்கும் பதில் கிடைக்கவில்லை.ஒரு உறவில் எதிர்தரப்பின் ஆளுமை நம் உரையாடலில் முக்கிய பங்கு வகிக்கிறது.ஆனால் அதே நேரத்தில் நம்முடைய ஆளுமையும் முக்கியமானது தான்.விநாயகம் கமலாவின் காலில் விழுந்து கிடக்கிறான்.அவளின் சொல், உடல் , உத்தரவுகள்,சிரிப்பு அனைத்துமே அவனை சுழலில் சிக்க வைக்கிறது.முதல் முறை அவளை எஸ்டிடி பூத்தில் பார்த்ததை பற்றி சொல்லும் போது நல்ல பாம்பு போல வந்தாள் என்கிறான்.இறுதிவரை அந்த மயக்கத்திலிருந்து அவனால் வெளிவர முடியவில்லை.

ஏன் அவள் காதலை வெளிப்படுத்தாதவளாக ,தளும்பாமல்  இருக்கிறாள்.பெண்கள் காதலில் எந்தளவு Verbose ஆக இருக்கிறார்கள்.கமலா விநாயகத்தால் தன்னிடமிருந்து விலக முடியாது என்பதை உணர்கிறாள்.  எப்படியும் அவன் தன்னைத் தேடி வருவான் என்பதில் உறுதியாக இருக்கிறாள்.அவளின் தங்கைகள் அவளை திட்டியதை நினைத்து வருந்தாமல் இருக்கிறாள்.இதை அவள்கள் முன்னரே செய்திருக்கலாம் என்று மட்டும் சொல்கிறாள்.அவளுக்கு விநாயகத்தின் பத்து வருட வாழ்வை முழுங்கி விட்டதில் எந்த குற்றவுணர்வும் இல்லை.ஆனால் அதே கமலா தன் மேலதிகாரியிடம் தங்கமே என்று ஜொள்ளு விடுகிறாள்.இதையும் விநாயகத்தால் புரிந்துகொள்ள முடியவில்லை.பணத்துக்காக அவள் அப்படி செய்தாள் என்று கூட அவனால் ஏற்க முடியவில்லை.ஏனேனில் அவளிடம் நிறையவே பணமும் இருக்கிறது.அந்த வேலை இல்லாவிட்டாலும் அவளுக்கு சிக்கல் இல்லை.தன் மேலதிகாரியுடனான உறவால் அதிகாரத்தை சுவைக்க முடியம் என்பதால் அதை செய்தாளா.விநாயகம் அதை நோக்கி செல்லவில்லை.

தன் காலில் சுருண்டு கிடப்பவனை ஏன் கமலா அவமதித்த படியே இருக்கிறாள்.ஏன் அவனை சமமாக மதிப்பதில்லை.ஏனேனில் அதுவே அந்த உறவின் அச்சாணி.அந்த அச்சாணியில்தான் அந்த உறவு சுழல்கிறது.எப்போது அவள் அவனுக்காக உருகுகிறாளோ அப்போது அந்த உறவின் பித்திலிருந்து விநாயகம் தரையிறங்கி விடுவான்.அந்த ஈர்ப்பு போய்விடும்.எதை அவன் விரும்புகிறானோ எதற்காக ஏங்குகிறானோ அதை தராமல் இருப்பதே உறவை தொடரச் செய்யும்.மேலதிகாரியுடனான உறவில் அவள் ஏதோ ஒரு கட்டத்திற்கு பிறகு அப்படி நடந்து கொள்ளலாம்.அல்லது தன் மேலதிகாரியிடம் உருகுபவளாகவே இருக்கலாம்.அது அந்த உறவை தொடர பயன்படலாம்.இதெல்லாம் யாரும் தீர்மானித்து செய்வதில்லை.அது நிகழ்கிறது.அவ்வளவுதான்.

ஏன் விநாயகத்தால் அந்த உறவிலிருந்து இறுதிவரை வெளிவர முடியவில்லை.அவனுக்கானது அவனுக்கு கிடைக்கவில்லை.அவனின் சுய மதிப்பு , தன்னைப்பற்றிய அவனின் பிம்பம் அவளின் பிடியில் இருக்கிறது.அவள் அதை அளித்துவிட்டால் அந்த உறவு முடிந்துவிடும்.திரை விழுந்துவிடும்.ஈர்ப்பு குறைந்துவிடும்.அவள் மண்ணில் நடப்பவளாக , மலம் கழிப்பவளாக,அக்குளில் நாற்றம் எடுப்பவளாக மாறிவிடுவாள்.அதை தராத வரை அவனுக்கு விடியல் இல்லை.

அவள் அவனை சுரண்டவில்லை.ஆனால் உணர்வு ரீதியில் அவளின் அங்கீகாரத்துக்காக சார்ந்து இருக்கும் படி செய்து விடுகிறாள்.உணர்வு ரீதியான சார்பு.அவன் அவளின் ஆடி.அது உணர்வு ரீதியலான ஒர் சுழுற்சி.நல்ல பாம்பாக அவள் சுருண்டு இருக்கிறாள்.அவன் எவ்வளவு ஒடினாலும் அந்த வட்டத்தில் ஒட வேண்டியதுதான்.அதற்கு மேல் அவனுக்கு மீட்சி இல்லை.அவனின் ஆன்மாவும் உடலும் அவளுள் சுருண்டு இருக்கிறது.அவளை கொலை செய்ய செல்பவன் அது இயலாது  என்று அறிந்து சட்டென்று வெளியில் வருகிறான்.அவன் மீள்கிறான்.அவளின் பிடியிலிருந்து அவன் விலகுகிறான்.அவள் எளிய மனுஷி ஆகிறாள்.ஆணின் அகங்காரத்தை நிறைவு செய்யும் பெண் அவன் பார்வையில் புண்ணியவதி ஆகிறாள்.அகங்காரத்தை சிதறடிப்பவள் சூனியக்காரி ஆகிறாள்.

விநாயகத்துக்கு கமலாவின் மேல் வெறுப்பு வருவதும் அவளை கொலை செய்ய முடிவு எடுப்பதும் அப்போது அவனுக்கு இளமை திரும்புவதும் மகிழ்வதும் கதையில் நன்றாக வந்திருக்கிறது.வட்டார வழக்கில் தன்மையில் சொல்லப்பட்டிருக்கிறது கதை.

எங் கதே - இமையம் - க்ரியா பதிப்பகம்.






No comments: