செவ்வியல் அரசியல் பொருளாதாரம்


பியரி - ஜோசப் பிரெளதோன் (Pierry - Joseph Proudhon)


ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை என்ற செவ்வியல் அரசியல் பொருளாதாரம் பற்றிய எஸ்.நீலகண்டன் எழுதியுள்ள புத்தகம் மிகவும் நன்றாக இருக்கிறது.தமிழ் இந்து இதழில் நேற்று (04-11-2017) வந்த தலையங்கத்தில் பொருளாதார நூல்கள் தமிழில் இல்லை என்று எழுதியிருந்தார்கள்.இது போன்ற நூல்கள் வரலாம் என்பதையும் சேர்த்திருக்கலாம்.

ஆடம் ஸ்மித்தில் தொடங்கி இங்கிலாந்தின் தொழிற் புரட்சியை விளக்கி அதைத் தொடர்ந்து பல்வேறு முக்கியமான பொருளாதார சிந்தனையாளர்களை பற்றி எழுதியிருக்கிறார்.ஆடம் ஸ்மித் , ரிக்கார்டோ மற்றும் கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் பொருளாதார கொள்கைகளை சிறப்பாக விளக்கியுள்ளார்.சோஷயில சிந்தனையாளர்கள் பற்றி ஒர் அத்தியாத்தில் எழுதியுள்ளார்.முக்கியமாக இங்கிலாந்தில் தொடங்கிய தொழிற் புரட்சி,முடியாட்சிக்கு எதிராக உருவான பிரெஞ்ச் கிளர்ச்சி ஆகியவற்றை பற்றிய ஒரு சித்திரத்தை அளித்து அது எப்படி இந்த சிந்தனையாளர்களை பாதித்து என்பது பற்றியும் சொல்லியிருக்கிறார்.இந்த நூலை படித்த போது மனிதனின் தீமையின் மீது அணைத்து பொருளாதார சிந்தனையாளர்களுக்கும் மிகுதியான நம்பிக்கை இருந்ததை அறிய முடிகிறது!

ஆடம் ஸ்மித்திலிருந்து தொடங்கி அனைவருமே மனிதனின் தீமை குறித்து தீவிரமாக சிந்தித்திருக்கிறார்கள்.ஒரு வகையில் இந்த பொருளாதார கொள்கைகளே மனிதனின் தீமையின் அடிப்படையில்தான் உருவாகியிருக்கிறது என்று தோன்றுகிறது.ஆடம் ஸ்மித்தின் எண்ணம் அயன் ரான்ட் வரை வருகிறது! மனிதனின் தீமை குறித்த மால்தஸின் கருத்து டார்வினின் கொள்கைகளுக்கு வழிவகுத்தது என்கிறார் நீலகண்டன்.அது வரை ஒரு தனிமனித பார்வையிலிருந்த பொருளாதார எண்ணங்களை மார்க்ஸ் ஒரு வரலாற்று பார்வையில் வைத்து முதலாளித்துவம் ஒரு வரலாற்று நிகழ்வு என்று சொல்லியது பெரும் பாய்ச்சல் என்று தோன்றுகிறது.மார்க்ஸியம் ஏன் கவரக்கூடியதாக இருக்கிறது என்றால் அதுதான் சமூகத்தை ஒரு சோதனைக்கூடக் கருவி போல மாற்றுகிறது.அது ஒட்டு மொத்தமாக மனித வரலாற்றையே உங்கள் உள்ளங்கைக்குள் கொண்டு வந்து விட முடியும் என்ற பிரமையை ஏற்படுத்துகிறது.

எஸ்.நீலகண்டன் இந்த நூலை மிக நேர்த்தியான மொழியில் எழுதியிருக்கிறார்.அவர் எம்.ஐ.டி.எஸ்ஸில் இயக்குனராக இருந்தவர்.அநேகமாக அவர் ஆங்கிலத்தில்தான் எழுதியும் வாசித்தும் இருப்பார்.அவர் தமிழில் இத்தனை சரளமாக எழுதியிருப்பது பெரிய விஷயம்.அதற்காக அவர் செலுத்தியிருக்கும் உழைப்பு வணக்கிற்குரியது. இது போன்ற அறிவுத்துறை சார்ந்த நூல்கள் தமிழில் வருவது மிகவும் அரிது.ஒரு துறையின் வல்லுனர் அதை எழுதுவது அதனினும் அரிது.பொதுவாக துறை வல்லுனர்களுக்கு தமிழ் அறிவுச்சூழல் பற்றிய அறிமுகம் இருக்காது.அதனால் அவர்கள் தமிழில் தங்களின் அறிவுத்துறையின் எண்ணங்களை தொகுத்து வெளியீட வேண்டும் என்று தோன்றுவது அநேகமாக சாத்தியமில்லை.ஆனால் துறை வல்லுனர்கள் அடைந்த அறிவை தமிழுக்கு வழங்குவதற்கு பதிப்பகங்கள் அவர்களை தொடர்புகொண்டு அதை முன்னெடுக்க வேண்டும்.தமிழில் அவர்களால் எழுத முடியவில்லை என்றால் அவர்களை ஆங்கிலத்தில் எழுதச்செய்து தமிழில் மொழிபெயர்த்து வெளியிடலாம்.இதைச் செய்வது அத்தனை எளிதல்ல.எஸ்.நீலகண்டன் பற்றிய அறிமுக குறிப்பில் 2006யில் ஆற்று மணல் முழுதும் சுரண்டப்பட்டு நிலத்தடி நீரே கீழிறங்கிவிட்டதால் , பழ மரங்களை வெட்டி , தரிசு நிலமாக்கி , அங்கு ஆட்டு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார் என்று இருக்கிறது.இது சட்டென்று அவரின் ஆளுமை பற்றிய சித்திரத்தை உருவாக்குகிறது.

மனித உழைப்புதான் உபரியாகிறது.அதுதான் லாபத்தை தருகிறது என்று மார்க்ஸ் நிறுவுகிறார்.ஆனால் மனித உழைப்பிற்கு பதிலாக இயந்திரங்களை கொண்டு உபரியை முதலீட்டாளர்கள் செய்கிறார்கள்.அப்போதும் உபரி உருவாகிறது.ஆனால் அந்த உபரி லாபம் ஆவதில்லை,ஏனேனில் அந்த பண்டத்தை வாங்க மனிதனிடம் காசு இல்லை.ஏனேனில் அவனுக்கு வேலை இல்லை.இதைப்பற்றி மார்க்ஸ் எழுதியிருப்பதை நீலகண்டன் சுட்டிக்காட்டுகிறார்.

இன்றைய சூழலில் கச்சாப்பொருளை ஒரு தொழிற்சாலைக்கு கொண்டுவந்து கிடங்கில் வைத்தபின் அங்கிருந்து அது பண்டமாக வெளியே வரும் வரை அணைத்தையும் இயந்திரம் செய்யும் காலம் வந்துவிட்டது.ஆனால் இப்படி எல்லா துறைகளிலும் மனித உழைப்பை இயந்திரம் எடுத்துக்கொள்ளும் என்றால் அந்த பண்டத்தையும் சேவையையும் பெற மனிதனிடம் பணம் இருக்காது.அப்போது அந்த பண்டங்களும் சேவைகளும் லாபம் தராது.ஒட்டுமொத்தமாக ஒரு மந்த நிலை உருவாகும்.நாம் அதை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது.மிக முக்கியமான புத்தகம்.

ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை : செவ்வியல் அரசியல் பொருளாதாரம் - எஸ்.நீலகண்டன் - காலச்சுவடு வெளியீடு.

No comments: