திமித்ரி


சபரிநாதன் கபாடபுரம் இணைய இதழில் எழுதியுள்ள தஸ்தாயெவ்ஸ்கியின் நிலவறை குறிப்புகள் குறுநாவல் பற்றிய கட்டுரை வாசித்தேன்.இத்தனை சிக்கலான மொழி இந்தக் கட்டுரைக்கு தேவையற்றது என்று தோன்றியது.இருத்தல் சாராம்சத்திற்கு முந்தையது என்பதும் சாராம்சம் இருத்தலுக்கு முந்தையது என்பதும் எப்போதும் இருப்பவை.சார்த்தர் சொல்வது போல மனிதன் சுதந்திரமானவன் என்பதில் எந்தளவு சுதந்திரமானவன் என்பது எப்போதும் விவாதத்திற்குரியது.அமைப்பிலிருந்து விலிகிச்செல்லும் பெரும்பாலான முடிவுகளும் அமைப்பில் இருப்பவையே.தர்க்க ரீதியில் விளக்க முடியாத முடிவுகளை மனிதன் எப்போதும் எடுக்கிறான்.அப்படிப்பட்ட முடிவுகளை அதிகம் எடுப்பவர்களை உளவியல் ஏதேனும் ஒரு ஆளுமைச்சிக்கல் எனும் பெட்டியில் போட்டுவிடும்.ஆனால் அவை மனிதன் சுதந்திரமானவன் என்பதையும் அவனது Free will அத்தனை எளிதில் பகுக்க முடியாததாக இருக்கிறது என்பதையும் எப்போதும் சொல்கிறது.அதனால் கருத்தியல் கொண்டு வெள்ளைத்தாளில் உருவாக்கும் உலகம் சாத்தியமற்றது என்பது தஸ்தாவெய்ஸ்கியின் நாவல்களின் முக்கிய விஷயம்.அது மிகப்பெரிய அழிவுகளை உருவாக்கும் என்பதை அவர் அறிந்தி்ருந்தார்.ஏனேனில் அவர் மனிதர்களை அறிந்திருந்தார்.பீடிக்கப்பட்டவர்கள் அந்த வகையில் முக்கியமான நாவல்.சபரிநாதன் முன்வைக்கும் சுவிசேஷத்தின் வரிகள் போல மனுஷகுமாரனுக்கு எப்போதும் தலைசாய்க்க இடமில்லை.

பிறழ்வு இயல்பானது.தஸ்தாவெய்ஸ்கியின் இரண்டாவது நாவலான டபுள் நாவலிலேயே இதை எழுதியிருப்பார்.ஒருவகையில் அந்த நாயகன் தான் இவான் தன்னை போன்ற சாத்தானுடன் பேசும் கருவுக்கான முன்னோடி.தஸ்தாவெய்ஸ்கி எப்போதும் நம்மை கவர்வதற்கான முக்கியமான காரணம் அவரது நாவல்களின் ஒலிக்கும் பல குரல்கள்.அத்தனை ஆவேசத்துடன் மூர்க்கத்துடன் அத்தனை குரல்களை ஒருவரால் எழுத முடிந்திருக்கிறது என்பது ஆச்சரியமானது.

எனக்கு தஸ்தாவெய்ஸ்கி பற்றி எப்போதும் உவகை அளிக்கும் விஷயம் , எப்படி அவரால் இன்றைய இளைஞனின் சிக்கல்களையும் நூற்றியைம்பது வருடங்களுக்கு முன்னே எழுத முடிந்தது என்பது தான்.எப்படி அந்த நாவல்கள் இன்னும் அதே புதுமையுடன் இருக்கின்றன.அந்த கதாபாத்திரங்களின் கேள்விகளும் கஷ்டங்களும் நம் மனதிற்கு எப்படி அத்தனை நெருக்கமானதாக இருக்கினறன.அவரது நாவல்களில் கரமசோவ் சகோதர்களில் வரும் திமித்ரி என் நேசத்திற்குரியவன்.அவன் அல்யோஷாவை சிறையில் இருக்கும் போது சந்திப்பான்.அப்போது வாழ்க்கை எல்லா இடங்களிலும் வாழ்க்கையே.(Life is Life everywhere) என்பான்.எத்தனை அற்புதமான வாக்கியம்.அவன் அத்தனை ஆவேசத்துடன் குருஷன்காவிற்காக போராடுவது உண்மையில் வாழ்வின் மீதான மிகப்பெரிய பற்று.எனக்கு அந்த நாவலை படிக்கும் போது 29 வயது.திமித்ரிக்கும் அப்போது நாவலில் 29வயது.எனக்கு வயதாகிவிட்டது.ஆனால் திமித்ரிக்கு இப்போதும் 29 வயதுதான்.எப்போதும் 29வயதுதான்.

அவரின் அநேக நாவல்களின் முக்கிய கதாபாத்திரங்கள் இளைஞர்கள்.பத்தொன்பதிலிருந்து (The Adolescent) இருபத்தியொன்பது வயது (கரமசோவ் சகோதரர்கள்) வரை உள்ளவர்கள்.இன்னும் நூறு வருடங்கள் கழித்து கூட அவரின் நாவல்கள் பற்றிய கட்டுரைகள் வந்து கொண்டே இருக்கும்.எப்போதும் அதை எழுதுபவர்களில் பெரும்பாண்மையினர் எழுதும் போது 30 வயதுக்குள் தான் இருப்பார்கள்.

No comments: