உதவி


வடபழனி முருகன் கோயில் நிறுத்தத்தில் பேருந்தில் ஏறினேன்.டிப்போ சென்றே ஏறியிருக்கலாம் என்று தோன்றியது.பேருந்தில் நிறைய கூட்டம் என்று சொல்ல முடியாது.நிற்பதற்கு இடம் இருந்தது.நடத்துனரிடம் பாம்குரோவ் ஹோட்டல் ஸ்டாப் என்று சொல்லி டிக்கேட் வாங்கினேன்.என் அருகில் நின்றவன் டிக்கேட் வாங்குவதற்காக கம்பியின் இடுக்கில் இருந்த கையை எடுத்து சட்டை ஜோபிக்குள் விரல்களை விட்டான்.அப்போது தான் அவன் கையில் இருந்த புத்தகத்தை பார்த்தேன்.செர்கய் ஐஸன்ஸடீன் எழுதிய ஃபிலிம் சென்ஸ் என்ற நூல்.அவனது ஒரு தோள் பட்டையில் சிறிய கேமிரா பை தொங்கிக் கொண்டிருந்தது.அண்ணா நூலகத்தில் அந்த நூலின் சில பகுதிகளை வாசித்திருக்கிறேன்.இயற்பியல் புத்தகம் போல இருந்தது.இன்று நாம் பார்க்கும் சினிமாக்களில் அநேகமாக அவர் முன்வைத்த படத்தொகுப்பு பாணியின் தாக்கம்தான் இருக்கிறது என்று தோன்றுகிறது.காட்சி என்பது ஷாட்களின் தொகுப்பு என்று எண்ணம் எல்லோருக்கும் உள்ளது.இன்று இருவர் பேச வேண்டும் என்றால் மாறி மாறி ஒஎஸ்எஸ் ஷாட் எடுத்து விட்டு தேவைப்பட்டால் ஒரு அண்மைக்காட்சியும் எடுத்துவிட்டால் அடுத்த காட்சிக்கு நகர்ந்துவிடலாம்.இந்தக் காட்சியை இந்த இயக்குனர்தான் எடுத்திருப்பார் என்பதற்கான எந்த தடயமும் பெரும்பாலான திரைப்படங்களில் இருப்பதில்லை.சுடும் வெயிலில் உருகும் தார் போல உக்கிரமான ஒரு உணர்வை அதிக வெட்டுகள் இல்லாத ஒரு காட்சியால் கொடுத்துவிட முடியும்.அதிக வெட்டுகள் நம்மை சோர்வடைய வைக்கின்றன.மணி கெளல் இயக்கிய திரைப்படங்களில் காட்சிகளில் கிட்டதட்ட வெட்டுகளே இருக்காது.அவர் ப்ரெஸ்ஸோனின் தாக்கத்தில் அப்படியான படங்களை எடுத்தார்.நகர்வு இல்லாத போது அங்கே நேரம் உறைகிறது.நேரம் உறையும் போது நாம் காட்சியிலிருந்து அந்நியமாகிறோம்.அந்நியமாகும் போது நாம் படத்தை பார்ப்பதில்லை.ஆராய்கிறோம்.பரிசீலிக்கிறோம்.ஆனால் நாம் மகிழ்ச்சி என்று சொல்லும் எல்லாமே நம்மை மறக்கும் போது பெறுவது தானே.மணி கெளல் பாணி திரைப்படங்கள் அடிப்படையில் அப்படி நம்மை மறந்து திரைப்படத்தை பார்ப்பதை அனுமதிக்க மறுக்கின்றன.இந்த வகைமையை ஒரு மதம் போல பின்பற்றி எடுக்கப்படும் திரைப்படங்களும் அதிக சோர்வை ஏற்படுத்துகின்றன.ஆனால் தார்க்கோவ்ஸ்கியின் படங்களை பார்க்கும் போது நாம் கனிகிறோம்.

பேருந்து பவர் ஹவுஸ் நிறுத்தத்தில் நின்றது. நீல நிறத்தில் நின்றிருந்தார் அம்பேத்கர்.இங்கே பக்கத்தில் சப் ஸ்டேஷன் இருக்க வேண்டும்.நான் பார்த்ததில்லை.அம்பேத்கர்தான் உண்மையான பவர் ஹவுஸ்.அவர்தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பெரு நகரங்களும் தொழிற்சாலைகளும் உண்மையான விடுதலையை அளிக்கும் என்பதை உணர்ந்திருந்தார்.காந்தி கிராம சுய ராஜ்ஜியம் பேசினார். ஆனால் அம்பேத்கர் முன்வைத்த பெருநகரங்கள் இன்று அதீத மக்கள் தொகை நெருக்கடியால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.இதோ இந்தப் பேருந்தில் கூட இட நெருக்கடி அதிகமாக இருக்கிறது.தமிழ்நாட்டில், சென்னையில் எத்தனை பேருக்கு ஒரு பஸ் என்று தெரியவில்லை.அடுத்த ஐந்து ஆண்டுகளில் சென்னை பெங்களூர் போன்ற ஊர்கள் எப்படி இருக்கும் என்பதை கற்பனை கூட செய்ய முடியவில்லை.மாலை நேரத்தில் ஏன் அதிக பேருந்துகள் இயக்கப்படுவதில்லை.ஜன்னலுக்கு வெளியே ஒன்பது பேர் அமர்ந்து செல்லக்கூடிய இன்னோவா காரில் ஒருவன் மட்டும் அலுவலகம் முடிந்து சென்று கொண்டிருக்கிறான்.இவர்களை போன்றவர்களிடம் அதிக வரி வசூல் செய்யப்பட வேண்டும்.இவர்கள் சாலையின் பாதியை ஆக்கிரமித்து கொள்கிறார்கள்.பள்ளி மாணவர்கள் நிறைய ஏறினார்கள்.நிற்பதற்கே சிரமமாக இருந்தது.

பேருந்து வள்ளுவர் கோட்டம் சென்ற போது கொஞ்சம் கூட்டம் குறைந்தது.மறுபடியும் முன்பு போல செளகரியமாக நிற்க முடிந்தது.என் அருகில் ஐஸன்ஸடீனின் புத்தகத்தை வைத்திருந்தவனை பார்த்து புன்னகைத்தேன்.அவனும் புன்னகைத்தான்.அவன் அநேகமாக திரைத்துறையில் உதவி இயக்குனராக இருக்கலாம் என்று தோன்றியது.அல்லது ஏதேனும் திரைப்படக் கல்லூரியில் ஆசிரியராக இருக்கலாம் அல்லது மாணவனாக கூட இருக்கலாம்.எல்லா கதாபாத்திரங்களுக்கும் அவன் முகம் பொருந்தியது.வலுவான தோள்கள்.அநேகமாக தினமும் உடற்பயிற்சி செய்பவனாக இருக்க வேண்டும்.இந்த புத்தகத்தை வாசித்து விட்டீர்களா என்று கேட்டேன்.கொஞ்சம் வாசித்திருக்கிறேன் என்றான்.அவன் ஏதேனும் திரைப்படக் கல்லூரி மாணவனா என்று கேட்டேன்.படத்தொகுப்பாளன் என்று சொன்னான்.ஒரு திரைப்படத்தின் பெயரை சொல்லி அதில் படத்தொகுப்பாளராக பணிபுரிந்ததாக சொன்னான்.அந்தப் படத்தின் டிரெயிலரை இணையத்தில் பார்த்திருந்தேன்.நன்றாகத்தான் இருந்தது.முற்றிலும் புதியவர்கள்.முழு நீளத்திரைப்படத்தின் படத்தொகுப்பாளர் என்கிறீர்கள்,இப்படி ஜன நெருக்கடி நிறைந்த பேருந்தில் பயணம் செய்கிறீர்களே என்று சிரித்தவாறு கேட்டேன்.அவன் ஒன்றும் சொல்லவில்லை.வெறுமன சிரித்தான்.நான் அந்தப் புத்தகத்தை வாசித்திருந்ததை பற்றிச் சொன்னேன்.படத்தொகுப்பு முறைகள் பற்றி எனது எண்ணங்களை சொன்னேன்.தார்க்கோவ்ஸ்கியின் படங்களில் பெரும்பாலும் காட்சிகளை கோர்ப்பதற்கு மட்டுமே படத்தொகுப்பு பயன்படுத்தப் பட்டிருப்பதை பற்றி சொன்னேன்.அவன் கேட்டுக்கொண்டான்.படத்தொகுப்பில் நிறைய வெட்டுகள் இருப்பதை பற்றி கேட்டேன்.அப்படித்தான் வேண்டும் என்று அனைவரும் கேட்கிறார்கள்.அவனுடைய தேர்வை பற்றி கேட்டேன்.அவன் அது இயக்குனரின் முடிவு என்றான்.

பேருந்து பாம்குரோவ் ஹோட்டல் ஸ்டாப்பில் நின்றது.நான் காதர் நவாஸ் கான் சாலையில் இருக்கும் அலுவலகம் சென்று எனது வேலைக்கான உத்தரவு கடிதத்தை பெற வேண்டும். எல்..சிக்கு எதிரே தர்காவுக்கு அருகில் இருக்கும் ஒரு அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியனாக வேலை.மாதம் பன்னிரெண்டாயிரம் சம்பளம்.ஒரு வங்கியின் வாடிக்கையாளர்களின் தகவல்களை பரிசோதித்து தவறுகளை சரி செய்யும் பணி.வேலை.பொல்லாத வேலை.அலுப்பாக இருந்தது.நான் இந்த வேலையில் இன்னும் பத்து வருடங்கள் இருந்து வெளியே வந்தால் அதன்பின் என்ன செய்வது.மறுபடியும் வேறொரு வங்கியின் வாடிக்கையாளர்களின் தகவல்களை பரிசோதிக்கும் வேறோரு வேலைக்கு செல்ல வேண்டும்.பத்து வருடங்கள் கழித்து அந்த வேலையையும் ஒரு மென்பொருளே செய்து விடும்.இங்கு படித்து நகரங்களுக்கு வரும் பட்டதாரிகள் என்ன செய்யப் போகிறார்கள்.உண்மையில் பெரு நகரங்களும் தொழிற்சாலைகளும் வேலைகளும் நமக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றனவா.நான் இறங்கவில்லை.நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்று என் அருகில் இருந்தவனிடம் கேட்டேன்.கடற்கரை என்றான்.நான் உங்களுடன் வரலாமா என்று கேட்டேன்.தாராளமாக வரலாம் என்றான்.என்னுடைய பெயர் வேங்கடன் என்றேன்.தெளபீக் என்றான்.

வாலாஜா சாலையில் பேருந்து சென்ற போது பெரும்பாலான கூட்டம் வடிந்திருந்தது.நாங்கள் அமர்ந்திருந்தோம்.அவன் அந்தப் புத்தகத்தை சிறிது புரட்டினான்.திடீரென்று டிக்கெட் பரிசோதகர் ஏறினார்.நான் பாம்குரோவ் ஹோட்டலுக்குத்தான் டிக்கெட் வாங்கியிருந்தேன்.என்னிடம் இன்னும் இருபது ரூபாய் தான் இருந்தது.நான் தெளபீக்கிடம் புலம்பினேன்.பரிசோதகர் வந்தால் தான் அபராதம் கட்டுவதாக சொன்னான்.பரிசோதகர் வந்த போது விஷயத்தை சொல்லி அபராதம் கட்டினான்.அண்ணா சதுக்கத்திற்கு பேருந்து வளைய முற்பட்ட போது சிக்னல் சிவப்புக்கு மாறியது.அங்கேயே இறங்கினோம்.சிறிது தூரம் நடந்து வந்தோம்.சிவப்பில் இருந்து பச்சைக்கு மாறின விளக்குகள்.குதிரை படைகளும் யானை படைகளும் சீறிப் பாய்ந்தன எதிரிகளை தாக்க.நாங்கள் சப் வே வழியாக கடற்கரைக்கு சென்றோம்.அந்தி.கடலுக்கு சிறிது தொலைவில் அமர்ந்தோம்.தெளபீக் தன் பையிலிருந்து கேமிராவை எடுத்தான்.நான் சில புகைப்படங்களை எடுத்து விட்டு வருகிறேன் என்று சென்றான்.மக்காசோளம் விற்பவரின் தள்ளுவண்டி கடை, பஜ்ஜி கடை, வேர்க்கடலை விற்பவர், அங்கே விளையாடிக் கொண்டிருந்த சில பிள்ளைகள், வெகு தொலைவில் சென்று கொண்டிருந்த மனிதர்களின் உருவம், ஒளி வழிந்து செல்லும் சாலையில் வாகணங்களின் ஒட்டம், பிச்சை எடுத்தவர்கள்,பல வண்ணங்களில் பலூன் இருந்த பலகை,குட்டிப்பெண் மணலில் ஏற்படுத்திய கால்தடம் என்று நிறைய புகைப்படங்களை எடுத்திருந்தான் தெளபீக்.மக்காசோளம் விற்பவரின் கடையில் அந்த தீப்பொறிகள் அந்தி வெளிச்சத்தில் புகைப்படத்தில் நன்றாக வந்திருந்தது.அவர் புகைப்படத்தை பார்த்த விதம் நாங்கள் வேடிக்கைக்கு அல்ல என்பது போல இருந்தது.பலூன்களின் வெவ்வேறு வண்ணங்களும் ஒளி கட்டுப்படுத்தப்பட்ட விதமும் அழகாக இருந்தது.நன்றாக இருக்கிறது என்றேன்.நன்றி என்றான் தெளபீக்.எனக்கு அலைபேசியில் அழைப்புகள் வந்து கொண்டே இருந்தது.நான் எடுக்கவில்லை.இது உங்கள் கேமிராவா என்றேன்.தலையசைத்தான்.இது போன்ற கேமிராக்களை வைத்து இன்று திரைப்படங்கள் கூட எடுக்கிறார்களே என்றேன்.சிரித்தான்.அதன் விலையை கேட்டேன்.ஒரு லட்சம் என்றான்.மாற்று லென்ஸூகள் கூட வைத்திருந்தான்.நீங்கள் யாரிடமாவது படத்தொகுப்பை கற்றுக்கொண்டீர்களா என்று கேட்டேன்.இல்லை எனது சில நண்பர்கள் குறும்படங்கள் எடுத்தார்கள்,நான் புகைப்படங்கள் எடுப்பேன், பிறகு படத்தொகுப்பும் செய்துக் கொடுத்தேன்.அதில் ஒருவன் இப்போது முழு நீளத் திரைப்படம் எடுத்தான்.நான் அதில் வேலை செய்தேன் என்றான்.அவனுக்கு வயது முப்பதுக்குள் தான் இருக்கும் என்று தோன்றியது.

அவன் எடுத்த வேறு சில புகைப்படங்களை பார்த்துகொண்டிருந்தேன்.கேமிராவில் சில கோணங்களை வைத்து வியூ பண்டரில் பார்த்தேன்.அருகில் குழுவாக சென்று கொண்டிருந்தவர்களின் கால்களை மட்டும் எடுத்தேன்.இரண்டு பெண்களும் ஒரு ஆணும்.பின்னே கடற்கரை.தெளபீக்கிடம் கேமிராவை கொடுத்துவிட்டேன்.அவனைப் பற்றி கேட்டேன்.கெமிக்கல் இன்ஜினியரிங் முடித்து விட்டு இங்கே ஒரு யூரியா உற்பத்தி நிறுவனத்தில் சிறிது காலம் பனிபுரிந்தேன்.எனக்கு வேலை பிடிக்கவில்லை.விட்டுவிட்டேன்.தந்தை மொத்த மர வியாபாரம் செய்கிறார்.இங்கே சென்னையில் கூட லக்ஷ்மன் ஸ்ருதி சிக்னலுக்கு செல்லும் சாலையில் எங்களின் ஒரு கடை இருக்கிறது என்றான்.எங்கள் அருகில் ஒரு காதல் ஜோடி முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தனர்.அந்தப் பெண் பொக்கென சிரித்தாள்.நான் பார்ப்பதை உணர்ந்து மெளனமானாள்.சட்டென்று நிறைய இருட்டிவிட்டது.அவன் என்னைப் பற்றி ஒன்றுமே கேட்கவில்லை.நான் எழுந்த சென்று கடல் அருகில் நின்றேன்.அலைகள் வந்து வந்து போயின.ஒரே இடத்தில் நீண்ட நேரம் நின்றதில் பள்ளம் விழுந்தது.அடுத்து வந்த பெரிய அலையில் கீழே விழுந்தேன்.தெளபீக் வந்து எழுப்பிவிட்டான்.மேலே சென்று அமர்ந்தேன்.உடை முழுதும் மணல்.உங்களிடம் வண்டி இருக்கிறதா என்று கேட்டேன்.இருக்கிறது.என்ன வண்டி .டியூக் என்றான்.பிறகு எதற்கு அத்தனை ஜன சந்தடி நிறைந்த பேருந்தில் வந்தீர்கள் என்றேன்.நானே இயக்க விரும்பும் படத்திற்கு கதை எழுதிக்கொண்டிருக்கிறேன் என்றான்.வயிற்றில் ஒரு பெரிய ஓட்டை ஏற்பட்டது போல உணர்ந்தேன்.நீங்கள் இயக்கவிருக்கும் படத்தில் என்னை உதவி இயக்குனராக சேர்த்து கொள்வீர்களா என்று உடனே கேட்டேன்.எனது படிப்பு வேலை குறித்துக் கேட்டான்.சொன்னேன்.நாளை எனது அலுவலகம் வாருங்கள் என்றான்.சாலிக்கிராமம் அருணாச்சலம் சாலையில் ஷோபா மண்டபம் அருகே குசால் தாஸ் தெருவில் வலது பக்கம் மூன்றாவது வீடு என்றான்.அவன் என்னிடம் பிறகு அதிகம் பேசவில்லை.எனக்கும் எதுவும் கேட்க தோன்றவில்லை.எழுந்து நடந்தோம்.ஈரம் காய்ந்து உடையிலிருந்து மணல் உதிர்ந்தது.பஜ்ஜி சாப்பிடலாம் என்று சொல்லி இரண்டு பிளேட் வாங்கினான்.அவனே காசும் கொடுத்தான்.தூக்குவாளியில் டீ வைத்திருந்த ஒருவனிடம் இருவருக்கும் டீ வாங்கினான்.மறுபடியும் அண்ணா சதுக்கம் வந்தோம்.


ட்வண்டி ஃபைவ் ஜி பேருந்தில் ஏறினோம்.நிறைய இருக்கைகள் காலியாக இருந்தன.அமர்ந்துகொண்டோம்.நான் தங்கியிருக்கும் இடத்தை பற்றி கேட்டான்.வடபழனி சிவன் கோயிலுக்கு பின்னே இருக்கும் சைதாப்பேட்டை சாலையில் ஒரு அறை எடுத்து தங்கியிருக்கிறேன் என்றேன்.ஏன் வடபழனியில் இருக்கும் ஒரு சாலையின் பெயர் சைதாப்பேட்டை சாலை என்று இருக்கிறது என்றான்.தெரியவில்லை.சைதாப்பேட்டை மேட்டுப்பாளையம் அருகே கூட ஒரு சாலையின் பெயர் கோடம்பாக்கம் சாலை என்று இருக்கிறது என்றேன்.அவன் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.நடத்துனர் வந்து ஃபோன்களை பிறகு நோண்டலாம் , முதலில் எல்லோரும் டிக்கேட் எடுங்கள் என்றார்.அப்போதுதான் என் அலைபேசியை எடுத்துப் பார்த்தேன்.நிறைய அழைப்புகள்.நான் உத்தரவு கடிதத்ததை பெற வேண்டிய அலுவலகத்திலிருந்து வந்திருக்கிறது. இன்னும் ஆயிரம் ரூபாய் அதிகம் தர சம்மதமாக இருப்பதாக குறுஞ்செய்தி ஒன்று சொன்னது.என் எதிரில் ஒரு பெண் பெரிய பூக்கூடையை வைத்துக்கொண்டு அமர்ந்தாள்.தெளபீக் டிக்கேட் வாங்கினான்.பேருந்து நகர்ந்தது.எங்கும் சிலைகள் இருக்கும் சாலை.காந்தி கூட ஒரு ஒரத்தில் இருக்கிறார்.காந்தி ஒரு பெரும் நிகழ்வு இல்லையா.அந்தக் காலத்தில் நிறைய பேர் காந்தி இறந்துபோவார் என்றே நினைக்கவில்லையாம்.காந்தி எங்கு சென்றாலும் அங்கு அவரால் அமைதியை கொண்டுவர முடிந்திருக்கிறது.அதீத பணம் வைத்திருக்கும் ஒருவன் ,அதிகாரமும் பணமும் இருக்கும் ஒருவன் ஐன நெருக்கடி உள்ள ஒரு சாலையில் , பேருந்தில் செல்லும் போது சலிப்படைவானா.அல்லது வேடிக்கை பார்ப்பானா என்று தெரியவில்லை.அது அவன் வர தேவையில்லாத இடம் இல்லையா.தெளபீக்கை பார்த்தேன்.அவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.நான் உறங்கிவிட்டேன்.பவர் ஹவுஸ் அருகே வரும் போது தெளபீக் எழுப்பிவிட்டான்.நீல நிறத்தில் கையில் புத்தகத்துடன் அம்பேத்கரின் சிலை.நான் புன்னகைத்தேன்.அம்பேத்கர் சூட் அணிந்து நிற்பதும் காந்தி வேஷ்டி அணிந்து நிற்பதும் குறியீடு தானே.இன்று காந்தி இருந்திருந்தால் இந்தப் பெருநகரங்களை எப்படி பார்த்திருப்பார்.அம்பேத்கர் இன்றைய பெருநகரங்களைதான் விரும்பினாரா.தெரியவில்லை.அந்தப் பூக்கூடை பெண் அந்த நிறுத்தத்தில் இறங்கினாள்.நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்கினேன்.தெளபீக்கிடம் அடுத்த நாள் வருவதாக சொல்லிச் சென்றேன்.

செல்லும் வழியில் ஒரு நகர் வண்டி கடையில் இரண்டு இட்லி வாங்கி சாப்பிட்டேன்.அறைக்கு சென்ற போது உடனிருப்பவன் உத்தரவு கடிதம் வாங்கிவிட்டாயா என்று கேட்டான்.இல்லை என்றேன்.ஏன் என்றான்.தண்ணீர் குடித்துவிட்டு உடைகளை கழற்றி வீசி லுங்கி அணிந்து பாயை விரித்து படுத்தேன்.உடனே உறங்கிவிட்டேன்.மறுநாள் காலை எழும் போது அறையில் இருப்பவன் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தான்.குடி தண்ணீர் காலியாகிவிட்டது.வாங்கி வைய் என்று சொல்லி விட்டுச் சென்றான்.அவனிடம் காசு கேட்க மறந்துவிட்டேன்.வெளியே வந்து நின்றேன்.கீழே குடியிருப்பில் ஒரு பெண் அவளது குழந்தையை குளிப்பாட்டிக் கொண்டிருந்தாள்.ஒருவன் பல் விளக்கி எச்சிலை தூப்பினான்.அது ஒடும் நீரில் கலந்து சென்றது.வெயில் தூய்மையாக இருந்தது.வராந்தாவிருந்த ஒரு கால்பந்தை எட்டி உதைத்தேன்.அது பறந்து சென்று சுவற்றில் பட்டு படிக்கட்டில் உருண்டு ஒடியது.குழந்தை பந்தை பார்த்து பால் பால் என்று கத்தியது.புன்னகைத்தேன்.உள்ளே சென்று குளித்து உடை மாற்றி கீழே கடையில் டீ குடித்து விட்டு அருணாச்சலம் சாலை நோக்கி சென்றேன்.அருணாச்சலம் சாலைக்கு திரும்பும் இடத்தில் காமராஜர் சிலை இருந்தது.காமராஜர் காலத்தில் தானே தமிழ்நாட்டில் பெரிய தொழிற்சாலைகள் எல்லாம் வந்தது.தெளபீக்கின் ஊரான நெய்வேலியில் அனல்மின் நிலையம் வந்தது கூட அந்தக் காலத்தில்தான்.

ஆனால் காமராஜர் காந்தியின் பக்தர் அல்லவா.ஏன் பக்தர் கடவுளின் போதனைகளை முக்கியமானதாக கருதவில்லை.சிறிது தூரம் கடந்ததும் விஜய்யின் புகைப்படங்களை கொண்ட பெரிய பெரிய பேனர்கள் இருந்தன.அருகில் ஷோபா திருமண மண்டபம்.அதை ஒட்டி சென்ற சாலையின் பெயர் குசால் தாஸ் சாலை.மூன்றாவது வீட்டு மாடிக்கு சென்றேன்.கதவு திறந்திருந்தது.நான்கு தடியன்கள் அமர்ந்து சாராயம் குடித்துக் கொண்டிருந்தார்கள்.தெளபீக் பற்றி விசாரித்தேன்.வந்துவிடுவார்.அமருங்கள் என்றார்கள்.நாளிதழை புரட்டினேன்.இரண்டு மானிட்டர்களை கொண்ட கணிப்பொறி இருந்தது.வெளியே போய் நின்றேன்.தெளபீக் அவனது பைக்கில் வந்து இறங்கினான்.என்னை பார்த்து கை அசைத்தான்.அவன் வந்தவுடன் அதுவரை குடித்துக் கொண்டிருந்தவர்கள் அமைதியாக குடிப்பதை நிறுத்தி இடத்தை சுத்தம் செய்து எழுந்தார்கள்.இன்னொரு முறை இப்படி செய்வதை பார்த்தால் வாப்பாவிடம் சொல்லிவிடுவேன் என்று கத்தினான் தெளபீக்.அவன் இவ்வளவு விரைவாக வருவான் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்று தோன்றியது.

தெளபீக் தன் நாற்காலியில் அமர்ந்தான்.நேர்காணலுக்கு வந்தவனை போல நான் அவனுக்கு எதிரில் அமர்ந்தேன்.தெளபீக் சொன்னான்.வேங்கடன் , இன்னும் படத்திற்கு தயாரிப்பாளர் கிடைக்கவில்லை.ஒரு வேளை என் வாப்பாவே கூட தயாரிக்கலாம்.அது இன்னும் முடிவாகவில்லை.அதுவரை இங்கே செய்வதற்கு ஒன்றுமில்லை.படத்தொகுப்பு செய்வதற்காக நான் இதை அலுவலகமாக மாற்றினேன்.நேற்றே உங்களிடம் சொல்லியிருப்பேன்.ஆனால் நீங்கள் மிகவும் ஏமாற்றமாக உணர்வீர்கள் என்று தோன்றியது என்றான்.நான் உங்களுடன் சேர்ந்து படத்தொகுப்பை கற்றுக் கொள்கிறேன் என்றேன்.அவன் சிறிது நேரம் ஒன்றும் சொல்லவில்லை.இதற்கு முன் படத்தொகுப்பு செய்திருக்கிறீர்களா என்று கேட்டான்.இல்லை என்றேன்.உதவி இயக்குனராக வேண்டும் என்கிறீர்கள்.இப்போது படத்தொகுப்பு செய்ய வேண்டும் என்கிறீர்கள்.நீங்கள் தெளிவாக இல்லை வேங்கடன் என்றான்.நான் அமைதியாக இருந்தேன்.யாரோ இருவர் பேசிக் கொண்டு வரும் சத்தம் கேட்டது.அவன் பணியாற்றிய படத்தின் இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் வந்திருந்தார்கள்.என்னை அவர்களுக்கு அறிமுக படுத்தினான்.ஐஸன்ஸடீனின் நூல்களை எல்லாம் வாசித்திருக்கிறார் என்று சொன்னான்.உதவி இயக்குனராக இருந்து இயக்குனராவது எல்லாம் காலாவதியான விஷயம்.குறும்படங்கள் எடுங்கள்.மினியெச்சர் முழு நீளத் திரைப்படங்களை போன்ற குறும்படங்கள்.திரையிடுங்கள்.தயாரிப்பாளரை பிடியுங்கள்.படம் எடுங்கள் என்றான் வந்த இயக்குனர்.எல்லோரும் சிரித்தார்கள்.தெளபீக் என்னிடம் நாங்கள் வெளியே செல்கிறோம் என்றான்.நான் தலையசைத்து கிளம்ப எத்தனித்தேன்.உங்களுக்கு பிடித்த நிறம் எது என்று கேட்டான் தெளபீக்.மஞ்சள் என்றேன்.சரி.கொஞ்சம் இருங்கள் என்று சொல்லி ஒரு ஸ்பானிஷ் மொழி திரைப்படத்தின் டிவிடியை எடுத்தான்.ப்ரோஜக்ட்டரை போட்டான்.படம் ஆரம்பித்ததும், நீங்கள் இதை பார்த்துக்கொண்டிருங்கள் நாங்கள் வந்துவிடுவோம் என்று சொல்லிச் சென்றான். 

ஏதோ இரண்டு சகோதரர்கள் பற்றிய கதை.சிறு ஊரில் இருக்கிறார்கள்.நகருக்கு குடிபெயர்கிறார்கள்.அவர்களின் தந்தை ஒரு உணவகம் துவங்குகிறார்.குடும்பத்தில் பொருளாதார பிரச்சனைகள் குறைகிறது.அங்கு ஹோட்டலில் பணிபுரியும் ஒரு பெண்ணுடன் தந்தைக்கு தொடர்பு ஏற்படுகிறது.எனக்கு நான் ஏன் இங்கு இருக்கிறேன் என்றே புரியவில்லை.எனக்கு இங்கு வேலை அநேகமாக சாத்தியமில்லை என்று தெரிந்துவிட்டது.இப்போது கிளம்பி போனால் நன்றாக இருக்குமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.பருமனான உடல் கொண்ட ஒருவர் கதவை திறந்து உள்ளே வந்தார்.கதவு தானாக முடிக்கொண்டது.விளக்கை போட்டார்.என்னைப் பார்த்து தெளபீக் இல்லையா என்று கேட்டார்.வெளியே சென்றிருப்பதாக சொன்னேன்.என் அருகில் அமர்ந்து அவரும் படத்தை பார்த்தார்.அந்தப் பெண்ணுடன் தன் கணவர் தொடர்பு வைத்திருப்பதை அறியும் அவரது மனைவி அவரை விட்டு ஊருக்கு செல்கிறார்.இரண்டாவது மகன் தன் தாயுடன் செல்கிறான்.பின்னர் அவன் ஒரு புகைப்பட போட்டி ஒன்றில் வெற்றி பெறும் செய்தியை அவனது தந்தை பார்க்கிறார்.மஞ்சள் நிறத்திற்கும் இந்தப் படத்திற்கும் என்ன சம்மந்தம் என்று புரியவில்லை.உடல் நலிவுற்றிருக்கும் மனைவியை பார்க்க கணவரும் முதல் மகனும் ஊருக்கு வருகிறார்கள்.எளிமையான வாழ்க்கையை தொடங்கிய அதே ஊரில் அந்தப் உறவு முடிகிறது.படம் நிறைவுற்றது.அவர் எழுந்து விளக்குகளை போட்டார்.நீங்கள் யார் என்றார்.தெளபீக்கை பார்க்க வந்தேன் என்றேன்.என் ஊர் பற்றி கேட்டார்.கும்பகோணம் அருகே அம்மாபேட்டை என்ற ஊர் என்றேன்.என் தந்தையின் வேலைப் பற்றி விசாரித்தார்.நெசவுத் தொழில் செய்வதாக சொன்னேன்.என்னைப் பற்றி கேட்டார்.கூறினேன்.அவரின் முகம் தெளபீக்கின் முகம் போல இருந்தது.அவனுடைய தந்தையாக இருக்க வேண்டும்.ஒரு பச்சை நிறக்குவளை நிறைய நீரை எடுத்து முழுதும் குடித்தார். 


தெளபீக் மட்டும் வந்தான்.வாப்பா எப்ப வந்தீங்க என்றான்.என்னை அறிமுகப்படுத்தினான்.சினிமா குறித்து நிறைய தெரிந்து வைத்திருக்கிறார்.கெட்டிக்கார பையன் என்றான் தெளபீக்.நான் அவனது தந்தையை பார்த்து சிரித்தேன்.எனக்கு இதெல்லாம் ஒன்றும் தெரியாது தம்பி, இவனுக்கு இதில் ஆர்வம், சரி என்று விட்டுவிட்டேன் என்றார்.தலையசைத்தேன்.அவன் வேலை செய்திருந்த படத்தின் போஸ்டர்களை பார்த்துக்கொண்டிருந்தேன்.தாடி வைத்து கூலிங் கிளாஸ் அணிந்திருந்த கதாநாயகன், அவன் பின் நான்கு இளைஞர்கள் நான்கு பக்கம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.கதாநாயகனின் தலைக்குப் பின்னால் நான்கு வழிச்சாலை.ஒரு சிவப்பு நிற அம்பாஸிடர் வண்டி.ஒருவன் கையில் விளக்கும் அதை சுற்றி பிரகாசமும் இருந்தது.அற்புத விளக்காக இருக்க வேண்டும்.படத்தின் பெயர் அலாவுதீனும் அற்புத விளக்கும்.படத்தில் வரவிருக்கும் பூதம் போஸ்டரில் இல்லை.சஸ்பென்ஸாக வைத்திருக்கலாம்.போஸ்டர் நன்றாக இருக்கிறது என்றேன்.தெளபீக் சிரித்தான்.நன்றாக வடிவமைத்திருக்கிறார்கள் என்றான்.நான் கிளம்புகிறேன் என்று சொல்லி எழுந்தேன்.தெளபீக் என்னிடம் குறும்படங்கள் எடுக்க முயற்சி செய்யுங்கள்.நான் என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன்.உங்களுக்கு நல்ல திறமை இருக்கிறது என்றான்.ஆமாம்,உங்கள மாதிரி பசங்களுக்கு உதவனும்.உங்கள மாதிரி பசங்களுக்குத்தான் உதவ வேண்டும் என்று சொன்னார் தெளபீக்கின் தந்தை.தெளபீக் சிரித்தான்.தெளபீக் என்னிடம் ஐஸன்ஸடீன், ப்ரெஸ்ஸோன்,குரோசோவா எல்லாம் இருக்கட்டும்.இங்கே தேவை வெற்றி மட்டுமே.அதை நோக்கி பயணியுங்கள் என்றான்.என்னிடம் ஒரு குறும்படத்திற்கான கதை இருக்கிறது தெளபீக்.அப்படியென்றால் எடுத்து வாருங்கள்.நன்றாக இருந்தால் நாங்கள் உதவுகிறோம் என்றான்.உங்களை போன்றவர்களுக்கு உதவுவதன் மூலமே எங்களுக்கான நற்பலன்களை பெற முடியும் என்றார் தெளபீக்கின் தந்தை. நான் ஏன் அங்கு இருக்கிறேன் என்று எனக்கு புரியவில்லை. 

நான் கிளம்பினேன்.வெக்கையாக இருந்தது.அறைக்குச் சென்றேன்.தண்ணீர் இல்லை.கீழே கடைக்கு போயி தண்ணீர் கேனை எடுத்து வந்தேன்.பணம் பிறகு தருவதாக சொன்னேன்.குறும்படத்தின் ஸ்கிரிப்ட்டை எடுத்துப் பார்த்தேன்.தலைகீழாய் வெளவால்கள் இன்னும் என்பதுதான் தலைப்பு.ஒரு வருடம் முன்பு எழுதியது.எட்டு காட்சிகள்.மொத்தமே இருபது ஷாட்டுகள் தான்.பக்கத்து அறையில் இருந்தவனிடம் நூறு ரூபாய் பெற்றுக்கொண்டு காதர் நவாஸ் கான் சாலையில் இருக்கும் அலுவலகம் சென்றேன்.அலுவலகத்தில் பெரிய மீன் தொட்டி இருந்தது.ஒரு பெரிய லேவண்டர் நிற வாஸ்து மீன் நீந்திக் கொண்டிருந்தது.திவாகரின் எண்ணுக்கு அழைத்தேன்.அவர் எடுக்கவில்லை.நான் வந்திருக்கிறேன் என்று குறுஞ்செய்தி அனுப்பினேன். நீண்ட நேரம் வரவேற்பறையில் காத்திருந்தேன்.மறுபடியும் அழைத்தேன்.வெளியே வந்த திவாகர், ஏன் நேற்று வரவில்லை , உங்களுக்கு இனி அந்த வேலை இல்லை என்றார்.நான் உடம்பு சரியில்லை ,அதனால் வர முடியவில்லை என்றேன்.நீங்கள் போகலாம் என்றார்.நான் அப்படியே தலைகுனிந்து நின்றேன்.நீங்கள் ஒழுங்காக வேலைக்கு செல்வீர்கள் என்று எப்படி நம்புவது என்றார்.போவேன் என்று உறுதியாக அவரை பார்த்து சொன்னேன்.சிறிது நேரம் என்னை பார்த்துக்கொண்டே இருந்தவர் அமருங்கள் என்று சொல்லி உள்ளே சென்றார்.வேலைக்கான உத்தரவு கடிதத்தை கொண்டு வந்தார்.வேலை என்பது வேலை மட்டுமல்ல வேங்கடன், அதுவே உங்கள் அடையாளம் என்றார்.உங்கள் உபதேசம் வேண்டாம் என்று சொன்னேன்.அவர் அதன் பின் ஒன்றும் சொல்லவில்லை.கையெழுத்து போடுங்கள், நாளை காலை எட்டு மணிக்கு அலுவலகம் சென்று விடுங்கள் என்றார்.எனக்கு ஒரு உதவி வேண்டும் , எனக்கு ஒரு மாதம் கழித்து கொடுக்கும் சம்பளத்தில் ஆயிர ரூபாயை இப்போது முன்பணமாக தர முடியுமா, என்னிடம் சுத்தமாக பணம் இல்லை என்றேன்.திவாகர் ஒன்றும் சொல்லாமல் இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொடுத்தார்.நன்றி என்றேன்.அவர் உள்ளே சென்று விட்டார்.

கத்திரிக்காய் கொஜ்ஜூடன் சிக்கன் பிரியாணியை குழைத்து சாப்பிட்டேன்.பாம்குரோவ் ஹோட்டல் அருகில் நிறுத்தத்தில் நின்றேன்.எதிரில் ஆப்ரஹாம் என்ற பெயர் பலகை கொண்ட பெரிய வீடு. சாலிக்கிராமம் செல்லும் பேருந்து வந்தது.ஏறினேன்.பேருந்து காலியாக இருந்தது.சாலிக்கிராமம் பேருந்து நிறுத்தம் சென்று வண்டி நின்றபின் நடத்துனர் வந்து தட்டி எழுப்பினார்.இறங்கி தெளபீக் அலுவலகம் சென்றேன். பெரிய பெரிய குடியிருப்புகள்,ஹோட்டல்கள் வரத்தொடங்கிவிட்டன.இந்தச் சாலையின் நிறமே மாறிவிட்டதாக தோன்றியது.ஆனந்த் சினி சர்வீஸ் என்ற பெரிய வேன் நின்று கொண்டிருந்தது.டிரைவர் தூங்கிக்கொண்டிருந்தார்.இது ஒரு பொன் மாலை பொழுது பாடல் இசைத்துக் கொண்டிருந்தது.இங்கே பிரசாத் ரிக்கார்டிங் ஸ்டுடியோவில்தானே இளையராஜா தினமும் வந்து இசையமைக்கிறார்.ஏன் இளையராஜா தனக்கென்று ஒரு ஸ்டுடியோவை உருவாக்கிக் கொள்ளவில்லை.ஒரு வேளை அதன் நிர்வாக பிரச்சனைகள் இசையிலிருக்கும் கவனத்தை திசை திருப்பிவிடும் என்று நினைத்திருக்கலாம்.படிகளில் ஏறி தெளபீக் அலுவலகம் சென்றேன்.தெளபீக்கின் தந்தை மட்டும் அமர்ந்து நாளிதழை வாசித்துக் கொண்டிருந்தார்.உள்ளே வரச் சொன்னார்.என்ன சொல்லுங்கள் என்பது போல பார்த்தார்.தெளபீக்கை பார்க்க வேண்டும் என்றேன்.அவன் ஒரு தயாரிப்பாளரை பார்க்க சென்றிருக்கிறான் என்றார்.அவர் உட்கார சொல்லவில்லை.தண்ணீர் கேட்டேன். கொடுத்தார்.குடித்தேன்.தெளபீக் வருவதற்கு நிறைய நேரம் ஆகுமா என்று கேட்டேன்.தெரியவில்லை என்று நாளிதழை பார்த்தவாறே சொன்னார்.நான் ஐநூறு ரூபாயை எடுத்துக்கொடுத்தேன்.எதற்கு என்றார்.நேற்று உங்கள் மகன் பேருந்தில் எனக்கு டிக்கெட் இல்லாததால் நாநூறு ரூபாய் அபராதம் கட்டினார்.டீ,பஜ்ஜி வாங்கி கொடுத்தார்,வரும் போது அவர்தான் டிக்கெட் எடுத்தார்.அதுதான் என்றேன்.பரவாயில்லை தம்பி வைத்துக் கொள்ளுங்கள்.இது போன்ற உதவிகளை செய்யத்தானே எங்களிடம் பணம் இருக்கிறது என்றார்.உங்கள் மகன் நன்றாக இருக்க வேண்டாம் என்று சொல்லி ஐநூறு ரூபாயை அவரிடம் கொடுத்தேன்.பணத்தை வாங்கிக் கொண்டார்.உங்கள் மகனை அவருடைய பைக்கில் செல்லச் சொல்லுங்கள்,ஏற்கனவே பேருந்துகளில் நிறைய ஜன நெருக்கடி என்று சொல்லி வெளியே வந்தேன்.தென்ன மரம் காற்றில் பலமாக அசைந்தது.காற்று வேர்வையில் பட்டு உடல் ஜில்லென்று ஆனது.படிக்கட்டில் வேகமாக நடந்து கீழே வந்தேன்.அறைக்கு கீழே இருந்த கடையில் தண்ணீருக்கு கொடுக்க வேண்டிய முப்பது ரூபாயை கொடுத்து விட்டு கதவை சாத்தி நன்றாக தூங்கினேன்.

(தளம் இதழில் வெளியான சிறுகதை)
 

No comments: