இலக்கியத்தின் ஊற்று

இன்று பிராமண சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் எழுதுவதில்லை என்று போகன் சங்கர் எழுதியிருந்தார்.இலக்கிய ஆக்கங்கள் அடிப்படையில் பிறழ்வு,சிதைவு மற்ற நெருக்கடிகளால் மட்டுமே உருவாகுகிறது.அல்லது அப்படியான அனுபவங்கள்தான் ஒருவரை அந்த காலகட்டத்திற்கு பிறகு எழுத வைக்கிறது.இந்த சிக்கல்கள் இல்லாதவர்கள் எழுத முடியாது.பிராமண சமூகம் அந்த நெருக்கடிகளை இன்று கடந்து விட்டது என்றுதான் தோன்றுகிறது.ஒவ்வொரு காலகட்டத்திலும் நம் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர்தான் பெரிய அளவில் வழக்குரைஞர் துறையில் பணிபுரிகிறார்கள்.இன்று பிராமண சமூகத்தினரில் பெரும்பாலானோர் வழக்குரைஞர் துறையில் இல்லை.சைதாப்பேட்டை , எழும்பூர் நீதிமன்றங்களுக்கு சென்றால் இளைஞர்களில் பிராமண வழக்குரைஞர்களை காண்பது அரிது.ஒரு சமூகம் அரசியல் சக்தியாக அதிகாரத்தை நோக்கி மேலெழுந்து வரும் போது அந்த சமூகத்தினர் இலக்கியத்தில் ஈடுபடுகிறார்கள்.வழுக்குரைஞர்கள் ஆகிறார்கள்.இவைகளுக்கு இடையில் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது.
இன்று பெருநகரங்களில் பணிபுரியும் பிராமணர்களில் அநேகரின் பாட்டனார் அல்லது தந்தை ஒன்பது மணிக்கு ஆரம்பித்து மாலை ஐந்து மணிக்கு முடியும் வேலையை பெருநகரங்களில் செய்திருக்கிறார்கள்.காலையிலிருந்து மாலைவரை அலுவலகத்திலிருந்து பின்னர் வீடு திரும்பி வார இறுதிகளில் அடுத்த வாரத்திற்கான தயாரிப்புகளை செய்துகொள்வதும்,கலை சார்ந்த துறைகளில் மிக மேலோட்டமாகவோ அல்லது தீவிரமாகவோ தங்களை ஈடுபடுத்திக்கொள்வதுமான நெகிழ்வு தண்மை கொண்ட வாழ்வை அவர்களின் பிள்ளைகள் இன்று பெருநகரங்களில் வாழ்கிறார்கள்.இன்று இடைநிலை சாதிகளில் கூட இரண்டாம் தலைமுறையினர் தங்களுக்கு இடையில் பெரிய தொடர்பு வைத்துக் கொள்வதில்லை.ஆனால் பிராமண சமூகத்தில் அவர்கள் தங்கள் சமூகத்திற்குள் எப்போதும் தொடர்பிலேயேதான் இருக்கிறார்கள்.தங்கள் சாதி சார்ந்த சடங்குகளை செய்கிறார்கள்.சுயசாதியில் திருமணம் செய்து கொள்கிறார்கள்.உலகமயமாக்கல் சூழலில் அலுவலகத்தில் எந்த வித பண்பாட்டு சுமைகளும் இல்லாத ஒற்றை பரிமாண மனிதனாகவும், தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தங்கள் பண்பாட்டு அடையாளங்களை தக்க வைத்துக் கொள்பவர்களாகவும் பிராமணர்கள் தங்களை வெற்றிகரமாக தகவமைத்துக் கொண்டார்கள்.அவர்கள் தங்கள் பண்பாட்டு அடையாளங்களையும் இழக்கவில்லை.இன்றைய உலகமயாமாக்கல் சூழலில் வெற்றி பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள்.இந்த இரட்டை வாழ்க்கை அவர்களின் வாழ்வை நெருக்கடி அற்றதாக மாற்றியிருக்கிறது.அதே நேரத்தில் வாழ்க்கை,சடங்குகள் சார்ந்த ஒரு மெல்லிய கேலியும் அவர்களிடம் இருக்கிறது.அந்த கேலியை தாண்டிய புகார்கள் எதுவும் இன்று அவர்களிடம் இல்லை.முகுந்த் நாகராஜன் கவிதைகளில் நாம் இதைப் பார்க்கிறோம்.
வா.மணிகண்டனின் என்னை கடவுளாக்கிய தவிட்டுக்குருவி பெருநகர வாழ்வின் அவதியை பேசும் கவிதை தொகுப்பு.தன் தனிப்பட்ட அவதியை மானுடம் சார்ந்த அவதியாக அவர் அதில் விரித்திருக்கிறார்.ஒரு எவர்சில்வர் பாத்திரத்தில் வெந்நீர் கொதிப்பது போல பெருநகர வாழ்க்கையின் இரைச்சல் உருவாக்கும் அவதி அந்த தொகுப்பில் இருக்கிறது.ஆனால் இன்று அவர் அந்த அவதியிலிருந்து விலகிவிட்டார்.இந்த பெருநகர வாழ்க்கை சார்ந்த நெருக்கடிகளை அவர் வெற்றிகரமாக கடந்துவிட்டார்.அவர் அதன்பின் கவிதை தொகுப்புகள் வெளியீடவில்லை.ஆனால் அவர் இன்று எழுதும் போதும் ஈரோடு குறித்தும் பவானி குறித்தும் கோபி குறித்தும் தான் அதிகம் எழுதுகிறார்.கவலைப்படுகிறார்.வா.மணிகண்டன் பெங்களூர் வீதிகளில் இருந்தாலும் அவருடைய அக்கறை அவரின் பால்ய கால உலகில் இருக்கிறது.இந்த இடப்பெயர்வு சார்ந்த நெருக்கடிகளும் இன்று பிராமண சமூகத்தினருக்கு இல்லை.ஏனேனில் பெருநகரத்திற்கு வந்து வாழும் முதல் தலைமுறை பிராமணர்கள் இன்று பெரிய அளவில் இல்லை.அவர்களின் தந்தையோ,மாமாவோ,பெரியப்பாவோ முன்பே அங்கு இருந்திருப்பார்.ஆக இந்த இடப்பெயர்வு சார்ந்த கவலைகளும் பெரிய அளவில் அவர்களுக்கு இல்லை.
அபிலாஷ் நாகர்கோயிலை சேர்ந்தவர்.ஆனால் அவரிடம் நாம் நாகர்கோயிலின் வீதிகள் குறித்தோ மனிதர்கள் குறித்தோ நினைவேக்கம் சார்ந்த ஒரு வரியை கூட பார்க்க முடியாது.அவருக்கு இயல்பாகவே பெருநகரங்களும் இயந்திரங்களும் வாகனங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கிறது.அவருக்கு அதுசார்ந்த நெருக்கடிகள் இல்லை.ஆனால் மனித உறவுகள் சார்ந்து , லட்சியவாதமின்மையின் வெறுமை சார்ந்து, அதிகார தளங்களில் நம்மை பொருத்திக் கொள்வது சார்ந்து , பெருநகர வாழ்வின் கலாச்சார செயல்பாடுகள் சார்ந்து கேள்விகளும், விமர்சனங்களும் , ஆச்சரியங்களும் , சிக்கல்களும் அவருக்கு இருக்கிறது.கால்கள் நாவல் போலியோவால் பாதிக்கப்பட்ட பெண் தனிமனுஷியாக இருசக்கர வாகனத்தை கற்றுக் கொள்வதுதான் பிரதானமாக வருகிறது.அவர் அந்த நகர்வை ஒரு coming of age வாக பார்க்கிறார்.ரசிகன் நாவலில் வரும் சாதிக் லட்சியவாதம் தோற்று போன சூழலில் வாழ்கிறான்.எனக்கு பரிச்சயமான அபிலாஷிற்கும் சாதிக் கதாபாத்திரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.ஆனால் இன்று ஒரு அதிகார தளத்தில் தன்னை பொருத்திக் கொள்வது சார்ந்து , மகிழ்ச்சி என்பதன் கருத்து சார்ந்து அவருக்கு சில கேள்விகளும் குழப்பங்களும் இருக்கிறது.அதை சாதிக்குடன் ஒப்பிட்டு பார்க்க முடியும்.இத்தகைய சிக்கல்களும் இன்றைய பிராமண இளைஞர்களுக்கு இல்லை.அவர்கள் ஒரு அதிகார தளத்தில் அடிபடும் போது பின்வாங்கி சாத்தியப்படும் போது முன்னோக்கி பாயும் நெகிழ்வு தன்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.ஏதோ ஒரு வகையில் லட்சியவாதமின்மையின் வெறுமையை , அபத்த வாழ்வின் சிக்கல்களை ,தனிமையை அவர்களால் கலையின் மூலம்(இலக்கியம் அல்ல) கடந்துவிட முடிந்துவிட்டது.அதற்கான கருத்துகளை உருவாக்க வேண்டிய இடத்தில் அவர்கள் இன்று இல்லை.அது அவர்களின் முன்னோர்களால் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
தனிப்பட்ட வாழ்வின் பிறழ்வும் சிதைவும், நம்மை ஒரு அமைப்பில் பொருத்திக் கொள்ள இயலாமல் தவிக்கும் நெருக்கடிகளும்தான் நம்மை எழுத வைக்கிறது.நான் பதினொரு ஆண்டுகளாக வேலை செய்கிறேன்.இன்றும் வேலையில் என்னை பொருத்திக் கொள்வது எனக்கு சிக்கலாகவே இருக்கிறது.ஒரு வகையில் எங்கள் தலைமுறையில் முதல்முறையாக காலை அலுவலகம் சென்று மாலை வீடு திரும்பும் வாழ்வை நான் வாழ்கிறேன்.இது எனக்கு வழங்கப்படவில்லை.அதற்கு என்னை தகவமைத்துக் கொள்திலேயே நான் அதிக மன உரையாடல்களை நிகழ்த்த வேண்டியிருக்கிறது.எனக்கு எப்போதுமே இருக்கும் கேள்வி நாம் ஏன் சும்மா இருக்கக்கூடாது என்பதுதான்.ஏன் வேலைக்கு செல்ல வேண்டும் என்பதுதான் என் சிக்கல்.ஒரு வேளை சென்னை போன்ற பெருநகரத்தில் நல்ல வாடகை கிடைக்கக்கூடிய இரண்டு வீடுகள் எனக்கு இருந்தால் நான் வேலைக்கே சென்றிருக்க மாட்டேன்.இது ஒரு நெருக்கடி.இதை கடக்க சிலவற்றை புரிந்து கொள்ள முயன்றிருக்கிறேன்.என் முப்பது வயதில் பெங்களூரில் தனிமையில் டி.ஆர்.நாகராஜை வாசித்த போதுதான் இங்கே பெருநகரத்தில் குப்பை போடுவதற்கு ஒருவரும் அதை எடுப்பதற்கு ஒருவரும் இருக்கிறார்கள் என்பதே புரிந்தது.குப்பை போடுவர்கள் என்ன சாதியாக இருப்பார்கள், எடுப்பவர்கள் என்ன சாதியாக இருப்பார்கள் , நான் ஏன் சும்மா இருக்க விரும்புகிறேன் என்பது சார்ந்த சில எண்ணங்கள் அப்போதுதான் புலப்பட்டது.
பெரும்பாலும் வேலையும்,காதலும்,திருமணமும், குடும்ப அமைப்பும்,சமூக அமைப்பும் அது சார்ந்த சிக்கல்களும் கேள்விகளும்தான் நம்மை எழுத வைக்கிறது.இதை சார்ந்த எந்த சிக்கலும் இன்றைய பிராமண இளைஞர்களுக்கு இல்லை.சின்னச்சின்ன நெருக்கடிகளை அவர்கள் தங்களுக்கு சாத்தியமான கலைகள் மூலம் கடந்து செல்கிறார்கள்.ஒருவர் எல்லா வகையிலும் செளகரியமாக மகிழ்ச்சியாக இருந்துக்கொண்டு இலக்கிய நூல்களை உருவாக்க முடியுமா.முடியாது என்று தான் நினைக்கிறேன்.


4 comments:

phantom363 said...

Very interesting article. I mentioned this to a internet group that I belong. If there are any worthwhile feedbacks, I will copy paste them here. Thank You.... rajamani

சர்வோத்தமன் said...

Thanks Rajamani...

The Vicious Slumdog said...

ஈங்கு கூறப்பட்டிருப்பது உண்மை எனினும் இதன் புறம்பேயும் பல காரணங்கள் இருக்கின்றன. இந்த யதார்த்தம்-தமிழில் எழுதுவது குறைந்து விட்டது என்ற யதார்த்தம்-பிராமணர்கள் மட்டுமின்றி மற்றும் சில இடைச்சாதியினருக்கும் பொருந்தும். இதற்கான ஒரு முதற்காரணம் மாறிவரும் காலச்சூழலில் நமக்கு அமைந்திருக்கும் கல்வியின் நிலையே.
ஆங்கில மொழியில், அதனை ஒரு ஊடகமாய் பயன்படுத்தித்தான், நாம் பல விஷயங்களையும் இன்று கற்கின்றோம். முதல் வகுப்பு முதலே நாம் நமது சிந்தனையையே ஆங்கிலத்தில் தான் செய்கின்றோம். "பூ பூக்கும் ஓசை" என்பது காதில் விழுந்து அது மனதில் ஆங்கிலம் வழியாகச்சென்று the sound of a flower blossoming என்று மனதில் பதியும் போது தான் அதிலுள்ள கவிதை புரிகிறது. அதற்குள் பாடல் மேலேசென்றுவிட அதன் சங்கீதம் மட்டுமே மனதில் அலைகளை ஏற்படுத்துகிறது. கவிதை கண்டுகொள்ளப்படுவதேயில்லை.

நமது மண்ணினையும் அதன் சுற்றுச்சூழலையும் நிகழ்களமாகக்கொண்டு மனதில் முகிழ்க்கும் ஒரு கருப்பொருள் ஏதோ ஒரு உந்துதலால் கவிதையாக பரிணமிக்கப் பரபரக்கும்போது இயற்கையாக தாய் மொழியில் வந்து விழவேண்டிய வார்த்தைகளும், உருவகங்களும் அவற்றுக்கு இணையாக ஆங்கிலத்தில் synonym களையும் syntax ஐயும் தேடவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகின்றன.

நாம் ஆங்கிலத்திலேயெ சிந்தித்து ஆங்கிலத்திலேயே எண்ணங்களை வெளிப்படுத்தி வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பிராமணர்கள் பெரிதும் புலம் பெயர்ந்து சென்று வாழ்வதால் அவர்களின் மக்கள் இந்த பிரச்சினைக்கு பெரிதும் உள்ளாகிறார்கள். இதனை அவர்கள் நன்கு அறிந்தே இருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் நீரோட்டத்தில் மிதக்கும் துரும்பைப்போல் ஒன்றும் செய்ய முடியாத கையறுநிலையிலிருக்கிறார்கள்.

நன்கு தமிழறிந்த மூத்த குடிமக்கள் (பிராமணர்கள்) இந்த சோகத்துடனே வாழ்ந்து மடிந்தும் போகிறார்கள். காலத்தின் கோலம்.

phantom363 said...

Dear Sarvothaman, I am very happy that 'Vicious Slumdog' has shared the above post, which was his reply to my copy pasting your blogpost to another forum. There is nothing 'vicious' about him. He is a rather gentle, deeply erudite and sane thinking person, whose writings make a lot of sense. :)

By the way, keep up your observations of life and surroundings. Good stuff!