ரோஹித் வெமுலாவின் மரணம்
ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலா ஜனவரியில் தற்கொலை செய்து கொண்டது இன்றும் முக்கிய செய்தியாக இருக்கிறது.ஐதாராபாத் தேசிய பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறையில் ஆராய்ச்சி மாணவராக இருந்த இருபத்தியேழு வயது மட்டுமே நிரம்பிய ரோஹித் வெமுலா மரணமடைந்தது ஓர் துர் சம்பவம்.பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்த தந்தைக்கும் ஒரு தலித் அன்னைக்கும் பிறந்தவர் ரோஹித்.ரோஹித்தின் அன்னை ராதிகா ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்ணால் தத்தெடுக்கப்பட்டார் என்ற செய்தியும் இருக்கிறது.ரோஹித் தலித் பிரிவைச் சேர்ந்தவரா இல்லையா என்பது முக்கிய பிரச்சனை இல்லை.அவர் தன்னை தலித்தாக அடையாளம் கண்டுகொண்டிருக்கிறார்.ரோஹித்தின் இறுதி கடிதத்தை வாசிக்கும் எவருமே அவர் ஆழமான அறிவுத்தேடல் கொண்டவர் என்பதை அறிந்துகொள்ள முடியும்.அத்தகைய கடிதத்தை பாவனைகளோடு எழுத முடியாது.தற்கொலை பாவனைகளால் செய்ய முடிந்த செயலும் இல்லை.தற்கொலை என்பது உடலும் மனமும் தீப்பற்றி எரியும் தருணம்.அல்லது வயிற்றில் ஒரு பெரும் ஓட்டையை உணரும் தருணம்.இரண்டடையும் நானும் உணர்ந்திருக்கிறேன்.ஒரு முறை 2009யில் தற்கொலை பற்றி நினைத்துக்கொண்டே வடபழனியிலிருது நாவலூரில் இருக்கும் என் அலுவலகம் வரை பாதசாரியின் காசி சிறுகதையை வாசித்துக் கொண்டே சென்றேன்.வெறுமைதான் காரணம்.பேருந்திலிருந்து இறங்கும் போது சிறுகதையை வாசித்து முடிந்திருந்தேன்.தற்கொலை எண்ணமும் காணாமால் போய்விட்டது.மற்றது 2014யில்.பெரும்பற்று கொண்டிருந்த பெண் முற்றிலுமாக விலகி சென்ற தருணம்.உடலும் மனமும் தீப்பற்றி எரிந்தது.இனி இந்த வாழ்க்கை சாத்தியமில்லை என்று தோன்றியது.தூக்கிட்டு தற்கொலை செய்வது நிறைய வலிக்கலாம் என்பதால் தூக்க மாத்திரை பற்றி தெரிந்துகொள்ள மடிக்கணிணியை திறந்தேன்.அப்போது பேஸ்புக்கில் கவிஞர் சுகுமாரன் என் அலைபேசி எண்ணைக் கேட்டார்.கொடுத்தேன்.அழைத்தார்.காலச்சுவடு கொண்டுவர இருக்கும் காகித மலர்கள் நாவலுக்கு முன்னுரை எழுத முடியுமா என்று பாருங்கள் என்று சொன்னார்.மன அழுத்தம் அப்படியே இருந்தது.ஆனால் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் போய்விட்டது.அன்று புரசைவாக்கத்தில் ஒரு ஜோசியரை கூட சென்று பார்த்தேன்.உங்கள் வாழ்க்கையில் வாழ்க்கையை தவிர பிற எல்லாமே நன்றாக இருக்கும் என்றார் ஜோசியர்!!

தற்கொலை மிக முக்கியமான தத்துவ பிரச்சனை என்கிறார் ஆல்பர் காம்யூ.முனிசிபாலிட்டி தண்ணீர் விடவில்லை என்பதற்காகவோ உலகமயமாக்கல் நமது பண்பாட்டை சீரழிக்கிறது என்பதற்காகவோ யாரும் தற்கொலை செய்து கொள்வதில்லை.எனக்கு தெரிந்து அவமானம்,நெருங்கிய மனிதரின் மரணம்,பெரும் இழப்பு இது மூன்றும் தான் ஒருவரை மரணம் வரை இட்டுச் செல்லும்.ரோஹித் தற்கொலை செய்து கொண்டதற்கு இழப்பே காரணம்.அவருக்கு தொலைந்து போன பால்ய காலம் இருக்கிறது.அவர் தன் கடிதத்தில் தன் பால்ய காலத்தின் தனிமையை சொல்லியிருக்கிறார்.பால்ய காலத்தை தொலைத்தவர்கள் இளமையில் மகிழ்ச்சியை நோக்கி செல்ல மிகுந்த அவசரம் கொள்வார்கள்.மிக விரைவில் படிப்பை முடித்து , வேலையில் சேர்ந்து , திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள்.அல்லது தங்கள் துறையில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.அவர்கள் இழந்து போன நாட்களை ஈடுசெய்ய விரும்புவார்கள்.ரோஹித்தின் மரணத்திற்கும் அவரின் தொலைந்து போன பால்ய காலத்திற்கும் தொடர்பு உள்ளது.அவர் நிச்சயமாக போராட்டத்தால் தற்கொலை செய்து கொள்ளவில்லை.ஏனேனில் அவரை நிர்வாகத்தால் அவமானப்படுத்த முடியவில்லை.அவரின் மரணத்திற்கு காரணம் அவர் தொலைந்து போய்விட்டார் என்பதே.அவமானப்பட்டவரின் கடிதத்தில் வெறுப்பின் குரல் இருக்கும்.இதில் இருப்பது தொலைந்து போய்விட்டதின் சோர்வும் தனிமையும்.அவர் கார்ல் சாகன் போல ஒரு அறிவியல் எழுத்தாளராக விரும்பியிருக்கிறார்.அவர் கடிதமே அதை அவர் அடைந்திருக்ககூடும் என்பதற்கான சாட்சி. தேசிய பல்கலைகழகத்தில் அறிவியல் துறையில் ஆராய்ச்சி மாணவராக சேரும் ரோஹித் தன் பேஸ்புக் பக்கத்தில் அப்போது விவேகாந்தரின் மேற்கோள்களை பகிர்கிறார். பின்னர் அம்பேத்கர் மாணவர் இயக்கத்தில் இணைகிறார்.அவர் ஏன் இதை செய்கிறார் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.அவர் ஆராய்ச்சி முடித்து சிறப்பான வாழ்வை வாழ்வதை பற்றி சிந்திக்காமல் ஏன் அரசியல் களத்திற்கு செல்கிறார்.இதற்கான பதில் அவர் கடிதத்திலேயே இருக்கிறது.

மனிதன் தன் உடலால்,சாதியால்,பாலினத்தால் அடையாளப்படுத்தப் படுகிறான்.அந்த அடையாள அணி சேர்வுகளிலிருந்து அவனால் விலக முடிவதில்லை.அவன் ஒரு ஓட்டாக, எண்ணாக மாற்றப்படுகிறான்.அப்படி மாற்றப்படுபவன் தன்னை ஒரு இயக்கத்தில் இணைத்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லை.ஆனால், அப்படி அமைப்பில் சென்று தன்னை இணைத்துக் கொள்வதற்கான தேவை பல்கலைகழக சூழலில் நிலவுகிறது என்பதே முக்கியமான விஷயம்.தமிழ்நாட்டை போல அல்லாமல் ஆந்திராவில் கல்லூரிகளில் சாதிய அடையாளம் மிக பெரிய விஷயமாக இருக்கிறது.பெரும்பாலான கல்லூரிகளில் கம்மாக்களும் ,ரெட்டுகளுமே ஆதிக்கம் செலுத்துகின்றனர்.பிற சாதியினருக்கு எந்த முக்கியத்துவமும் இருப்பதில்லை.அதனால் தலித்துகள் தங்களை அமைப்பாக்கி கொள்வதை தவிர வேறு வழியில்லை.

2015 ஆகஸ்டு மாதத்தில் யாகூப் மேனன் தூக்கலிடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடுத்துகிறார்கள் அம்பேத்கர் அமைப்பை சேர்ந்த மாணவர்கள்.இதைப்பற்றி அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் தலைவர் சுஷில் குமார் பேஸ்புக்கில் கேலி செய்து எழுதுகிறார்.அவரை மன்னிப்பு கேட்கச் சொல்லி அம்பேத்கர் அமைப்பை சேர்ந்த மாணவர்கள் வற்புறுத்துகிறார்கள்.சண்டையில் சுஷிலின் சட்டை கிழிகிறது.சில சிராய்ப்புகள்.அவர் மன்னிப்பு கேட்கிறார்.பின்னர் அதை பேஸ்புக்கில் பதிவேற்ற சொல்கிறார்கள்.அதையும் செய்கிறார் சுஷில்.பின்னர் அடுத்தநாள் மருத்துவமணையில் குடல்வால் அழற்சிக்கான சிகிச்சை பெறுகிறார்.அதற்கு காரணம் முன்னிரவு நடந்த சம்பவம் என்று புகார் தெரிவிக்கிறார்.அதன் பின் நிகழ்ந்த சம்பவங்களின் ஊடாக ரோஹித் மரணமடைகிறார்.

ரோஹித்தும் அவரது நண்பர்களும் சுஷிலிடம் அப்படி நடந்து கொண்டது சரிதானா என்று கேட்டால் பதில் இல்லைதான்.சஷில் சிலருடன் சேர்ந்து பதிலுக்கு ரோஹித் மற்றும் பிறரின் சட்டையை கிழித்து சில சிராய்ப்புகளை உருவாக்கியிருக்கலாம்.ஆனால் அவர்களின் திட்டங்கள் வேறாக இருக்கிறது.அவர்கள் முழுமையாக கல்லூரியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.அந்த கோரிக்கை சிறிது மாற்றப்பட்டு  பல்கலைக்கழகத்தின் சில பகுதிகளுக்கு செல்ல அவர்களுக்கு தடை விதிக்கப் படுகிறது.ரோஹித்தும் பிற மாணவர்களும் அதற்கு எதிராக பல்கலைகழகத்தின் வடக்கு வளாகத்தின் நுழைவாயிலில் முகாமிடுகிறார்கள்.அதன்பின் ஒரு மாதம் கழித்து ரோஹித் தற்கொலை செய்து கொள்கிறார்.

ரோஹித் மற்றும் பிற மாணவர்கள் மீது தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று ஏன் இத்தனை தீவிரம் காட்டப்பட்டது என்பதே முக்கியமான கேள்வி.இது இரண்டு மாணவர் அமைப்புக்கு இடையில் நிகழும் சண்டை.அதற்கு சில நாட்கள் இடைநீக்கம் செய்யலாம்.கண்டிக்கலாம்.அவ்வளவுதான்.இந்த கல்லூரி வாழ்க்கை முடிந்து வெளியே சென்று அவர்கள் பெருவாழ்வு வாழ வேண்டும்.இதுபோன்ற போராட்டங்கள், கோஷங்கள், அரசியல் பங்கெடுப்புகள் கல்லூரிகளில் இருப்பதில் தவறில்லை.அது எல்லை மீறும் போதும் கல்லூரி நிர்வாகமே தண்டனைகள் வழங்கலாம்.அது அந்த மாணவரின் வாழ்வையே சூன்யமாக்கி விடாதவாறு இருக்க வேண்டும்.ஆனால் இங்குதான் நமது சாதிய மனநிலை செயல்படுகிறது.இவன் எப்படி நம் சட்டையை கிழித்து மிரட்டி பணிய வைக்க முடியும் என்ற எரிச்சல்,வன்மம் இதில் இருக்கிறது.நான் பதிமூன்று வருடங்களுக்கு முன்னால் சென்னைக்கு வேலை தேடி வந்த போது இரண்டு மனிதர்கள் எனக்கு கேட்கும் வகையில் பேசிக் கொண்ட ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.பேசிக் கொண்டிருந்தவர்களில் ஒருவரிடம் ,தலித் பிரிவை சேர்ந்த இருவர் சபரிமலை செல்ல  நன்கொடை கேட்டு வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள்.நூறு ரூபாய் கொடுத்திருக்கிறார்.செல்லும் போது கமினாட்டி என்று சொல்லி சென்றுவிட்டார்கள்.

இவருக்கு கோபம்.ஒரு தலித் என்னை கமினாட்டி என்று திட்டிவிட்டான் என்பதை நினைத்து இவரால் தூங்க முடியவில்லை.தன் பகுதி காவல் நிலையத்தின் ஆய்வாளரை அழைத்திருக்கிறார்.அவர் வீட்டுக்கு வந்து அங்கிருந்து அந்த இரண்டு பேரை போனில் அழைத்திருக்கிறார்.அவர்கள் வந்திருக்கிறார்கள்.அவர்களை உள்ளாடையோடு முட்டி போட வைத்து மிரட்டி அனுப்பியிருக்கிறார்கள்.இந்த கமினாட்டி என்ற வார்த்தையை அவருடைய சாதியை சேர்ந்த ஒருவர் சொல்லியிருந்தால் இந்த அளவுக்கு பிரச்சனை செய்திருக்க மாட்டார்.ஆக அவருடைய கோபம் ஒரு தலித் எப்படி அதை சொல்லலாம் என்பதுதான்.பிரச்சனை சாதிய மனநிலையில் இருக்கிறது.இதே மனநிலைதான் ரோஹித் விஷயத்திலும் நிகழ்ந்திருக்கிறது.அது அம்பேத்கர் மாணவர் அமைப்பு.அது உயர்த்தப்பட்ட சாதி மாணவர்களை கொண்ட ஒரு இடதுசாரி அமைப்பாக இருந்தால் பிரச்சனை இதே போலத்தான் இருந்திருக்குமா என்று தெரியவில்லை.

தான் எதற்காக அந்தப் பல்கலைகழகத்திற்கு வந்தோமோ அதிலிருந்து விலகி அடையாள அரசியலில் சிக்க வேண்டிய சூழல் வந்துவிட்டதை நினைத்து ரோஹித் சோர்வடைகிறார்.அதலிருந்து மீளவும் வழியில்லை.இருக்கவும் வழியில்லை.காலம் கடந்துகொண்டிருக்கிறது.இனி இழப்பதற்கு நேரம் இல்லை என்று மனம் சொல்கிறது.தொலைந்து போன பால்ய காலத்தை கொண்ட ரோஹித் தான் ஒரு எண்ணாக, ஓட்டாக மாறியிருக்கும் அவஸ்தையால் சலிப்படைகிறார்.இனியும் காலத்தை இழக்க முடியாது.இழந்தவை போதும் என்று நினைக்கிறார்.இனி இதிலிருந்து மீட்சி இல்லை என்று கருதுகிறார்.அவர் தற்கொலை செய்துக் கொள்கிறார்.தற்கொலை என்பது ஒரு அறிவிப்பு.நான் இந்த வாழ்வை எப்படி வாழ விரும்பினேனோ அப்படி வாழ இயலாமல் போய்விட்டது.நான் அதை இன்னதாக அர்த்தப்படுத்திக் கொள்ள விரும்பினேன்.ஆனால் வாழ்க்கை என்னை இந்த வகையில் இழுத்து சென்று விட்டது.அதை நான் மறுக்கிறேன் என்பதன் அறிவிப்பு அது.இந்த வாதத்தை நீட்டித்துதான் ஆல்பர் காம்யூ வாழ்வை எந்த மாதிரியும் அர்த்தப் படுத்திக்கொள்ளாமல் அபத்தமாக பார்க்கலாம் என்கிறார்.அப்படி அபத்தமாக பார்க்கும் போது எதுவுமே பிரச்சனை அற்றதாக மாறுகிறது.அபத்த வாழ்வில் அனைத்தும் அபத்தமாக மாறுகிறது.அர்த்தம் தேடி செல்ல வேண்டியதில்லை.அப்படி அபத்தமாக பார்க்கும் போது நமது அடையாளங்கள் அர்த்தமிழந்து ஒரு சொரூப நிலைக்கு செல்லலாம் என்கிறார் நகுலன்.நகுலன் எனும் பெருங்கவிஞர் கண்டுபிடித்த பெரும் தரிசனம் அது.

ரோஹித் வெமுலாவின் பேஸ்புக் பக்கத்தில் மரியான் திரைப்படத்தின் ஒரு பாடலின் சில வரிகளை ஆங்கிலத்தில் எழுதியிருப்பதை படித்தேன்.காதலியுடன் சிரித்துப் பேசி தன் துறையில் கவனம் செலுத்தி மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்திருக்க வேண்டிய மனித உயிர்.அவருக்கு கவிஞர் சுகுமாரன் போன்ற ஒருவர் அந்த நேரத்தில் அழைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.அது நிகழவில்லை.ரோஹித் வெமுலா தன் தற்கொலையின் மூலம் தான் எதை விரும்பினேன் என்பதை சொல்லி சென்றிருக்கிறார்.அவர் நினைத்தவை நிகழ வேண்டும்.அறிவியலிலும் , சமூக சிந்தனைகளிலும் பெரும் பங்களிப்பை ஆற்றியிருக்கக் கூடியவர் ரோஹித்.அவரை நாம் இழந்துவிட்டோம்.அவருக்கு என் அஞ்சலி.


No comments: