அருணா ஷன்பக்ஒரு மாதத்திற்கு முன் அருணா ஷன்பக் மரணமடைந்த செய்தி பல செய்திதாள்களில் தலைப்புச்செய்தியாக வந்தது.நாற்பது வருடங்களுக்கு மேலாக செயலற்று உணர்வற்று காய்கறி போல , அவர் செவிலியராக வேலை செய்த மருத்துவமனையிலேயே படுக்கையில் இருந்தவர் சென்ற மாதம் மரணமடைந்தார்.அவர் செவிலியராக வேலை செய்த மருத்துவமனையில் துப்பரவு வேலை செய்த ஒப்பந்த தொழிலாளி சோகன் லால், மருத்துவனையின் அடித்தளத்தில் அருணா வேலை முடிந்து உடைமாற்றிக் கொண்டிருந்ததை பார்த்து அவரை பாலியில் வல்லுறவுக்கு உட்படுத்தியிருக்கிறான்.அவர் மாதவிடாய் காலத்திலிருந்தால் அவரை ஆசனவாயில் புணர்ந்திருக்கிறான்.அப்போது அவர் தப்பிக்க முயற்சித்ததாலோ அல்லது அவரை கொலை செய்ய வேண்டுமென்ற நோக்கதினாலோ சங்கிலியால் அவரது கழுத்தை இறுக்கியிருக்கிறான்.அந்த செயலால் அவருக்கு மூளைக்கு செல்லும் பிராண வாயு தடைப்பட்டிருக்கிறது.சில செய்திதாள்கள் அருணா அந்தத் தொழிலாளியை அவன் நாய்களுக்காக வைத்திருந்த உணவை திருடுவதை பார்த்து அதைப் போல மறுபடியும் செய்தால் புகார் அளித்துவிடக்கூடும் என்ற சொன்னதால் அவரை திட்டமிட்டு அவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சொல்கின்றன.

இதில் இரண்டாவதுதான் பெரும்பாலும் உண்மையாக இருக்கும் என்று தோன்றுகிறது.ஏனேனில் இந்த சம்பவத்திற்கு ஏழு வருட தண்டனை பெற்று பின்னர் விடுதலை அடைந்த சோகன் லாலை கண்டுபிடித்து அவனது கிராமத்திற்கு சென்ற ஒரு செய்தியாளர் அங்கிருந்த மக்களுக்கு இந்த விவரம் எதுவுமே தெரியவில்லை என்கிறார்.அப்படியென்றால் சோகன் லால் மறுபடியும் அந்த கிராமத்திலோ அல்லது வேறு எங்கோ அது போல வேறு எந்த பெண்ணுடனும் நடந்து கொள்ளவில்லை என்று கொள்ளலாம்.பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சூழலில் குறிப்பிட்ட விதமாக நடந்து கொள்ளும் நாம் அதே சூழல் மறுபடியும் வந்தால் அதே போலத்தான் நடந்து கொள்கிறோம்.இஸ்ரோ விஞ்ஞானியாக இருந்து பொய் குற்றச்சாட்டால் சிறை சென்ற நம்பி நாராயணன் ஒரு பேட்டியில் நாம் மறுபடி மறுபடி ஒரே போலத்தான் நடந்து கொள்கிறோம் என்கிறார்.அப்படிச் செய்யாமல் மாற்றம் அடைவது என்பது நாம் உடைந்து மறுபடியும் எழுவது போன்றது.மிகப்பெரிய அனுபவங்கள் , சிதைவு , பிறழ்வுக்கு பின்னால் அத்தகைய ஒரு மாற்றம் சாத்தியமாகலாம்.சட்டத்தில் Habitual Offenders என்று சொல்லப்படுகிறது.இதை தனி மனிதர்களுக்காக அல்லாமல் சாதி ரீதியானதாக ஆங்கில ஆட்சியில் இருந்ததை நாம் அறிவோம்.எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி அப்படி குற்றம் சாட்டப்பட்ட குற்றப்பரம்பரையினரை பற்றியதுதான்.  

இன்றைய சூழலில் ஒருவரின் குற்றத்தை ஆராயும் போது அவர் இது போன்ற குற்றங்களை இதற்கு முன் செய்திருக்கிறாரா அல்லது இதுதான் முதல் முறையா என்பது முக்கியமான விஷயம்.தற்செயலாக முதல்முறையாக ஒரு குற்றத்தை செய்வதற்கும் இரண்டாவது முறையோ அல்லது அதற்கும் மேலோ அதை செய்வதற்கும் வித்யாசம் இருக்கிறது.முதல் முறை எனும் போது தண்டனையை குறைப்பதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கிறது.

சோகன் லால் , அருணா ஷன்பக் நாய்களுக்காக வைத்திருந்த உணவை திருடியதை கண்டித்ததால் அவரை பழிவாங்கும், அவமானப்படுத்தும் நோக்கில் அவ்வாறு செய்திருக்கிறான் என்பதில் உண்மை இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.அப்படி இல்லாமல் அவன் எளிதில் தவறிழைப்பவனாக இருந்திருந்தால் அவன் அந்த ஒற்றைச் சம்பவத்தோடு நின்றிருக்க மாட்டான்.சோகன் லால் அந்தப் பெண்ணிடம் தன் ஆண்மையை நிறுவ வேண்டும் என்ற மூர்க்கத்தனத்தின் வெளிப்பாடே அந்தச் செயல்.கர்நாடகத்தில் சரஸ்வத் பிராமண குடும்பத்தில் பிறந்த அருணா ஷன்பக் படித்து செவிலியராக மும்பையில் கெயிஎம் மருத்துவமணையில் பணிபுரிந்திருக்கிறார்.இந்தச் சம்பவம் நடக்கும் போது அவருக்கு வயது இருபத்தியைந்து.அந்த மருத்துவமணையில் வேலை செய்த இளநிலை மருத்துவர் ஒருவரை காதலித்திருக்கிறார்.இருவரும் திருமணம் செய்துக்கொள்ள இருந்தார்கள்.எத்தனை அழகான வாழ்க்கையை அவர் வாழ்ந்திருக்கக்கூடும்.சோகன் லாலின் மகன் செய்தியாளர்களிடம் என் தந்தை அந்தச் செயலை செய்யவே இல்லை ,அது அவர் மீது திட்டமிட்டு செய்யப்பட்ட புகார் என்று சொல்லியிருக்கிறார்.

மருத்துவமனை புகாரில் அது ஒரு திருட்டு மற்றும் கொலைக்கான முயற்சி என்று தான் சொல்லியிருக்கிறது.வல்லுறவை பற்றிச் சொன்னால் அது அந்தப் பெண்னையும் அவரது எதிர்கால திருமண வாழ்வையும் பாதிக்கும் என்று மருத்துவமனையினர் நினைத்திருக்கிறார்கள்.ஆனால் அதன் பிறகு அருணா ஒருபோதும் படுக்கையை விட்டு எழவே இல்லை.ஒரு முறை அவரை கருணைக்கொலை செய்யச்சொல்லி பிங்கி விரானி என்பவர் உச்சநீதி மன்றத்தில் அளித்த மனு நிராகரிக்கப்பட்டது.கெயிஎம் மருத்தவமணையின் செவிலியர்கள் அவரை நன்றாக பார்த்துக்கொண்டார்கள் என்கிறார்கள்.எவ்வித செயலுமற்று உணர்வுமற்று நாற்பது ஆண்டுகளுக்காக மேலாக படுக்கையில் இருந்தவரை கருணைக்கொலை செய்யாமல் பார்த்துக்கொண்டதுதான் மனிதாபிமானமா.தெரியவில்லை.அவருக்கான உணவு முழுவதும் நிறுத்தப்பட்டு அவரை இறக்க அனுமதித்திருக்கலாம் என்றே நான் நினைக்கிறேன்.அதுதானே ஒரு மனிதர் என்ற முறையில் அவருக்கு நாம் செய்யும் மரியாதை.உயிர் வாழ்தல் மட்டும் அல்ல கண்ணியத்தோடு உயிர் வாழ்தலும் வேண்டும்.அது சாத்திமே இல்லாமல் போன அருணா ஷன்பக்கை நாம் நமது பாவனைகள் கலந்த மனிதாபிமானத்தை ஒதுக்கிவிட்டு இறக்கச் செய்திருக்கலாம்.

சோகன் லால் தன் எளிய அகங்காரச் சீண்டலால் செய்த ஒரு செயல் ஒரு பெண்ணின் வாழ்வையே பாதித்திருக்கிறது.சோகன் லால் வெறும் ஏழு வருடங்கள் சிறையிலிருந்து விட்டு வெளியே வந்துவிட்டான்.அவனது செயலால் பாதிக்கப்பட்ட அருணா நாற்பது வருடங்களுக்கு மேலாக எந்த தவறுமே செய்யாமல் துயரத்தை அனுபவித்து மரணமடைந்திருக்கிறார்.நாம் நமது கோபத்தால் , அகங்காரச் சீண்டலால் , விரக்தியால் , சோம்பலால் , எரிச்சலால் செய்யும் எத்தனையோ செயல்கள் பிறரின் வாழ்வை எப்படியெல்லாம் பாதித்துவிடுகிறது.குடித்துவிட்டு வண்டி ஓட்டிச்சென்ற சல்மான்கான் வீடு இல்லாமல் நடைபாதையில் படுத்தியிருந்தவர் மீது வண்டி ஏற்றுகிறார்.அதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்ளக்கூட அவரால் இயலவில்லை.அவரின் பிரச்சனை என்ன.எதற்காக குடித்துவிட்டு வண்டி ஓட்ட வேண்டும்.ஏன் அடிப்படையான சமூக ஒழுங்கு இல்லாமல் போனது.இறந்துபோனவருக்காக அவர் வருத்தப்பட்டாரா, அல்லது குற்றவுணர்வுக்கு உள்ளானாரா என்று கூட தெரியவில்லை.ஒரு தவறை மறைக்க மற்றொன்று.இறுதியில் அவர் சிறைக்கு செல்லவே இல்லை.

பெரும்பாலான பாலியல் வல்லுறவுக்களுக்கு பின்னால் இருப்பது ஒரு ஆணின் அகங்காரம் மட்டுமே.காமம் இல்லை.டெல்லியில் பேருந்தில் நடந்த குற்றத்தில் அந்தப் பெண் இரவு ஒன்பது மணிக்கு தன் கணவன் அல்லாத தந்தை அல்லாத வேறு ஒரு ஆணுடன் வந்திருக்கிறார்.அந்தப் பெண் மீது செலுத்தப்பட்ட அடக்குமுறை மற்றும் ஆணின் அதிகாரமே அந்தச் செயல்.சோகன் லால் விஷயத்திலும் டெல்லி சம்பவத்திலும் நாம் வர்க்க வேற்றுமை இருப்பதையும் பார்க்கலாம்.பெரும்பாலும் ஒரு பெண் தான் காதலிக்கும் அல்லது திருமணம் செய்துக்கொண்ட ஆணை சீண்ட வேண்டும் என்று நினைக்கும் போது அவனால் பணம் சம்பாதிக்க இயலாததை, குடும்பம் நடத்த தெரியாததை, லெளகீக ஞானம் இல்லாததை, ஏதோ ஒரு சம்பவத்தில் அவன் தன் உயர் அதிகாரிகளிடமோ அல்லது பிறரிடமோ அச்சப்பட்டு மண்டியிட்ட கோழைத்தனத்தைதான் பட்டியலிடுகிறாள்.இதற்கு பின்னால் இருப்பது ஒரு ஆண் என்பவன் வீரமானவாகவும், லெளகீக ஞானம் உள்ளவனாகவும், குடும்பம் நடத்த தெரிந்தவனாகவும் இருக்க வேண்டும் என்பதுதான்.அடிப்படையில் இரண்டு விஷயங்கள் ஒன்று பணம் மற்றது வீரம்.இந்த இரண்டு விஷயங்களை வைத்துக்கொண்டுதான் ஒரு பெண் ஆணை குரூரமாக காயப்படுத்துகிறாள்.அவனை சீண்டி சண்டைக்கு இழுக்கிறாள்.பல குடும்பங்களில் இது நிகழ்கிறது.பணமும்,லெளகீக ஞானமும் உள்ளவர்களிடத்தில் பெரும்பாலான பெண்கள் சரணடைகிறார்கள்.அவனுடைய அத்தனை அடக்குமுறைகளையும் , அதிகாரத்தையும் மறுகேள்வி இல்லாமல் ஏற்கிறார்கள்.நாம் ஒரு ஆணின் மீது ஏற்றி வைக்கும் இந்த விழுமியங்கள் ஆண்களிடமும் பெண்களிடமும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.மாற்றம் இருவரிடமும் நிகழ வேண்டும்.ஆண் குழுந்தைகளையும் பெண் குழுந்தைகளையும் ஒரே போல வளர்ப்பதும் , பள்ளிகளில் சொல்லிக்கொடுக்கப்படும் விழுமியங்களின் மூலமாகவும்தான் இந்த மாற்றங்கள் சாத்தியமாகும்.கறுப்பு தாழ்வான நிறம் என்ற எண்ணம் பெரும்பாலும் எல்லோருக்கும் இருக்கிறது.சிவப்பு என்பதை அழகின் நிறமாக நாம் ஏற்கிறோம்.இது எப்படி நிகழ்கிறது.குழுந்தைகளுக்காக உருவாக்கப்படும் கேலிச்சித்திரங்களில் கூட தீயவன் கறுப்பு நிறத்திலிக்கிறான்.ஏன் அவன் வெள்ளை நிறத்திலோ சிவப்பு நிறத்திலோ இருப்பதில்லை.இது போன்ற ஒரு பிரச்சனை தான் ஆணின் அகங்காரமும் அதன் வெளிப்பாடுகளும்.

அருணாவை திருமணம் செய்துக்கொள்ளலாம் என்றிருந்த மருத்துவர் அருணா சிகிச்சையில் எந்த முன்னேற்றத்தையும் அடையாததை பார்த்து சிறிது காலம் கழித்து வெளிநாடு சென்று திருமணம் செய்துக்கொண்டார்.எவ்வித தவறும் செய்யாமல் பெரும் வலியையும் அவதியையும் அனுபவித்த அருணா ஷன்பக் என்ற இருபத்தியைந்து வயது வரை மட்டுமே வாழ்ந்த அந்த பெண்ணிற்கு அஞ்சலி.No comments: