பெண்ணியமற்ற பெண் கவிதைகள்

 
 
 
 
 
 
 
ஒரு முறை என் நண்பன் ஒருவனிடம் பேசிக் கொண்டிருந்த போது அவன், நாம் ஆண்கள் என்பதை போல அவர்கள் பெண்கள், அதற்கு அப்பால் ஒன்றுமில்லை என்றான்.நான் கேட்டேன் , ஒன்றுமில்லையா , அவன் ஆம் ஒன்றுமே இல்லை என்றான்.

ஆண்களில் எப்படி பலவித நிற வேறுபாடுகளுடன் கூடிய மனிதர்கள் இருக்கிறார்களோ அப்படியே பெண்களிலும் பலவித நிற வேறுபாடுகள் கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள்.வெறும் அபலைகள், அபலைகள் போல வேஷம் போட தெரிந்தவர்கள் , குரூரமானவர்கள், கருணையே வடிவானவர்கள் என்று அதன் அலைத்தொகுப்பு மிகப்பெரியது.எப்படி ஆண்களை பற்றிய அனைத்து மனநிலைகளையும் கவிதையில் கொண்டுவர முடியுமோ அப்படி பெண்களை பற்றிய மனநிலைகளையும் கொண்டு வர வேண்டும்.

சமீபத்தில் பா.வெங்கடசனின் நீளா என்ற கவிதை தொகுப்பை படித்தேன்.நீளா என்பவள் திருமாலின் மனைவிகளில் ஒருத்தி.இருப்பற்றவள், நிழலானவள், உருவலி.அந்த நிழல் என்ற படிமம் கவிதை தொகுப்பில் இரண்டு விதமாக வருகிறது.முதல் படிமம் – இதில் பெண் குரலற்றவளாகவும் சொற்கள் அற்றவளாகவும் வருகிறாள், மற்றொரு படிமம் – இதில் அப்படி குரலற்று போன பெண் சொல்லும் சொற்கள் பெண்ணியம் என்ற கோட்பாட்டு சிமிழுக்குள் போடப்பட்டு முற்றிலும் வேறொன்றாக மாறும் சித்திரத்தை அளிக்கும் படிமம்.ஒரு கவிதை அல்லது சொல் எதை குறிக்க முற்படுகிறதோ அதற்காக அல்லாமல் வேறொன்றுக்காக அதை பயன்படுத்திக்கொள்வதை பற்றியும் இந்த தொகுப்பு பேசுகிறது.

இந்த தொகுப்பில் உள்ள ஒரு கவிதையின் தலைப்பு ஒரு புத்தகம் அல்ல அவள் கேட்பது.இதில் ஒரு வரி இவ்வாறு வருகிறது.ஒரு ரோஜாவையும் சில கண்ணாடி வளையல்களையும் அவள் உன்னிடம் வேண்டி நிற்கிறாள்.இனி மலர்களுக்கும் அணிகளுக்கும் திரும்புதெலன்பது துர்லபம் என்கின்றன புத்தகங்கள் என்ற மற்றொரு வரியும் அதை தொடர்ந்து வருகிறது.இதில் எளிமையாகவும் சாதாரணமாகவும் ஒரு பெண்னை எந்த கோட்பாட்டு இயல்களுக்குள்ளும் சிக்க வைக்காமல் முன்வைக்க விரும்பும் ஒரு சித்திரம் வருகிறது.போர்ப்பரணி என்ற ஒரு கவிதையும் இந்த தொகுப்பில் இருக்கிறது.நான் சமீபத்தில் வாசித்த மிகச்சிறந்த கவிதை.நாம் பெரும்பாலும் போரை பற்றி பேசும் போது அதற்கு பின்னான அழிவு குறித்து பேசுகிறோம் அல்லது அந்த போர் எதற்காக யார் யார் மீது தொடுக்கிறார்கள் என்பதை பற்றி பேசுகிறோம்.அந்த போர் புரட்சி அல்லது கிளர்ச்சி அல்லது ஆக்கிரமிப்புக்கான போராக இருக்கலாம்.ஆனால் நாம் இவைகளை பற்றி எல்லாம் கவலைப்படாமல் போரை பற்றி பேசலாம் என்கிறது போர்ப்பரணி.அது போருக்கு உபயோகப்படுத்தப்படும் ஆயுதங்களை பற்றி பேச விரும்புகிறது.அந்த போர் வீரர்கள், அந்த போரின் வியூகங்கள், ஆயுதங்களின் சிறப்பு என்று போரின் அழகியலை பற்றி நாம் பேசலாம் என்கிறது.இந்த கவிதை இந்த தொகுப்பில் உள்ளது  அசாதாரணமான விஷயம்.இங்கு போர் என்பதை நாம் வேறு எப்படி வேண்டுமானாலும் மாற்றிப் பார்க்கலாம்.அதை தற்போது நாம் பெண் விடுதலை , பெண்ணியம் என்ற தளத்தில் பேசிக்கொண்டிருக்கும் தளத்திற்குள் பொருத்திப்பார்த்தால் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை இந்த கவிதை வேண்டி நிற்பதை புரிந்து கொள்ளலாம்.

நாம் ஏன் பெண்கள் பற்றிய கவிதைகளில் வெறுமன பெண்களை பற்றி மட்டும் பேசக்கூடாது.ஏன் அவர்களை எங்கோ கொண்டு சென்று நிறுத்த வேண்டும் என்ற பொறுப்புணர்வு இருப்பது போல இறுக்கமாக நிற்க வேண்டும்.  கைகளை உயர்த்தி கோஷம் எழுப்பியவாறு இருப்பது உங்களுக்கு வலிக்க வில்லையா. உங்கள் கைகளை சற்று கீழே இறக்குங்கள்.பெண்களை பற்றிய கவிதைகளில் நாம் இனி பெண்களை பற்றி பேசலாம்.அவர்களின் மழலைத்தனத்தை, குரூரத்தை, கருணையின்மையை ,வன்முறையை , பாதுகாப்பின்மையை , சுயமாக வாழ விரும்புவதை, சுயமாக வாழ தெரியாததை, பாவனைகளை, பாசாங்குகளை, தாய்மையை , சமூக மனிதர்களாக அவர்களின் பங்கை, ஆன்மிக தேடலை,உடல் வதைகளை,கீழ்மையை ,மேண்மையை என்று எதையும் பேசலாம்.அதை பேசுவதன் மூலமாக நாம் அதன் அழகியலை பேசலாம், வெறுமன பேசுவதற்காக பேசலாம்.இன்று நகரமயமாதலை , உலகமயமாதலை ஆண்களை விட பெண்களே மிகவும் விரும்புகின்றனர்.அதை குறித்து நமது கவிதைகள் பேசலாம்.வெறுமன பெண் உடல் அதன் மீதான அடக்குமுறை அதலிருந்து மீண்டெழுதல் என்ற புரட்சி கோஷங்களை சற்று இடைநிறுத்தலாம்.எப்படியும் பெண்ணிய கோஷங்கள் வானை பிளந்தாலும் பிளக்காவிட்டாலும் அடுத்த ஐம்பது வருடங்களில் பெண்களுக்கான வாழ்க்கை இப்போது இருப்பதை விட சற்று மேம்பட்டே இருக்கும்.இன்று பெண்கள் அடைந்திருக்கும் நிலை அல்லது வெற்றி அல்லது விடுதலை அவர்களுக்கு சாத்தியப்பட நரசிம்மராவ் தலைமையிலான அரசாங்கத்திற்குதான் அவர்கள் நன்றி சொல்ல வேண்டும்.வேறு எந்த பண்பாட்டு மாற்றத்தாலும் இன்றைய நிலை சாத்தியப்படவில்லை.அந்த அரசாங்கத்தின் கொள்கை மாற்றமே இன்றைய பெண்கள் நேற்றைய பெண்களை விட சுய கெளரவத்துடன் சுயமாக வாழ வழி வகுத்திருக்கிறது.ஆதலால் கோஷங்களை விடுத்து எளிமையாக சாதாரணமாக பெண்களை பற்றி பெண்களும் ஆண்களும் எளிய கவிதைகளை எழுதலாம்.

மற்றொரு விஷயத்தையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.இன்று இந்தியாவில் மிகுந்த சுதந்திரத்தோடு மிகுந்த மகிழ்ச்சியோடு சுயமான வேலையும் வாழ்க்கையும் என வாழ்ந்து வரும் பெண் ஒரு நிலை என்றால் அந்த பெண்ணின் மூதாட்டியின் வாழ்க்கை முறையை வாழ்ந்து வரும் இளம் பெண்ணும் நம் இந்தியாவில் தொல் படிமங்கள் போல இருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.இரண்டாவது பெண் முதலாவது பெண்ணின் வீட்டில் வேலை செய்பவளாகவும் இருக்கலாம்.ஆக, பெண்களை பற்றி பெண்களும் ஆண்களும் பேச நிறைய இருக்கிறது.இறுதியாக ஒரு கவிதையில் வரும் அவள் என்ற வார்த்தை இயற்கையை குறிக்கலாம், அழகை குறிக்கலாம், நதியை குறிக்கலாம் சமயங்களில் அது பெண்ணையும் குறிக்கலாம் என்று நாம் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.அப்படியாக பெண்ணியமற்ற பெண் கவிதைகள் நம் சூழலில் முளைத்தெழலாம்.
 
(இன்மை இணைய இதழில் எழுதிய கட்டுரை)

No comments: