சார்வாகமும் அத்வைதமும்

தேவி பிரசாத் சட்டோபாத்யாயா


ஜெயமோகன் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் என்ற நூலில் ஆறு தரிசனங்களாக சாங்கியம்,நியாயம்,வைசேஷிகம்,யோகம்,பூர்வ மீமாம்சம், உத்தர மீமாம்சம் ஆகியவற்றை குறிப்பிடுகிறார்.சாங்கியத்தை அவர் ஒரு தரிசனமாக முன்வைக்கவில்லை.தேவி பிரசாத் சட்டோபாத்யாயா எழுதிய இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம் என்ற புத்தகத்தில் சாங்கியம்,யோகம், நியாய வைசேஷிகம், பூர்வ மீமாம்சம், உத்தர மீமாம்சம் மற்றும் லோகாயதம் அல்லது சார்வாகம் என்ற ஆறு தரிசனங்களை முன்வைக்கிறார்இதில் நியாயத்தையும் வைசேஷிகத்தையும் ஒரே தரிசனமாக்குகிறார்.சார்வாகத்தை முதன்மைப்படுத்துகிறார்.ஜெயமோகனின் நூலில் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் பற்றி மட்டும் தான் எழுதியிருக்கிறார்.தேவி பிரசாத்தின் நூலில் ஜைன தத்துவம் பற்றியும் புத்தரின் காலத்தில் பெளத்தம் எவ்வாறு உருவானது என்பதையும் பிற்காலத்தில் அது எவ்வாறு மஹாயான பெளத்தமாகவும் ஈனயான பெளத்தமாகவும் பிரிந்தது என்பதையும் பற்றியும் எழுதியிருக்கிறார்.

ஜெயமோகனின் நூலில் அனைத்து தரிசனங்களை பற்றியும் ஒரே அளவிலான விளக்கங்கள் அளிக்கப்பட்டு இருந்தாலும் பிற்கால வேதாந்த தரிசனங்களில் அத்வைதம் பற்றி எழுதும் போது அதுவே இந்திய தத்துவ மரபில் மிக உயர்ந்த தரிசனம் என்று முன்வைக்கும் தொனி உள்ளது.தேவி பிரசாத்தின் நூலில் அவர் அடிப்படையில் எல்லா தரிசனங்களையும் கருத்துமுதல்வாதம் என்றும் பொருள்முதல்வாதம் என்றும் பிரிக்கிறார்.சாங்கியம் பிரகருதியை பற்றி மட்டும் பேசும் போது பொருள்முதல்வாத தளத்தில் இருந்தது என்றும் பின்னர் அதில் புருஷன் இணைந்த போது எப்படி கருத்துமுதல்வாத தரப்பாக மாறியது என்றும் சொல்கிறார்.யோகம் ஒரு தரிசனமே அல்ல என்கிறார்.நியாய வைசேஷிகம் அறிவுத் தோற்றவியல் மற்றும் மூல மெய்பொருள் ஆய்வு ஆகியவற்றில் மிக முக்கியமான சாதனைகளை செய்திருந்தாலும் அவையும் கருத்துமுதல்வாத தரப்பிலிருந்து சிலவற்றை பிற்காலத்தில் பெற்றுக்கொண்டது என்று வருத்தம் கொள்கிறார்.பூர்வ மிமாம்சம் பற்றி சொல்கையில் அது முழுக்க முழுக்க பொருள்முதல்வாதத்தை முன்வைத்த தரப்பு என்கிறார்.ஆனால் அனைத்தையும் விட லோகயாதம் அல்லது சார்வாகம் எப்படி ஒரு முழுமையான பொருள்முதல்வாத தரிசனமாக நம் மரபில் இருக்கிறது என்றும் அதை நாம் அவசியம் மீட்டெடுக்க வேண்டும் என்றும் நூல் முழுக்க அதைப்பற்றியே அவரது முழு கவனமும் இருக்கிறது.இது ஒரு குறை என்றே தோன்றுகிறது.

பூர்வ மீமாம்சம் பற்றி சொல்கையில் மந்திரங்கள் என்பது பிராத்தனையாக இல்லாமல் எப்படி கட்டளையிடுபவையாக இருக்கிறது என்றும் பூர்வ மீமாம்சர்கள் எப்படி வேதாந்த தரப்பை தீவிரமாக எதிர்த்தார்கள் என்றும் எழுதுகிறார்.பூர்வ மீமாம்சம் பற்றி படிக்கும் போது இன்றைய புரோகித மரபு அதிலிருந்துதான் வந்தது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.மொழி குறித்தும் உச்சரிப்பு குறித்தும் அவர்களே முக்கியமாக ஆராய்ச்சிகளை செய்திருக்கிறார்கள்.அவர்கள் கடவுளிடமும் தேவர்களிடமும் இறைஞ்சுவது இல்லை.மாறாக அவர்கள் யாகங்கள் மூலம் மந்திரங்கள் சொல்லி கட்டளையை பிறப்பிக்கிறார்கள்.அதற்கு தேவர்கள் கட்டுப்பட்டாக வேண்டும்.அவர்களது யாகங்கள் முழுக்க முழுக்க லெளகீகம் சார்ந்தவை.இதனால் பூர்வ மீமாம்சம் எப்படி ஒரு பொருள்முதல்வாத தரப்பாக இருந்தது என்று தேவி பிரசாத் நிறுவுகிறார்.

வேதாந்த தரப்பு பற்றி சொல்லும் போது அந்த தரிசனத்தை முன்வைத்த எல்லோரும் உழைப்பிலிருந்து அந்நியமானவர்கள்.ஒரு சமூகத்தில் பலர் உடல் உழைக்க அதிலிருந்து உருவாகும் உபரியை பெற்று வாழும் சிலரின் சிந்தனை வளரச்சியே கருத்துமுதல்வாதமாக நம் மரபில் தோன்றியது.உடல் உழைப்பு உலகை திருஷ்டிக்க வைக்கிறது.இது உண்மை என்று ஏற்க வைக்கிறது.ஆனால் உழைப்பிலிருந்து விலகியவர்கள் இந்த லெளகீக பொருள்சார்ந்த உலகின் எண்ணங்களிலிருந்து விலகி பூடகமான ஞானத்தை முன்வைக்கிறார்கள்.இதில் ஒரு சமூகத்தில் உழைக்காதவர்கள் பிரமாணர்களும் ஷத்திரியர்களும்தான்.அவர்களின் தரிசனமே கருத்துமுதல்வாதம்.இத்தகைய கருத்துக்களால் கர்மம் ஞானத்திற்கு எதிரான விஷயமாக பார்க்கப்பட்டது.இதனால் கர்மம் வெறுக்கப்பட்டது.ஆகையால் நம் இந்தியாவில் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வளராமல் நாம் முடங்கிவிட்டோம்.லோகாயத மரபை மேலெடுத்து அதை தவிர்த்த பிறவற்றை நிராகரித்து லெளகீகமான பொருள்முதல்வாத தரிசனத்தை வளர்க்க வேண்டும்.அதன் மூலம் விஞ்ஞானத்தையும்,இயற்கையை வெல்லும் அறிவையையும், தொழில்நுட்பத்தை பெருக்கும் ஆற்றலையும் நாம் நம் மரபிலிருந்து பெற முடியும் என்கிறார் தேவி பிரசாத் சட்டோபாத்யாயா.

நம் சமூகத்தில் முதலில் பொருள்முதல்வாத தரப்புகளே இருந்திருக்கலாம் என்றும் பின்னர் பலரை உழைக்க வைத்து அதிலிருந்து பெறும் உபரியால் வாழும் சிலர் இருக்கக்கூடியதான சமூக அமைப்பால்தான் கருத்துமுதல்வாத தரப்பு உருவானது என்கிறார் தேவி பிரசாத்.ஜெயமோகன் இந்த கருத்துக்கு மாறாக முதலில் ஆன்மிகவாத தரப்பே நம் சமூகத்தில் இருந்திருக்க முடியும் என்றும் பின்னர்தான் பொருள்முதல்வாத தரப்பு உருவாகியிருக்க முடியும் என்கிறார்.ஜெயமோகன் சொல்வதில் உண்மை இருக்கிறது.இன்றும் பழங்குடிகளை நாம் பார்க்கிறோம்.அவர்களிடம் மூத்தார் வழிபாடும், நீத்தார் வழிபாடும்,இயற்கை வழிபாடும், சடங்குகளும்தானே இருக்கிறது.பல பழங்குடிகள் ஏதேனும் ஒரு வகையில் ராமாயணத்தோடும் மகாபாரதத்தோடும் தங்களை இணைத்துக்கொள்கிறார்கள்.அதெப்படி பொருள்முதல்வாத சிந்தனையாக வளர்ந்திருக்க முடியும்.சமூகங்கள் ஓரிடத்திலேயே நிலையாக தங்கி உற்பத்தி செய்து அதில் வரும் உபரியால் சமூக அமைப்பு உருவாகி சிலர் கல்வி கற்று அதன் மூலமே தர்க்கம் உருவாகியிருக்க முடியும்.அதிலிருந்துதான் நியாயத்தை முன்வைத்து அதற்கு முன்னே ஏதேனும் ஒரு வடிவில் இருந்திருக்கக்கூடிய எண்ணங்களை நம்பிக்கைகளை தர்க்கப்படுத்தி தரிசனங்களாக அறிஞர்கள் முன்வைத்திருக்க முடியும்.

இந்த இரண்டு நூல்களுமே அறிமுக நூல்கள்தான்.இதில் தேவி பிரசாத்தின் நூலை தமிழில் வெ.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மொழிபெயர்த்திருக்கிறார்.எனக்கு இந்த மொழிபெயர்ப்பை இன்னும் செம்மைபடுத்தலாம் என்று தோன்றுகிறது.இந்திய தத்துவ மரபில் தோன்றிய தரிசனங்களை இன்னும் விரிவாக அறிந்துகொள்வதற்கு தாஸ்குப்தா, கே.தாமோதரன், ஹரியண்ணா, ஷெர்பாட்ஸ்கி ஆகியாரின் நூல்களையும் வாசித்தாக வேண்டும் என்றும் தோன்றுகிறது.

ஒரு தரிசனம் சில காலம் கழித்து வேறொன்றாக மாற்றம் கொள்கிறது என்ற எண்ணத்தை இந்த நூல்களை வாசிக்கும் போது அறிகிறோம்.இது எவ்வாறு நிகழ்கிறது என்று நினைக்கும் போது அது அந்த காலத்தின் அவசியம் என்றே தோன்றுகிறது.உதாரணமாக ஈ.வே.ரா கடவுள் இல்லை என்று கோட்பாட்டுடன் முன்வைத்த திராவிடக் கழகத்தை ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதாக மாற்றியதன் மூலமாகத்தான் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் அமர முடிந்தது.கோசாம்பி பெளத்தம் குறித்தும் ஜைனம் குறித்தும் சொல்லும் போது அசைவை உணவை உண்ணும் ஒரு சமூகத்தில் இப்படி சைவ உணவை மட்டுமே உண்ண வேண்டும் என்று சொல்லும் தரிசனங்கள் உருவாகியிருக்க வாய்ப்பில்லை. மாறாக அந்த காலகட்டத்தில் மக்களுக்கு பெரிய உடல் உழைப்பு , வேட்டையாடுதல் ஆகியவை இல்லாமலேயே உணவு சேகரிப்பு மூலம் ஆரோக்கியமான உணவு கிடைத்திருக்கிறது.அதனால்தான் அந்த தரிசனங்கள் இங்கு நிலைபெற்றது என்கிறார்.ஆக ஒரு தரிசனம் அல்லது கருத்து ஒரு சமூகத்தில் நிலைத்திருக்கிறது என்றால் அது யாராலோ உற்பத்தி செய்து மட்டுமே முன்வைக்கப்படுவதில்லை மாறாக அது மக்களாலும் ஏதோ ஒரு வகையில் ஏற்கப்படுகிறது என்பதும் உண்மையே. ஒரே பாலினத்தவர்கள் தங்களுக்குள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இந்தியாவில் அடுத்த பத்தாண்டுகளில் பல்வேறு உயர் நீதிமன்றங்களால் தீர்ப்புகள் எழுதப்படும்.ஏனேனில் அதை சமூகம் அனுமதிக்கும்.சமூகம் அனுமதிப்பதையே நீதிமன்றங்கள் தீர்ப்பாக எழுதுகின்றன.அதுவே பாராளுமன்றத்திலும் சட்டசபைகளிலும் சட்டங்களாக இயற்றப்படுகின்றன.சார்வாகமும் அத்வைதமும் மக்களிடமிருந்து தோன்றி பேரறிஞர்களால் தர்க்கப்படுத்தி தரிசனங்களானவை.ஏன் சில தரிசனங்கள் தேங்கியும் சில தரிசனங்கள் வளர்ச்சியும் பெற்றன.நாம் அதை கண்டடைவதன் மூலமாக நம் மூதாதையர்களின் கருத்துகளையும்,எண்ணங்களையும்,நம்பிக்கைகளையும் கண்டடையலாம்.

நூல்கள்:

இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம் – தேவி பிரசாத் சட்டோபாத்யாயா – மொழிபெயர்ப்பு – வெ.கிருஷ்ணமூர்த்தி – படைப்பாளிகள் பதிப்பகம்.
 
இந்திய ஞான மரபில் ஆறு தரிசனங்கள் – ஜெயமோகன் – கிழக்கு பதிப்பகம்.


No comments: