மரநிழல் ஊஞ்சலாடலாம்





போபால் விஷ வாயு வழக்கின் முதல் குற்றவாளியான ஆண்டர்சன் சமீபத்தில் அமெரிக்காவில் இறந்து போனார்.அவருடைய மனைவி அவரைப்பற்றி முன்னர் ஒரு பேட்டியில் குறிப்படும் போது அந்த துயரச் சம்பவம் அவரை மிகவும் அலைகழித்தது என்கிறார்.

ஆண்டர்சன் செய்த குற்றத்திற்காக அவர் தண்டிக்கப்படவில்லை. தன்னை விசாரித்துக்கொள்ளட்டும் என்று எண்ணி அவர் இந்தியா வந்து வழக்கை சந்திக்கவும் இல்லை.அமெரிக்காவில் தன் இல்லத்தில் குற்றவுணர்வு கொள்கிறார்.ஏனேனில் குற்றவுணர்வுகள் செளகரியமானவை.ஆனால் செயல் தளத்தில் அவர் ஒன்றுமே செய்யவில்லை.

நீங்களும் நானும் சிறிதும் பெரிதுமாக நிறைய குற்றங்களை நம் சுயநலத்தின் பொருட்டு செய்கிறோம்.குற்றவுணர்வு கொள்கிறோம்.அதற்காக மன்னிப்பு கேட்கிறோம் அல்லது அதை கடந்து செல்கிறோம் அல்லது அதை நியாயப்படுத்துகிறோம் அல்லது அது தவறே இல்லை என்று வாதாடுகிறோம்.நம்முடைய ஒரு செயலால் பிறர் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்று நாம் உணரும் போது நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பது முக்கியம்.ரஸ்கோல்நிகோவ் தான் செய்த குற்றத்தினால் மனம் வருந்தி பின்னர் தன் தவறை ஒப்புக்கொண்டு சிறை செல்கிறான்.இங்கே ரஸ்கோல்நிகோவின் குற்றவுணர்வு செயலாக மாற்றம் கொள்கிறது.பீடிக்கப்பட்டவர்கள் என்ற தஸ்தாவெய்ஸ்கியின் நாவலில் நிகோலய் பதினான்கு வயது சிறுமியிடம் வல்லுறவு கொள்கிறான்.பின்னர் அவள் தற்கொலை செய்து கொள்ளப்போகிறாள் என்று அறிந்து அதை தடுக்காமல் விட்டுவிடுகிறான்.அவனை அந்த குற்றவுணர்வு பீடித்துக்கொள்கிறது.அவன் இறுதியில் அந்த சிறுமியை போல தற்கொலை செய்து கொள்கிறான்.அந்த சிறுமி தற்கொலை செய்து கொண்ட நான்கு வருடங்கள் கழித்து ஒரு பாதிரியாரை சந்தித்து அவன் செய்த குற்றத்தை சொல்லி அதை பகிரங்கமாக பத்திரிக்கையில் வெளியீட போவதாக சொல்கிறான் நிகோலய்.அதற்கு அந்த பாதிரியார் டிகோன் குற்றங்களில் இரண்டு வகை இருக்கின்றன.ஒரு வகையான குற்றங்களை நாம் ஒப்புக்கொள்ளும் போது நம் மீது கோபமும் அதே நேரத்தில் ஒப்புக்கொண்டதால் அனுதாபமும் தோன்றலாம்.இன்னொரு வகை குற்றங்கள் இருக்கின்றன.அவற்றை ஒப்புக்கொள்ளும் போது நம் மீது ஒரு கேலிப்புன்னகையையே அது தோற்றுவிக்கிறது.உன்னுடைய குற்றம் அத்தகையது.நீ அதை ஒப்புக்கொள்வதால் எந்த பலனும் இல்லை, மாறாக ஊருக்கு வெளியே நான் சொல்லும் பாதிரியாரிடம் சென்று அவருடன் தங்கி ஊழியம் செய் என்கிறார் டிகோன்.நிகோலய் குற்றத்தை ஒப்புக்கொள்வில்லை.மாறாக அவன் மேலும் பல குற்றச்செயல்களுக்கு காரணமானவனாக இருக்கிறான்.இறுதியில் தற்கொலை செய்துகொள்கிறான்.

இங்கே நிகோலய் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்வதால் அடையப்போவது ஒன்றுமில்லை.அது ஒரு கேலிப்புன்னகையையே உருவாக்கும்.மாறாக அவனுக்கு ஊருக்கு வெளியே பாதிரியாரிடம் சென்று ஊழியம் செய்யவும் அவனுக்கு விருப்பமில்லை.ஆனால் அவன் குற்றவுணர்வால் அவதிக்குள்ளாகுகிறான்.அது அவனை பல இன்னும் பெரிய குற்றங்களை கண்டுகொள்ளாமல் இருக்கச்செய்கிறது.இறுதியில் தற்கொலை செய்து கொள்ள வைக்கிறது.இது ஒரு வகையில் ஆண்டர்சனின் குற்றவுணர்வை போன்றதுதான்.செயல் தளத்தில் அந்த குற்றவுணர்வால் எந்த பலனும் இல்லை.யாரும் நண்மை அடையவில்லை.

குற்றவுணர்வில் இருப்பவர்கள் தங்களை சுற்றியிருப்பவர்களை துன்பத்திற்கு உள்ளாக்குகிறார்கள்.அந்த குற்றவுணர்வை மேலும் மேலும் தேங்காயை சுரண்டுவது போல சுரண்டி மனம் வருந்தி பிறரையும் வருத்தம் கொள்ளச்செய்கிறார்கள்.குற்றவுணர்விலிருப்பவர்கள் அதிக கோபம் கொள்கிறார்கள்.அதிக அச்சம் கொள்கிறார்கள்.அவர்களுடைய மனம் எப்போதும் தீவிரமான உரையாடல்கள் நிரம்பியதாக இருக்கிறது.தீவிரமான உரையாடல்கள் இருப்பதால் மனம் எப்போதும் மிகவும் அழுத்தம் நிரம்பியதாக இருக்கிறது.அதனால் அவர்கள் பல சமயங்களில் எளிதாக கீழ்மையான செயல்களை செய்கிறார்கள்.ஒரு போதும் மகிழ்ச்சியான மனநிலையில் அவர்கள் அத்தகைய கீழான காரியத்தை செய்யமாட்டார்கள்.ஏனேனில் கீழான ஒரு செயல் அவர்களை சிறிது நேரமே எனினும் அந்த குற்றவுணர்விலிருந்து தப்பிக்க வைக்கிறது.தங்களுடைய குற்றவுணர்வின் மன அழுத்தம் தாங்க முடியாமல் அவர்கள் செய்யும் சில கீழான செயல்கள் மேலும் அவர்களை குற்றவுணர்வுக்கு உள்ளாக்குகிறது.சில நேரங்களில் தங்களுடைய குற்றவுணர்வால் தாங்கள் செய்யும் பிற கீழான செயல்களை அவர்களால் குற்றம் என்றே புரிந்துகொள்ள முடிவதில்லை.அவர்கள் மேலும் மேலும் தீவிரமான மன உரையாடல்களுக்கு சென்று மன அழுத்தம் தாங்காமல் உருக்குலைகிறார்கள்.

ஒரு குற்றவுணர்வு செயல் தளத்தில் ஆக்கபூர்வமான நண்மை பயக்கக்கூடிய ஒரு செயலாக மாற முடியுமென்றால் அதை செய்யலாம்.நிகோலய் ஊழியம் செய்திருந்தால் அது ஆக்கப்பூர்வமான செயல்.இல்லாவிட்டால் அந்த குற்றவுணர்வை ஒரு மன்னிப்பால் கடந்து செல்ல முடியும் என்றால் அதை செய்யலாம்.நிகோலையால் அந்த சிறுமியிடம் சென்று மன்னிப்பு கோர முடியாது, அவள் இறந்து விட்டாள்.நம்மால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இனி நண்மையாக ஒன்றும் செய்ய இயலாது என்றால் அந்த குற்றவுணர்வை விட்டுவிடவும் செய்யலாம்.நிகோலய் அந்த குற்றவுணர்விலிருந்து விடுபட்டு இருக்கலாம்.அதை ஒரு சிலுவை போல ஏந்திக்கொண்டு அலைவதில் யாருக்கும் லாபமில்லை.பாதிக்கப்பட்டவர்களுக்கும் தான்.மாறாக அது அவர்களை சுற்றியிருப்பவர்களை பாதிக்கிறது.அவர்கள் தங்கள் எல்லா செயல்களையும் அந்த குற்றவுணர்வின் வழியாகவே பார்க்கிறாரகள்.அதன் பாதிப்புகள் ஏராளமானவை. 

எல்லோரும் மனிதர்கள்தான்.கீழ்மையும் தீமையுமான குணங்களால் ஆனவர்கள்தான்.தெரிந்தே சில தவறுகளை செய்கிறோம்.சமயங்களில் தெரியாமல் செய்கிறோம்.குற்றவுணர்களை சில நேரங்களில் தூக்கி எறிந்து இயல்பாக வாழ்வதன் மூலமாகவே ஆக்கபூர்வமான காரியங்களை செய்யலாம்.ஆண்டர்சன் அவருடைய முப்பது வருட வாழ்வை குற்றவுணர்வால் வீணடித்துவிட்டார்.அதனால் அவருக்கோ போபால் மக்களுக்கோ லாபமில்லை.ஒன்று அவர் இந்தியா வந்து வழக்கை சந்தித்திருக்கலாம்.இல்லையென்றால் அமெரிக்காவில் அமர்ந்து கொண்டு எனக்கும் அந்த விபத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று மனதில் ஒரு நியாயப்படுத்தலை உருவாக்கிக்கொண்டு நிம்மதியாக வாழ்ந்து மரணித்திருக்கலாம்.இரண்டுக்கும் நடுவே இருந்துக்கொண்டு அவர் அவருடைய மனைவியை துயரப்படுத்தியிருக்கிறார்.இதில் ஒரு உளவியல் காரணம் இருக்கிறது.குற்றவுணர்வுகள் ஒருவகையில் செளகரியமானவை.ஏனேனில் ஆண்டர்சன் அந்த குற்றவுணர்வோடு தன் படுக்கையில் நிம்மதியாக உறங்கலாம்.நன்றாக உண்ணலாம்.தினசரி வாழ்வை செளகரியமாக கழிக்கலாம்.தேவைப்படும் போது குற்றவுணர்வு கொள்ளலாம்.அவரை சுற்றியிருப்பவர்களிடம் அதைச் சொல்லி ஒரு அவதியற்ற துயரத்தை(Melancholy) அனுபவிக்கலாம்.அது காலப்போக்கில் ஒரு மனநோய் போல நம்மை பீடித்துக்கொள்கிறது.சிந்திக்க வேறு விஷயங்கள் இல்லையென்றால் மனம் உடனே அந்த குற்றவுணர்வை எடுத்துக்கொள்கிறது.அது ஒரு அவதியற்ற துயரத்தை மனதில் உருவாக்குகிறது.அது உருவாக்கும் எரிச்சலால் பிறரை துன்புறுத்தி நாமும் துன்புற்று இன்னும் பிரச்சனைகளை பெரிதாக்கிக்கொள்கிறோம்.ஒரு கூழாங்கல்லை நதியில் விடுவது போல நாம் நமது குற்றவுணர்வை கூட சமயங்களில் விட்டுவிடுவது மகிழ்ச்சியானது , ஆக்கபூர்வமானது , நண்மை பயக்கக்கூடியது.ஏனேனில் குற்றவுணர்வுகள் செளகரியமானவை.தேவதச்சனின் கவிதை ஒன்று இது:

என் நட்சத்திரங்களை வானில் வைத்தேன்
என் ஜலத்தை ஆற்றில் விட்டேன்
மனனியை சரித்திரத்தில் நிறுத்தினேன்
இனி தன் இலையை தானே வியக்கும்
மரநிழல் ஊஞ்சலாடுவேன்
என் வேலை தான் முடிந்ததே.

ஜலத்தை ஆற்றில் விடுவது போல சமயங்களில் குற்றவுணர்வை விட்டுவிடுவதன் மூலம் நாம் இன்று புதிதாக பிறந்தது போல மகிழ்ச்சியுடன் மரநிழல் ஊஞ்சலாடலாம்.

குறிப்பு : ஆண்டர்சன் குற்றவுணர்வு கொண்டாரா இல்லையா என்பது சட்டத்திற்கு முன் ஒரு விஷயமே இல்லை.போபால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கான நீதி அவர்களுக்கு இன்றும் கிடைக்கவில்லை.ஆண்டர்சனின் குற்றம் இரண்டு தனிநபர்களுக்கு மத்தியில் நடந்த விஷயமல்ல.அது ஒரு தொழிற்சார் குற்றம்.பேரழிவை உருவாக்கிய சம்பவம்.அவர் இந்தியா வந்து வழக்கை சந்தித்திருக்க வேண்டும்.அதுவே அறம்.இந்த கட்டுரை ஒரு தனிநபராக ஆண்டர்சனின் குற்றவுணர்வின் செயல் தளத்திலான பலன் என்ன என்பதை ஆராய முயல்கிறது , அவ்வளவுதான்.


No comments: