கோட்ஸ்டாண்டில் தொங்கும் உடல்
நகுலனின் கோட்ஸ்டாண்ட் கவிதைகள் என்று தொகுக்கப்பட்ட கவிதைகளில் முதல் கவிதை "இல்லாமல் இருப்பது".

இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்.

நமது உடல் அதன் புலன்கள் ஒரு இருப்பை கோருகிறது.அது தன்னை நிறுவிக்கொள்ளவே பிரயத்தனம் கொள்கிறது.ஆனால் காலம் கண்ணாடியாகக் கரைகிறது.ஒரு நதியாக ஒரு ஜலப்ரளயமாகச் சுழித்துச் செல்லுகிறது.விறைத்த கண்களுடன் அதன் மீது செத்த மீன்கள் செல்கின்றன.இறுதியில் நாம் இல்லாமல் போகிறோம்.நகுலன் இந்த காலத்தால் மறைந்துவிடும் நிலையைத்தான் சொல்கிறாரா என்றால் இல்லை.கோட்ஸ்டாண்ட் கவிதைகள் தொகுப்பில் உள்ள இந்த முதல் கவிதைக்கு கடைசிக்கவிதை என்ற தலைப்பிடப்பட்ட கவிதையே பதில்.

கோட்ஸ்டாண்ட் கவிதைகள் 59 வயது திருமணம் ஆகாத தனிமனிதனின் இருப்பு சார்ந்த துயரை சொல்லும் புகார் கவிதைகள் என்று வகைப்படுத்தலாம்.அது எளிதானதும் கூட.ஆனால் அவை அதுமட்டுமே அல்ல.உண்மையில் அவை அதுவல்ல.நகுலன் அல்லது நவீனன் அல்லது அவனுக்கு 59வயது ஆகிவிட்டது.வாழ்க்கை சலித்துவிட்டது.உடலின் உறுப்பான கையை வைத்து நிறைய எழுதிவிட்டான்.கண் நிறைய பார்த்துவிட்டது.மூளை நிறைய சிந்தித்துவிட்டது.மனம் அதையும் இதையும் நினைத்து அலுத்துவிட்டது.சரி, இந்த புலன்களை தாங்கி நிற்கும் உடலை சற்று தூக்கி அந்த கோட்ஸ்டாண்டில்தான் மாற்றி வைப்போமே என்று அவன் நினைக்கிறான்.விருக்ஷம் அற்ற பொந்தாக மாறினால் எப்படியிருக்கும் என்பதாகவும் இந்த கவிதைகளை பார்க்கலாம்.

அப்போது அந்த விருக்ஷம் அற்ற பொந்தாக மாறிய அவன் வெளி வாசல் திண்ணையில் இருக்கிறான்.அங்கு கண் தெளிவான பார்வைக்கு, வாய் வெற்றிலை பாக்குக்குப் பரபரக்கிறது.ஆனால் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.அப்போது அந்த உடல் அவனை பார்த்து கேட்கிறது.என்னை தூக்கி எறிந்துவிட்டாய் இப்பொழுது தெரிகிறதா என்று.

வேறொரு நாள் நள்ளிரவில் சூரல் நாற்காலியில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருக்கின்றான்.அருகில் தரையில் ஒரு பாம்பு சுருண்டு கிடக்கிறது.இங்கு பாம்பு சுருண்டு கிடக்கிறது என்பது உடல் அற்று நெளிந்து நெளிந்து தன்னையே சுற்றிக் கொண்டு கடைசியில் தலையும் வாலும் ஒன்று சேர வெறும் சுன்னமாகக் சுருண்டு கிடக்கும் நிலைதான்.
சுன்னமாகக் சுருண்டு கிடக்கும் அவன் எல்லைகளைக் கடந்து கொண்டிருக்கிறான்.வெறும் சுன்னமாக மாறியவன் உடல் அற்றவன்.உடல் அற்றவன் புலன்கள் அற்றவன்.புலன்கள் அற்றவனிடம் காமம்,குரோதம்,கோபம் ஆகிய உணர்வுகளை தூண்ட முடியாது.சிலையாக வீற்றிருக்கும் மேதைகளை காலக்கறையான் திண்றுகொண்டிருக்கிறது.அவன் லட்சியவாதங்கள் தோற்றுவிட்டதால் துவண்டு போய் டாஸ்மாக்கில் நண்ணீர் அருந்த போவதில்லை.ஏனேனில் அவனுக்கு இருப்பே இல்லை.இருப்பு அற்றவனுக்கு உலகம் இல்லை.உலகம் அற்றவனுக்கு லட்சியவாதங்களும் மேதைகளும் அவர்களுடைய சிலைகளும் அவர்கள் உருவாக்கிய சித்தாந்தங்களும் ஒன்றுமில்லை.அவன் அதை கடந்துசெல்கிறான்.இறந்தவர்களின் சாந்நித்தியம் , இருப்பவர்களின் மிரட்டல் இதுவும் இனி அவனை ஒன்றும் செய்ய முடியாது.அவன் எல்லோரும் பெளதிக விதிகளுக்கு உட்பட்டு பின்தங்கி நிற்கையில் எல்லைகளை கடந்துகொண்டிருக்கிறான்.அப்போது அவனை யாரோ நீங்கள் யார் என்று கேட்கிறார்கள்.அவனுக்கு அவன் யார் என்பது மறந்துவிட்டது.அவன் இல்லாமல் ஆகிறான்.அவன் அடையாளம் அற்றவனாக மாறுகிறான்.ஆக நகுலன் முன்வைக்கும் இல்லாமல் போகிறோம் என்பது உடல் அற்று சுன்னமாக ஒரு பொந்தாக மாறிய நிலையில் எல்லைகளை கடப்பதால் யாருமற்றதாக மாறும் நிலை.

இதே கோட்ஸ்டாண்ட் தொகுப்பில் தாடி என்று ஒரு கவிதை இருக்கிறது.தாடி வைப்பது , மொட்டை அடித்துக்கொள்வது நாம் அறிந்துதான் செய்கிறோம்.உடல் வழியாக ஒரு அடையாளத்தை உருவாக்குகிறோம்.நான் பார்த்தவரை நகுலனின் எந்த புகைப்படத்திலும் அவருக்கு தாடியில்லை.

இறுதியாக உடலை கோட்ஸ்டாண்டில் மாட்டிவிட்டு வெளியில் சுன்னமாக மாறி எல்லைகளை கடந்து அவர் வெளிதிண்ணையில் அமர்ந்திருக்கிறார்.அப்போது ராமச்சந்திரன் என்று ஒருவர் அவரை பார்க்க வருகிறார்.அவரை ராமச்சந்திரனா என்று கேட்கிறார்.வந்தவர் ராமச்சந்திரன் என்கிறார்.அதன் பின் இவர் எந்த ராமச்சந்திரனா என்று கேட்கவுமில்லை அவர் சொல்லவுமில்லை.ஏனேனில் வெளித்திண்ணையில் அமர்ந்திருப்பவர் இந்த ராமச்சந்திரனின் உடலை கழற்றி கோட்ஸ்டாண்டில் மாட்டிவிட்டால் அவரும் தன்னை போலவே ஒன்றுமில்லைதான் என்பதை அறிந்துவிட்டார்.அதனால் எல்லா ராமச்சந்திரன்களும் சாரம்சத்தில் ஒன்றுதான் , ஒன்றுமில்லையும்தான் என்பதால் அவர் எதுவும் கேட்கவில்லை.

ராமச்சந்திரன் சென்ற பின் அதே வெளித்திண்ணையில் அவர் அந்தி பொழுதில் அமர்ந்திருக்கிறார்.கையெழுத்து மறையும் வேளையில் மரம்,தந்திக்கம்பம், வீடு எல்லாமே மறைகின்றன.இருள் மாத்திரம் எஞ்சி நிற்கிறது.நம் கண் விழியில் ஒளிபட்டு பிரதிபலிக்காததால் மரம் ,தந்திக்கம்பம் , வீடு எல்லாம் மறைந்துவிட்டன.ஆனால் அவை உண்மையில் இருக்கின்றன.நாம் இல்லாவிட்டாலும் இருக்கும்.நாம் எதையும் உருவாக்குவது இல்லை.

யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்துகொண்டிருக்கிறது?
எல்லாம் 

என்ற கவிதையை இப்படி மாற்றி எழுதலாம்.

எல்லோரும் இருக்கும் பிரதேசத்தில்
என்ன நடந்துகொண்டிருக்கிறது?
ஒன்றுமில்லை.

இங்கு "யாருமில்லாத" என்பதிலும் "எல்லோரும்" என்பதிலும் வருவது மனிதர்கள் மட்டும்தான்.மரம் , தந்திக்கம்பம் ,வீடு ஆகியவற்றை இவை குறிப்பதில்லை.அதையும் அவரை ஸ்டேஷன் என்ற கவிதையில் சொல்லிவிட்டார்.

ரயிலை விட்டிறங்கியதும்
ஸ்டேஷனில் யாருமில்லை
அப்பொழுதுதான்
அவன் கவனித்தான்
ரயிலிலும் யாருமில்லை
என்பதை;
ஸ்டேஷன் இருந்தது,
என்பதை
‘அது ஸ்டேஷன் இல்லை’
என்று நம்புவதிலிருந்து
அவனால் அவனை
விடுவித்துக் கொள்ள
முடியவில்லை
ஏனென்றால்
ஸ்டேஷன் இருந்தது.

ஆக , இந்த "யாருமில்லாத" என்பது மனிதர்களை மட்டுமே குறிக்கின்றது என்பது முக்கியம்.ஏனேனில் நகுலன் முன்வைப்பது அத்வதை நோக்கு அல்ல.நீயே அது , அனைத்தும் பிரம்மம் என்று அத்வைத்த தரிசனத்தை தன் கவிதைகளில் அவர் முன்வைக்கவில்லை.நகுலனின் இந்த கோட்ஸ்டாண்ட் கவிதைகள் நாம் நமது உடல் வழி அடையாளங்களை கழற்றி கோட்ஸ்டாண்டில் மாட்டிவிடுவதன் மூலமாக "நாம் ஒன்றுமில்லை" என்ற தீவிரமான ஆன்மிக நிலையை அடைவதை குறித்து பேசுகின்றன.நாமும் நமது  அடையாளங்களை சுமந்து திரியாமல் சற்று வெளிவாசல் திண்ணையில் அமரந்து தளர்வான மனநிலையில் கண்ணாடியாக கரையும் காலத்தை வேடிக்கை பார்த்தவாறு அமர்ந்திருக்கலாம்.அப்போது அதில் நாம் விறைத்த கண்களுடன் செத்த மீன்களாக மிதந்துகொண்டிருப்பதை பார்த்து புன்னகைக்கலாம்.


No comments: