குட்டிப்பெண்





குட்டி பட்டுப்பாவடையும் சட்டையும் அணிந்திருந்த குட்டிப்பெண் இரட்டை ஜடையை கைகளால் வலதும் இடதுமாக இழுத்தவாறு கோளரங்கத்திலிருந்து குட்டி பாதங்களால் தை தை என்று நடை வைத்து வெளியே ஒடினாள்.ஏன் கிரகங்களையும் சூரியனையும் நட்சத்திரங்களையும் பால்வெளியையும் மேலே திரையில் பார்த்துக்கொண்டிருந்த போது திடீரென்று எழுந்து இறை வாழ்த்து பாடினாய் என்று கேட்டேன்.மறுபடியம் ஜடையை இடது வலதுமாக இழுத்தவாறு தலையை ஒரு பக்கம் சாய்த்து பொக்கை பல் தெரிய புன்னகைத்தாள்.அவளை தூக்கி என் மோட்டார் சைக்கிளில் உட்காரவைத்தேன்.அவள் வண்டியை ஒட்டும் தோரணையில் ஹேண்டில் பார்களை பிடித்துக்கொண்டு 'டுர் டுர்' என்று சத்தம் எழுப்பினாள்.வண்டியை கிளப்புகையில் ஒரு பிச்சைகாரன் வந்தான்.அவன் முகம் கோரமாக இருந்தது.அருவெருப்பில் நான் முகத்தை திருப்பிகொண்டேன்.பூக்குட்டி மறுபடியும் இறைவாழ்த்து பாட ஆரம்பித்தாள்.எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளந்தான் சுத்த சித்துருவாய் எம் பெருமான் நடம்புரியும் இடம் என்று எண்ணியவாறு வண்டியை கிளப்பினேன்.


No comments: