அடையாளம்





12 Years a Slave படத்தில் சாலமன் என்ற சுதந்திர மனிதன் சிலரால் கடத்தப்படுகிறான்.அவனது அடையாளம் மாற்றப்படுகிறது.அவன் அடிமை ஆகிறான்.அடுத்த பண்ணிரென்டு வருடங்களில் இரண்டு முதலாளிகளிடம் வேலை செய்து இறுதியில் விடுவிக்கப்படுகிறான்.ஒரு முறை ஜெயமோகனிடம் ஒரு கடிதத்தில் இன்றைய படைப்பூக்கமற்ற சூழலில் நாம் மிகவும் அந்நியப்பட்டிருக்கிறோம் என்று ஏதோ எழுதியிருந்தேன்.அதற்கு அவர் எழுதிய பதிலில் பெரிய யுத்தங்கள் நடந்த காலங்களை எண்ணிப்பாருங்கள் என்று சொல்லியிருந்தார்.நமது வரலாற்று பிரக்ஞை பொதுவாக நூறு வருடங்களுக்குள்தான் சுற்றிவருகிறது.அதனால்தான் தமிழில் தொடர்ந்து கோட்பாடுகள் என்றால் இருத்தலியத்திலிருந்து ஆரம்பித்து சமீபத்திய கோட்பாடுகளை பற்றி பேசியபடி இருக்கிறோம்.இங்கே நினைவேக்கம் சார்ந்து எழுதும் பலரும் ஏழுபதுகளில் என்பதுகளில் எல்லாம் உலகம் நன்றாக இருந்தது என்றும் இப்போது தாராள பொருளாதார கொள்கையால் எல்லாம் மாறிவிட்டது , நாம் நிறைய விஷயங்களை தொலைத்துவிட்டோம் என்று சென்னை பெங்களூர் அமெரிக்கா போன்ற ஊர்களில் அமர்ந்துகொண்டு பேசிகிறார்கள்,எழுதுகிறார்கள்.ஏழுபதுகளில் என்பதுகளில் யாருக்கு கிராமங்களும் சிற்றூர்களும் நன்றாக இருந்தது என்ற கேள்வியை அவர்கள் கேட்டுக்கொள்வதில்லை.


நாம் பெரும்பாலும் நம்மை சுற்றிய மனிதர்களோடு நம் வாழ்வை அடையாளப்படுத்தி நம் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று பார்த்துக்கொள்கிறோம்.உதாரணமாக உங்கள் நண்பர் நல்ல வேலையில் இருந்தால் நாம் நல்ல வேலையில் இல்லை என்று வருத்தப்படுகிறோம்.நம் நண்பர் அவரின் திருமண வாழ்க்கை முறிந்துவிட்டது என்றால் நமக்கு திருமண வாழ்க்கை நன்றாக அமைந்திருக்கிறது என்று நினைத்து நிறைவு அடைகிறோம்.நமது நண்பர்கள், உறவினர்கள், சகோதரர்கள், நாம் பார்க்கும் சினிமா,படிக்கும் நாவல் ஆகியவற்றோடு நாம் நம்மை அடையாளப்படுத்திக்கொள்கிறோம்.உண்மையில் பிறரின் வாழ்க்கை பற்றியெல்லாம் யாருக்கும் அக்கறை இருப்பதில்லை.நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நிறைவாக இருக்கிறீர்கள் என்று சொன்னால் கேட்பவர் வருத்தப்படுவார், மிக மோசமாக இருக்கிறது என்று சொன்னால் கேட்பவர் மகிழ்ச்சியடைவார்.மற்றபடி நாம் எப்படி இருக்கிறோம் என்பதை தெரிந்து கொண்டு அதன் வழியாக அவர் தன் வாழ்வை மதிப்பிடுவார்.அவ்வளவுதான்.அதனால் யாராவது என்னை நான் எப்படி இருக்கிறேன் என்று கேட்டால் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று சொல்லி வைப்பேன்.சம்பளம் கேட்டால் வாங்குவதை விட கொஞ்சம் அதிகமாகவே சொல்வேன்.


மேலே சொன்ன 12 Years a Slave படத்தில் ஒரு பெண் சோப்பு கட்டி வாங்க சென்றதற்காக சாட்டையால் விளாசப்படுகிறார்.ஆண்களும் பெண்களும் ஒரே இடத்தில் உடைகள் ஏதும் இல்லாமல் குளிக்கிறார்கள்.ஒன்றாக உறங்குகிறார்கள்.அவர்கள் விற்கப்படுவதற்காக நிர்வானமாக நிறுத்தப்படுகிறார்கள்.மனிதன் இன்னொரு மனிதனை அடிமைப்படுத்தும்போது அவனுடைய உடலை ஒடுக்கவதில்தான் அக்கறை கொள்கிறான்.நாம் இந்த ஒடுக்கப்பட்ட மனிதர்களோடு நம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் போது நாம் மேலும் விடுதலை அடைகிறோம்.


Divided we fall திரைப்படம் செக் நாட்டை ஜெர்மனி ஆக்கிரமித்த காலத்திலிருந்து துவங்குகிறது.அதில் ஒரு யூதர் முகாம்களிலிருந்து தப்பித்து தன்னிடம் பணிபுரிந்த ஒரு கிறுஸ்துவரின் வீட்டில் அடைக்கலம் புகுவார்.அவரை அந்த வீட்டில் தனிஅறை ஒன்றில் யாருக்கும் தெரியாமல் அந்த தம்பதிகள் தங்க வைப்பார்கள்.அந்த கிறுஸ்துவ தம்பதிகளுக்கு குழந்தை இருக்காது.அந்த பெண்ணின் கணவர் மருத்துவரிடம் பரிசோதிக்கும் போது அவருக்கு தந்தையாகும் வாய்ப்பு இல்லை என்பதை அறிந்துகொள்வார்.இந்த சமயத்தில் ஜெர்மனி படையிலிருந்த தன் மகன் இறந்துபோனதால் அந்த தம்பதிகள் வீட்டில் தான் தங்க விரும்புவதாக ஒரு அதிகாரி சொல்வார்.அவரை தங்க வைத்தால் யூதர் அவர்கள் வீட்டிலிருப்பது தெரிந்துவிடும் என்பதால் அந்த பெண் தான் கர்ப்பமாக இருப்பதாக சொல்வார்.கணவர் தன் துணைவி தனக்கு துரோகம் செய்துவிட்டதாக நினைத்து மனபுழுக்கம் அடைவார்.ஆனால் தான் சொன்னது ஒரு பொய் என்று அவருடைய துணைவி பின்னர் புரியவைப்பார்.ஆனால் அவர் உண்மையில் கர்ப்பமாக இல்லையென்றால் பிரச்சனை இன்னும் பெரிது என்று கணவர் மேலும் குழும்புவார்.தன்னால் தந்தையாக முடியாத சூழலில் அந்த யூதரோடு தன் துணைவி உடலுறவு கொள்வது மட்டுமே இதற்கான தீர்வு என்று முடிவு செய்வார்.இருவரையும் சம்மதிக்க வைப்பார்.பின்னர் ஒருநாள் தன் வீட்டிலிருக்கும் மேரி படத்தை பார்க்கும் போது அதில் தன் துணைவியை கண்டுகொள்வார்.சில மாதங்கள் கழித்து யுத்தம் முடிந்த நிலையில் அந்த குழந்தையை அவர் டராலியில் வெளியே எடுத்து செல்லும் காட்சியோடு படம் நிறைவு பெறும்.இதில் அந்த கணவர் தன் பிரச்சனையை வெளியில் யாரிடமும் சொல்ல முடியாது.நண்பர்களோடு பகிர்ந்துகொள்ள முடியாது.அந்த குழந்தையின் புன்னகை அவருக்கு கேலிப்புன்னகையாக தெரியலாம்.ஆனால் அவர் மேரி எனும் தொன்மம் வழியாக அந்த கொதிப்பான பிரச்சனைகளிலிருந்து வெளியே வருகிறார்.அவர் தன் துணைவியை மேரியோடு அடையாளப்படுத்திகிறார்.


பொதுவாக நல்ல பெற்றோர் , ஆரோக்கியமான வளர்ப்பு சூழல் , படிப்பு வேலை குடும்பம் என்றிருக்கும் போது ஒருவருக்கு இந்த அடையாளப்படுத்திக்கொள்வது பெரிய விஷயமாக இருக்காது.ஆனால் ஏதோ ஒரு இடத்தில் நீங்கள் உங்கள் நண்பர்களை போல அல்லாமல் , உறவினர்களை போல அல்லாமல் ஏதோ ஒரு விஷயத்தால் தனிமைப்படுகிறீர்கள் என்கிற போது நீங்கள் உங்களை போன்ற ஒரு சகமனிதனுக்காக ஏங்குகிறீர்கள்.திருநங்கைகள் தங்களை மகாபாரத கதாபாத்திரங்களோடு அடையாளப்படுத்திக்கொள்வதை நாம் இப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும்.படைப்பூக்கமற்ற வேலையை பெருநகரங்களில் செய்யும் ஒரு மனிதன் தன்னை தன் ஜாதியோடு அடையாளப்படுத்திக்கொள்கிறான்.மனிதன் இயல்பிலேயே தன்னை ஒரு மந்தையாகவே கருதுகிறான்.அதனால் தான் தனிமைப்படுத்தும்போது அவன் துன்பப்படுகிறான்.அப்போது அவன் உருவாக்கி கொள்ளும் அடையாளங்கள் சமயங்களில் தொன்மம் சார்ந்ததாக , சமயங்களில் கருத்தியல் சார்ந்ததாக , சமயங்களில் ஜாதி சார்ந்ததாக என்று பல்வேறு வடிவங்களை எடுக்கிறது.


எனக்கு கிலாய்ட்ஸ் (Keloids) என்ற சருமப்பிரச்சணை இருக்கிறது.ஒரிடத்தில் காயம் அல்லது பரு ஏதாவது வந்தால் அது குணமடைந்தபின் அந்த இடத்தில் தோல் இன்னும் அதிகமாக வளர்ந்து கட்டிபோல ஆகிவிடும்.இது நோய் என்று சொல்ல முடியாது.Cosmetic problem.ஆனால் பார்ப்பதற்கு அருவெருப்பாக இருக்கும்.இதை குணப்படுத்த முடியாது.வருவதை தடுக்கவும் முடியாது.நண்பர்கள் சிலர் தொடர்ந்து ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கேட்கும் போது இந்த பிரச்சனையை சொல்வேன்.இந்த மருத்துவம் அந்த மருத்துவம் என்று சொல்லிவிட்டு இறுதியாக இது தொற்றக்கூடியதா என்று கேட்டு தெரிந்துகொள்வார்கள்.என் நண்பன் ஒருவன் நான் சரியாக குளிக்காததால்தான் இந்த பிரச்சனை வந்ததாக சொல்வான்.இப்பொதெல்லாம் யாராவது கேட்டால் உண்மையை சொல்வதா வேண்டாமா என்று குழப்பமாக இருக்கிறது.என் சகோதரன் ஒருவன்தான் இந்த விஷயத்தில் வேடிக்கையாக எளிமையாக பேசுவான்.உன் காதல் விஷயத்திலும் உனக்கு பெரிய பல்ப் ,வீட்ல பொண்ணு பாக்கலாம்னு பாத்தா உடம்பும் ரிப்பேர், ஏதோ போன ஜென்மத்துல பாவம் பண்ணியிருக்க போல.ஆனா ஒன்னும் பிரச்சனை இல்ல, எப்படியும் கல்யாணம் பண்ணிக்க முடியாது, பேசாம ஆறு வருஷம் கடுந்தவம் இருந்தால் புத்தர் போல ஆகிவிடலாம் என்று சொல்வான்.நிம்மதியாக சிரித்து வைப்பேன். உண்மையில் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்வது பெருநகரத்தில் பெரிய விஷயம் இல்லை.நான் மிக செளகரியமான வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வருகிறான்.ஆனால் திருமணம் செய்துகொள்வது என் தேர்வில் இல்லை என்பதே என் பிரச்சனையாக இருந்தது.எனக்கு இந்த பிரச்சனையின் போது சில விஷயங்கள் புரிந்தது.இதுபோன்ற விஷயங்களால் நான் ஏதோ ஒரு வகையில் உடல் அளவில் நிராகரிப்படுகிறேன்,புறக்கணிக்கப்படுகிறேன்,ஒடுக்கப்படுகிறேன்.அப்படியாக நிராகரிப்படும் புறக்கணிப்படும் ஒடுக்கப்படும் மனிதர்களோடு என்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் எண்ணம் இயல்பாகவே உருவாகியது என்று நினைக்கிறேன்.அப்படித்தான் முதல்முறையாக நம் சமூகத்தில் தலித் பிரச்சனையை நான் புரிந்துகொண்டேன்.டி.ஆர்.நாகராஜின் எரியும் பாதம் புத்தகத்தை பற்றிய ஒரு கட்டுரையை இந்த பிளாகில் எழுதியிருக்கிறேன்.எனக்கு கிலாய்ட்ஸ் பிரச்சனை இல்லையென்றால் ஒடுக்கப்பட்டோரின் உலகத்தை புரிந்துகொண்டிருப்பேன் என்று சொல்ல முடியாது. ஒடுக்கப்பட்டவன் கோருவது பரிதாபத்தையோ , ஆறுதலையோ அல்ல, அவன் கோருவது சுயமரியாதையை என்பது புரிந்த போது அம்பேத்கர் எத்தனை பெரிய சிந்தனைவாதி என்பது புரிந்தது.ஒருபோதும் ஒடுக்கப்பட்டவனின் வலியை காந்தியால் புரிந்துகொள்ள முடியாது.அவர் எப்போதும் எங்கும் கொண்டாடப்பட்டவர்.


நான் சிற்றூர் வாழ்க்கை குறித்து முன்னர் ஏங்கியிருக்கிறேன்.என் குடும்பம் நிலங்கள் வைத்திருந்தது.கெளரவமான அடையாளம் இருந்திருக்கிறது.ஆனால் பெருநகரத்தில் நான் யாருமில்லை.அதுவே சிற்றூர் குறித்த ஏக்கமாக இருக்கிறது என்று புரிந்துகொண்டேன்.கிராம ஜாதி அமைப்பால் ஒடுக்கப்பட்டவன் இன்று பெருநகரத்தை சுதந்திர வெளியாக பார்ப்பதற்கான சாத்தியம் நிறைய இருக்கிறது என்பது புரிந்த போது எனக்கு அந்த சிற்றூர் ஏக்கமெல்லாம் போய்விட்டது.எனக்கு இயல்பாகவே கடவுளோ தொன்மமோ பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தியதில்லை.என்னால் அவற்றோடு அடையாளப்படுத்திக்கொள்ள இயலவில்லை.நாம் இந்த உலகில் வாழ்கிறோம், இந்த உலகின் விஷயங்களை பற்றி கவனிப்போம் என்ற கருத்தியல் எனக்கிருந்தது.அதனால் எனக்கு ஒரு பிரச்சனை காரணமாக நான் தனிமைப்படும் போது நான் என் சகமனிதர்களிலேயே என்னை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பினேன்.எனக்கு வாழ்வை அப்பதமாக பார்க்கும் கருத்தும் , வேற்றுமையின்மையும் இயல்பாகவே பிடித்திருந்தது.மேலும் 12 Years a Slave படத்தை பார்த்துக்கொண்டிருந்த போது நம் வாழ்க்கை குறித்து இத்தகைய புகார்கள் எல்லாம் வேடிக்கையானவை என்று தோன்றியது.


சினிமா இயக்குனர் பாலாவின் திரைப்படங்களில் தொலைந்து போன பால்ய காலம் தொடர்ந்து வருகிறது.நந்தாவில் அவன் சீர்திருத்த பள்ளியில் வளர்கிறான், பிதாமகனில் அவன் சுடுகாட்டு சித்தனாக இருக்கிறான், நான் கடவுளில் அவன் சிறுவயதிலேயே காசிக்கு அனுப்படுகிறான்.நந்தா அவனது அன்னை மடியின் கதகதப்புக்காக ஏங்குகிறான்.அதுவே அவனை வாழ்நாள் முழுவதும் துரத்துகிறது.நந்தா மிக அற்புதமான திரைக்கதையை கொண்ட படம்.ஒரு முரணியக்கம்.அன்னை நந்தா மிகுந்த வன்மம் கொண்டவனாக இருப்பதால் அவனிடமிருந்து விலகுகிறாள்.அவள் விலகுவதால் அவன் மேலும் வன்மம் கொண்டவனாக மாறுகிறான்.பாலாவின் படங்களை புறக்கணிக்கப்பட்டோரின் நிராகரிக்கப்பட்டோரின் அன்பின் வலியை பேசும் படங்கள் என்று வகைப்படுத்தலாம்.மேலும் விரிந்து பரதேசியில் அவர் ஒடுக்கப்பட்டவனின் வலியை பேசுகிறார்.பாலா தன் பால்ய காலத்தில் ஏதோ ஒரு வகையில் புறக்கணிப்பட்டவராக , நிராகரிப்பட்டவராக , உதாசீனப்படுவதாக உணர்ந்திருக்கிறார்.எட்டு குழந்தைகள் மத்தியில் வளரும் அவர் தனக்கு தனிப்பட்ட முறையில் அன்பும் அக்கறையும் செலுத்தப்படவில்லை என்று ஆதங்கப்படுகிறார்.ஒரு முறை அவர் குழந்தைகள் இல்லாத அத்தைக்கு தத்து கொடுக்கப்படுகிறார்.இவன் தான் பாலா என்ற அவர் எழுதிய புத்தகத்தில் அவரின் பால்ய காலத்தில் உணர்ந்த தனிமையின் சித்திரம் கிடைக்கிறது.அதுவே பிற்காலத்தில் அவரை ஒடுக்கப்பட்டவர்களோடு,நிராகரிப்பட்டவர்களோடு தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் இயல்பை உருவாக்கியிருக்கலாம். மனிதின் விரியும் போது ஒடுங்குகிறான், ஒடுங்கும் போது விரிகிறான்.


1 comment:

சர்வோத்தமன் சடகோபன் said...

நான் 2015 அக்டோபரில் திருமணம் செய்து கொண்டேன்.