தஸ்தாவெய்ஸ்கியின் நாவல்களில்
வரும் முக்கிய கதாபாத்திரம் ஏதோ ஒரு வகையில் தஸ்தாவெய்ஸ்கியும் கூட.கரமசோவ் சகோதரர்கள்
நாவலில் வரும் இவான் விஞ்ஞானத்தையும் தத்துவத்தையும் மிகவும் விரும்பி வாசித்து அது
முன்வைத்த அனைத்து கோட்பாடுகளின் அடிப்படையில் கடவுளின் இருப்பு குறித்தும் மனித வாழ்வின்
அபத்தம் குறித்தும் சிந்தித்து இறுதியில் எந்தவித பற்றும் அற்ற ஒரு தளத்தை அடைகிறான்.தஸ்தாவெய்ஸ்கி
விஞ்ஞானத்தையும் தத்துவத்தையும் ஆழ கற்றவர்.அதன் மூலமாக கடவுள் இல்லையென்றால் இந்த
உலகில் எல்லாமே சாத்தியமே என்ற உண்மையை அடைந்தவர்.அதுதான் இவான்.குற்றமும் தண்டனையும்
நாவலில் அதுவே ரஸ்கோல்நிகோவ் கதாபாத்திரம்.ஆனால் அவர் வாழ்வின் பெரும்பகுதி பைபிளையும்
தொடரந்து வாசித்தவர்.இவான் கதாபாத்திரத்திற்கு எதிர்வினை ஆற்றும் வகையில் பாதிரியார்
ஜோசிமாவின் இளமைப்பருவத்தை பற்றி எழுதியிருப்பார்.அவரின் லட்சிய வடிவமும் நம்பிக்கையும்
கரமசோவ் சகோதரர்கள் நாவலில் வரும் அல்யோஷாதான்.அந்த வடிவமே அவரின் இஷ்டலோகம்.அந்த வடிவம்
மிக சிறப்பாக பேதை(தி இடியட்) நாவலில் மிஸ்கின் கதாபாத்திரத்தில் வெளிப்பட்டிருக்கும்.1863முதல்
1871வரை பல காலம் தஸ்தாவெய்ஸ்கி சூதாடியாக இருந்திருக்கிறார்.மேலும் 1846ஆம் ஆண்டு
Poor Folk என்ற அவர் எழுதிய முதல் குறுநாவல் வெளிவந்தது.அது அவருக்கு மிகுந்த புகழை
அளித்தது.அந்த யதார்த்தவாத வடிவமும் அதன் உள்ளடக்கமாக இருந்த மனிதாபிமானமும் முக்கியமாக
பாராட்டப்பட்டன.ஆனால் அடுத்த இரண்டே மாதங்களில் அவர் இரட்டை (The Double) என்ற குறுநாவலை
வெளியிட்டார்.அந்த நாவலின் வடிவம் மிகவும் விமர்சிக்கப்பட்டது.அவர் மேலும் தனிமைப்படுத்தப்பட்டார்.ஏதோ
ஒரு வகையில் அடுத்தடுத்த நிகழ்ந்த சம்பவங்கள் மூலமாக அவர் 1849ஆம் ஆண்டு சிறை சென்றார்.அவர்
தனிமைப்படுத்தப்பட்டதும் சிறை சென்றதற்கும் நிறைய தொடர்பு இருக்கிறது.அவர் விரும்பியிருந்தால்
தொடரந்து யதார்த்தவாத வடிவத்திலான மனிதமாபிமான நாவல்களையே எழுதியிருக்கலாம்.ஆனால்
அப்படி இல்லாமல் அவர் வேறு ஒரு வடிவத்தை தேர்ந்ததற்கு முக்கிய காரணம் ஒரு படைப்பாளிக்கே
இருக்கும் அதீத விருப்பமும் உந்துதலும் தான்.அவர் இரட்டை நாவல் பற்றி சொல்கையில் அதன்
வடிவத்தை தான் கண்டடைந்ததை பற்றி மிகுந்த பரவசம் கொள்கிறார்.அந்த வடிவம்தான் கரமசோவ்
சகோதரர்கள் நாவலில் இவானும் இவானின் வடிவத்திலிருக்கும் சாத்தானுடன் பேசும் வடிவமாக
வளர்ந்தது.அத்தகைய எழுத்தை வெளியிடாமல் இருப்பதற்கான எந்த கட்டுப்பாடும் ஒரு
நேர்மையான படைப்பாளிக்கு இருக்காது.எழுத்து அளிக்கும் அதீத மகிழ்ச்சியே அவனை தொடர்ந்து
எழுத வைக்கிறது.அந்த அதீத விருப்பத்தின் இன்னொரு வடிவமே தஸ்தாவெய்ஸ்கி மேற்கு ஐரோப்பிய
நாடுகளின் சுற்றுப்பயணம் செய்த ஆண்டுகளில் சூதாடியாக இருந்ததற்குமான காரணங்கள்.அந்த
தஸ்தாவெய்ஸ்கியின் வடிவமே கரமசோவ் சகோதரர்கள் நாவலில் வரும் திமித்ரி.அதே கதாபாத்திரத்தின்
இன்னொரு வடிவேம பேதை நாவலில் வரும் ரோகோஸின்.அதே அதீத விருப்பத்தால் துரத்தப்படும்
வடிவத்திலான வேறொரு கதாபாத்திரமே சூதாடி நாவலில் வரும் அலெக்ஸி.
அலெக்ஸி இருபத்தியைந்து
வயதான பட்டதாரி இளைஞன்.ஒரு ஜெனரலின் வீட்டில் அவருடைய பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும்
வேலையில் இருப்பவன்.ஜெர்மனியில் ரெளலட்டன்பர்க் என்ற புனைவு நகருக்கு அவன் வருவதிலிருந்து
கதை ஆரம்பமாகிறது.நகரின் பெயரில் இருப்பது போல அது ரெளலட்(Roulette) என்ற சூதாட்ட விளையாட்டு
இரவு பன்னிரெண்டு மணிவரை நடக்கும் நகரம்.அலெக்ஸி சுமாராக எழுதக்கூடியவன்.அவன் தன
நினைவிலிருந்து எழுதியது போலத்தான் நாவல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.அவன் பொலினா என்ற
பெண்னை விரும்புகிறான்.ஜெனரல் பொலினாவின் மாற்றாந்தந்தை.ஆனால் மேலே குறிப்பிட்டது போல
தஸ்தாயெவ்ஸ்கியின் மற்ற நாவல்களின் பெண் கதாபாத்திரங்களுக்கும் பொலினாவுக்கும் தொடர்ச்சி
உண்டு.கரமசோவ் சகோதரர்கள் நாவலில் வரும் கத்ரீனாவை போல புண்படுத்தப்பட்டவளின் கர்வத்தை
கொண்டவள் பொலினா.இயல்பில் நண்மையின் இயல்பு கொண்டவளாக இருந்தாலும் வாழ்க்கையில் ஏற்பட்ட
சில கசப்பான சம்பவங்களால் சிலர்முன் அவள் தன் கர்வத்தை இழந்து நிற்க வேண்டியிருக்கிறது.அது
அவளை ஆழமாக புண்படுத்துகிறது.வேறு ஒரு வகையில் அந்த புண்படுத்தப்பட்ட கர்வம் சிலரிடம்
குரூரமாக வெளிப்படுகிறது.அப்படி அவள் தன் கர்வத்தை சற்று குரூரத்தண்மையுடன் அலெக்ஸியிடம்
வெளிப்படுத்துகிறாள்.அவளுக்கு அவன் மீது அன்பு இருக்கிறது.ஆனால் அது வெளிப்படும்போது
எப்போதும் கர்வத்தின் நிறப்பரிகையால் சிதறிவிடுகிறது.ஒரு சமயத்தில் பொலினாவிற்கு ஐம்பதாயிரம்
பிரஞ்சு பணம் தேவைப்படும் போது முதல்முறையாக ரெளலட்டன்பர்க் நகரில் அலெக்ஸி தனக்காக
சூதாடுகிறான்.அவன் மிக அதிக அளவில் வெற்றி பெறுகிறான்.சூதாட்டத்தின் மீதான அதீத விருப்பமும்
மயக்கமும் அவனை முதல்முறையாக பற்றிக்கொள்கிறது.அவன் சூதாடி ஆகிறான்.அவன் வெற்றி பெற்ற பணத்தை பொலினாவிடம்
அளிக்கும் போது அதை அவள் தன் கர்வத்தின் காரணமாக நிராகரிக்கிறாள்.அவன் சம்பாதித்த பணம்
பாரீஸ் பயணத்தில் முழுவதும் செலவாகிவிடுகிறது.அடுத்த எட்டு மாதங்களில் கையில் காசு
இல்லாமல் ஹோம்பர்க் என்ற நகரில் தங்கியிருந்து அவ்வப்போது கிடைக்கும் கொஞ்சம் காசை
வைத்து சூதாடுகிறான்.தான் ஒரு முறை கண்ட அந்த கடவுளின் கை மறுபடியும் அதே சூதாட்ட காய்களை
தான் விரும்பும் வகையில் சூழற்றும் என்ற நம்பிக்கையோடு தொடர்கிறான்.நிறைய ஆண்டுகள்
சூதாடியபடியிருந்த தஸ்தாவெய்ஸ்கி ஒரு நாள் தன்னை பீடித்துள்ள இந்த எண்ணம் தன்னைவிட்டு
விலக வேண்டும் என்று தேவாலயத்தை நோக்கி ஓடுகிறார்.தேவாலயத்திற்கு பதிலாக ஒரு யூத வழிப்பாட்டுத்தலத்தின்
முன் மண்டியிட்டு பிராத்திக்கிறார்.பின்னர் அந்த சம்பவத்தை அவர் குறிப்பிடும் போது
தன் மீது குளிர்ந்த நீர் ஊற்றப்பட்டது போல இருந்தது என்று சொல்கிறார்.ஆம், அதன் பின்
அவர் தன் வாழ்நாளில் சூதாடவில்லை.சூதாட்டமும் வேறு எந்த அதீத விருப்பமும் உந்துதலும்
அதற்கான தர்க்கத்தை நம் மனதில் ஏற்படுத்திவிடுகிறது.அந்த மனநிலையில் வேறு எந்த தர்க்கமும்
அதீத விருப்பத்தால் உந்தப்படும் தர்க்கத்தின் மனதின் முன் எந்த பலனுமின்றி மடிந்துபோகும்.சூதாட்டம்,
காதல், கலைப்படைப்பு, ஒரு குறிப்பட்ட எண்ணத்தால் மட்டுமே பீடிக்கப்பட்டிருப்பது எல்லாமே
கிட்டத்தட்ட ஒரே மனஅமைப்பை சார்ந்ததுதான்.நாளை அலெக்ஸி சிறந்த எழுத்தாளராகவும் ஆகலாம்.அவன்
அந்த மனஅமைப்பை பெற்றிருக்கிறான்.எப்போதும் சமநிலையோடு வாழ்க்கையை அணுகும் ஒரு மனதால்
சிறந்த படைப்புகளை தரமுடியும் என்று தோன்றவில்லை.ஒன்று அவன் புறவாழ்க்கையில் மிகவும்
அலைகழிந்தவனாக இருப்பான்.அல்லது சிலரை போல அகத்தில் மட்டும் அலைகழிந்து புறத்தில் வெண்தாடியை
கோதியவாறு நிற்கவும்கூடும்.இந்த நாவல் சூதாட்டம் தவறு என்ற ஒழுக்க போதனையோ அளிக்கும் நாவல் அல்ல.முக்கியமாக ஒரு சூதாடியின் மனம் எப்படி தர்க்கம் புரியும் என்பதே
நாவலின் மையம்.அது அடுத்த முறை வெற்றி பெற்றுவிடுவேன் என்று தர்க்கம் புரியும்.
The Gambler - Fyodor Dostoevksy - Everyman's Library.
No comments:
Post a Comment