ஒற்றை பரிமாண மனிதன்


ஹெர்பர்ட் மார்க்யூஸா எழுதிய புத்தகம் ஒற்றை பரிமாண மனிதன். ந.முத்துமோகன் எழுதிய மார்க்சிய விவாதங்கள் என்ற புத்தகத்தில் இவரை பற்றிய அறிமுகம் கிடைத்தது. மார்க்யூஸா ஒரு நவமார்க்ஸியர்.ஆரம்ப காலங்களில் ஹைடக்கரிடம் பணிபுரிந்தவர்.அவரிடம் கருத்து வேறுபாடு முற்றவே அவரை பிரிந்து ஃப்ராங்பர்ட் பள்ளியில் சேர்ந்தார். இந்த பள்ளியின் நோக்கம் மார்க்ஸிய ஃப்ராய்டிய நோக்கில் முன்னேறிய தொழில்மய உலகை ஆராய்வது. அப்படி முன்னேறிய தொழில்மய நாடுகளை பற்றிய ஒரு ஆய்வு தான் ஒற்றை பரிமாண மனிதன். எல்லா தளங்களிலும் இன்று மறுதலிப்பது(Negation) இல்லாமல் ஆகிவிட்டது. மார்க்ஸ் முதலாளித்துவ சமூகம் முன்னேற முன்னேற தொழிலாளர்களுக்கும் முதலாளிக்களுக்குமான முரணியக்கம் முற்றி இறுதியில் புரட்சி வெடிக்கும் என்று நினைத்தார்.அதாவது முன்னேறிய முதலாளித்துவ சமூகத்தின் பரிணாம வளர்ச்சி சோஷியலிச சமூகம் தான் என்றார். ஆனால் முதலாளித்துவ சமூகம் வளர்ச்சியடையும் தோறும் அது தொழிலாளர்களையும் தனக்குள் இனைத்துக்கொண்டது. அதாவது இன்று ஒரு தொழிலாளியும் முதலாளி ஆகலாம் என்று சொல்லப்படுகிறது. ஆக தொழிலாளியையும் ஒரு நுகர்வோனாக மாற்றி விடுகிறது. ஆக புரட்சிக்கான சாத்தியம் இல்லாமல் செய்யப்படுகிறது. இன்று ஒரு அரசியல்தலைவர் புரட்சி வெடிக்கவேண்டும் என்று கர்ஜித்தால் அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளபோவதில்லை.மொழி தளத்தில் இந்த மறுதலிப்பு இல்லாமல் செய்யப்படுகிறது. ஒரு சமூகத்தில் கலை என்பது மறுதலிப்பது.இன்று ஜான் ஆப்ரகாமின் படைப்பைபும் நீங்கள் சந்தைபடுத்தலாம். அதற்கும் சந்தை மதிப்பு உண்டு. அப்படி முற்றிலும் கரடாக எடுக்கப்படும் சினிமாவோ அல்லது வேறு கலைப்படைப்போ சந்தை படுத்தபட முடியும் என்பதன் மூலம் அதன் மறுதலிப்பு இல்லாமல் செய்யப்படுகிறுது. எல்லா கலைஞர்களுக்கும் தான விரும்பும் இஷ்டலோகம் என்று ஒன்று உண்டு. இப்போதைய நிலையை துஷ்டலோகம் என்று கொண்டால் இந்த இரண்டுக்குமான முரணியக்கத்தில் உருவாவதுதான் ஒரு கலைஞனின் படைப்பு.ஆனால் ஒரு கலைஞனுக்குள் இப்போது இருப்பதே நன்றாகத்தான் இருக்கிறது என்று எண்ணம் உருவாக்கப்பட்டுவிட்டால் பின்பு அவனது படைப்பில் அந்த எதிர்ப்பு இல்லாமல் செய்யப்பட்டுவிடுகிறது.மொழியில் , சமூகத்தில், கலையில் மறுதலிப்பு இல்லாமல் செய்யப்படுகிறது.


சமூகவியல் ஆய்வுகளில் இருபோக்குகள் உண்டு. ஒன்று எமிலி டர்க்கெய்ம் என்ற பிரெஞ்சு சமூகவியலாளர் உருவாக்கிய வகை.மற்றது மாக்ஸ் வேபர் என்ற ஜெர்மானிய சமூகவியலாளர் உருவாக்கியது. முதலாவது சமூக அமைப்பை முன்வைத்து பேசுவது. இரண்டாவது தனிமனிதர்கள் சமூக நடத்தையை முன்வைத்து பேசுவது. ஒற்றை பரிமாண மனிதன் என்ற இந்த புத்தகம் இரண்டாவது வகையை சார்ந்தது. முதல் வகை நேர்க்காட்சி வாதத்தை முன்வைத்தது. அதாவது விஞ்ஞான பூர்வமாக சமூகத்தை ஆராய்வது. அதாவது இதில் தற்சார்பு முற்றிலும் இல்லை என்ற பாவனை உண்டு. முற்றிலும் புறவயமானது (objective). வேபர் வழி வந்த சமூகவியல் ஆய்வு நேர்க்காட்சி வாதத்தை மறுக்கிறது.அது தனிமனிதர்களின் சமூக நடத்தையை முதலில் எடுத்து அதன் மூலம் தன் ஆய்வுகளை மேல் எடுக்கிறது.


இன்றைய தொழில்மய சமூகத்தில் மனிதன் அந்நியப்படுகிறான். அப்படி அந்நியப்படும் மனிதன் தன்னை சூழ்ந்துள்ள சமூகத்தின் ஒடுக்குமுறையால் அ-உன்னதமாக்கலுக்குள் செல்கிறான்.அவனது மகிழ்ச்சி அற்ற பிரக்ஞை உன்னதமாக்கலற்ற செயல்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறது. உங்களின் வேலை நேரங்களை மட்டுமல்ல உங்களின் பொழுதுபோக்கும் நேரத்தையும் இந்த சமூகமே கவணித்துக்கொள்கிறது! மேலும் நம் சிந்தனை முறை மாற்றப்பட்டுவிட்டது.அதாவது தான் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகம் நல்ல சமூகமே என்ற எண்ணம் நம்முள் எழுகிறது , எழுப்பப்படுகிறது. சொல்லாடல்களின் உலகம் மூடப்படுகிறது.இதற்கு அவர் முன்வைக்கும் முக்கிய காரணம் தொழில்நுட்ப பகுத்திறவு.மேலும் விட்கென்ஸ்டீன் போன்றோர் முன்வைத்த நேர்க்காட்சி வாத தர்க்க முறை ஒற்றை பரிமாண தத்துவத்திற்கு வழி வகுத்தது என்கிறார்.


இந்த ஒற்றை பரிமாண உலகில் இருந்து விடுதலையை இல்லையா என்றால் அது இந்த ஒற்றை பரிமாண உலகிற்கு வெளியே இருப்பவர்களுக்கும் இந்த மிக முன்னேறிய தொழில்மய சமூகத்தை ஆழப்புரிந்து கொண்ட அறிவுஜீவிகளும் சந்தித்து கொள்ளும் வாய்ப்பின் மூலம் இந்த விளையாட்டுக்கு எதிராக செயல்பட முடியும் என முடிக்கிறார் மார்க்யூஸா.

என்னை மிகவும் பாதித்த நூல். நமது இன்றைய சமூகச்சுழல் குறித்து அக்கறை உள்ளவர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.இந்த நூலின் இரு பக்கங்களை மொழிபெயர்ப்பு செய்து பார்த்தேன்.


இந்தியாவின் தொழில்மயம் - 4
No comments: