ஷெனாய் கசிந்துகொண்டிருந்தது





எம்.டி.ராமநாதனின் சாமஜ வர கமனா பாடலை கேட்டுக்கொண்டிருந்தார் ஸ்ரீனிவாசராவ்.எம்.டி.ராமநாதன் பாடும் போது மட்டும் எப்படி இவ்வளவு அழகாக உச்சரிக்கிறார்.சுதா மய என்று கேட்டுக்கொண்டிருந்த போது ஒரு இளைஞன் வந்து நின்றான்.ஏதோ கலவரத்திலிருந்து தப்பியோடிய முகம். சில குழந்தைகள் சேர்ந்து ஆளுக்கு ஒரு பக்கம் இழுத்தது போல இருந்தது தலைமூடி. அவரை பார்க்கவந்ததாக சொல்லி தன் பெயர் மட்டும் சொன்னான்.உள்ளே அழைத்து அமரச் செய்தார். பாடல் ஒலித்துக்கொண்டே இருந்தது.

ஐ.ஐ.எஸ்.சி யில் கணினி துறையில் படித்து , ஆஸ்திரேலியாவில் பணி புரிந்து சட்டென்று உள்ளோடுங்கும் ஆமை போல தன் கிராமம் வந்து விவசாயம் செய்து கொண்டிருந்தார் ஸ்ரீனிவாசராவ்.பாடல் முடிந்து நிசப்தமாக இருந்தது.ஏதேனும் சாப்பிடுகிறீர்களா என்றார்.சூடாக ஏதேனும் என்றான் ராஜன்.

ஹரியும் ஹரனும் ஒன்றே ஒலிக்க விட்டார் ஸ்ரீனிவாசராவ்.அவன் சொன்னான்.என் தந்தையின் பெயர் ஹரிஹரன் என்று. சிரித்தார். கருப்பட்டி காபி குடித்துக்கொண்டிருந்தான். விஞ்ஞானம் இல்லாவிட்டால் இந்தப் பாடலை நீங்கள் இப்போது கேட்க முடியாது என்றான்.ஒரு சிலர் உளரே என்றது ஒலிநாடா.சிரித்தார்.

காலையில் ராஜன் எழுந்து பார்த்த போது ஏதோ களிமண்ணில் உருட்டிய விதைகளை தூவி கொண்டிருந்தார் ராவ்.இயற்கை விவசாயமோ என்று அருகில் வந்து கேட்டான்.நீங்கள் நிறைய பணம் சம்பாதித்து விட்டீர்கள்.அதான் ஏதோ உளறிக்கொண்டு விவசாயம் செய்கிறேன் என்று இங்கே வந்து விட்டீர்கள். விவசாயத்தை வாழ்வதாரமாக கொண்டவர்களால் இதை செய்ய முடியாது.இதன் மூலம் நீங்கள் என்ன நிருபிக்க விரும்புகிறீர்கள்.நாம் காலைக்கு என்ன அருந்தலாம் என்றார்.தான் மறுபடியும் உறங்க விரும்புவதாக சொன்னான்.நான் கொஞ்சம் வெளியில் சென்று வரவேண்டும் என்றார்.எவ்வளவு தூரம்.எட்டு கிலோமீட்டர். நான் உறங்க செல்கிறேன் என்று சொல்லி சென்றான்.அவர் மூன்று சிறுவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்க சென்றார்.சூரியன் ஆயிரம் கைகளால் வெயிலை கொட்டிக்கொண்டு இருந்தது.பின்மதியப் பொழுதில் எழுந்தான் ராஜன்.அவர் எதையோ எழுதிக்கொண்டிருந்தார். ஆராய்ச்சி குறிப்போ என்றான்.உங்களுக்கு சமைத்து வைத்திருக்கிறேன்.சாப்பிடலாம் என்றார்.

சாப்பிட்டுவிட்டு மறுபடியும் தூங்கிவிட்டான் ராஜன்.மாலையில் வெளியில் வந்து நின்று கொண்டான்.முற்றிலும் வயல்வெளி.காற்று அற்புதமாக இருந்தது. உங்களுக்கு மனைவி மக்கள் இல்லையா என்றான். கருப்பட்டி காபி போட்டுதரவா என்றார்.மறுபடியும் அதே கேள்வியை கேட்டான். சிரித்தவாறு உள்ளே எழுந்து சென்றார். நான் உங்களிடம் சேர்ந்து விவசாயம் கற்றுக்கொள்ளட்டுமா என்றான். நீங்கள் விரும்பும் வரை இங்கே இருக்கலாம்.உங்களுக்கு பிடித்ததை செய்யலாம்.எந்த தடையுமில்லை என்றார்.நீங்கள் மிகவும் நல்லவர் போல பாவனை செய்கிறீர்கள்.இது எனக்கு பிடிக்கவில்லை என்றான்.சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்க நீங்கள் உபயோகபடுத்தும் உபகரணங்கள் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டது.இதில் நீங்கள் என்ன மாற்றத்தை உருவாக்கிவிட்டீர்கள் என்றான்.அவர் ஒன்றும் சொல்லாதது அவனுக்கு ஆத்திரமூட்டியது.ஏன் எந்தக் கேள்விக்கும் பதில் தர மறுக்கிறீர்கள்.பெரிய ஞானி போல சிரிக்கிறீர்கள் என்று கத்தினான். நாம் எம்.டி.ராமநாதனின் மகா கணபதி பாடலை கேட்போமா என்றார்.அவனுக்கு வந்த ஆத்திரத்தில் அவரை அடித்து விடுவோமா என்ற வெறி ஏற்பட்டது.போயா லூசு,கம்முனாட்டி, என்ன மழுப்பிறியா, ஒரு இழவு கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டிங்கிற, பரதேசி என்று ஏதேதோ பேசினான்.மகா கணபதி பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.

அவன் வீருட் என்று வெளியே சென்று விட்டான்.எம்.டி.ராமநாதனை தொடர்ந்து உஸ்தாத் பிஸ்மில்லா கானின் ஷெனாய் ஒலித்தது.ஏதோ எழுதிய பின் உறங்க போனார்.காலையில் முன்னர் தோன்டிய கக்கூஸ் நிரம்பி விட்டதால் வேறு குழி தோண்டி சுற்றி பலகை அமைத்துகொண்டிருந்தார்.அவன் வந்து அறையின் வாசலில் அமர்ந்தான்.அவர் குளித்து வாருங்கள்.உணவருந்தலாம் என்றார்.ஏன் என்னிடம் எதுவும் கேட்க மாட்டேன் என்கிறீர்கள்.நீங்கள் இவ்வளவு நல்லவர் போல நடந்து கொள்வது எனக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. நான் இரவு முழுவதும் எங்கே தங்கினேன் என்று கூட கேட்க மறுக்கிறீர்க்ள்.நான் இயற்பியலில் மேற்படிப்பு படித்தவன்.இயற்பியல் பிரபஞ்சத்தை புரிந்து கொள்ளவே முயற்சி செய்கிறது. மாசனோபு ஜன்ஸ்டீனை கேலி செய்து விட்டதால் ஐன்ஸ்டீன் ஒன்றும் குறைந்துபோய்விடவில்லை.அவர் கக்கூஸை சுற்றிய பலகையை சரிசெய்து கொண்டிருந்தார்.ஏன் என்னுடன் உரையாட மறுக்கிறீர்கள் என்றான்.உரையாடல் உக்கிரமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது என்றார்.அவன் மேற்கொண்டு ஏதுவும் பேசாமல் சென்று அமர்ந்துவிட்டான்.அவர் விதைத்த களிமண் மூடிய விதைகளிலிருந்து பச்சையாக அங்கிங்காக வெளியே தெரிந்தது.அவர் சிறிய பாதைகள் அமைத்து மிக சிறிய அளவில் நீரை செலுத்தினார்.அவன் அவர் மின்சாரம் உருவாக்கி இருக்கும் வித்த்தை பார்த்தவாறு இருந்தான்.அவர் வெளியில் கிளம்பினார்.மூன்று சிறுவர்கள் தன்னிடம் பாடம் கற்று கொள்கிறார்கள்.நீங்கள் விரும்பினால் நீங்களும் கற்று தரலாம் என்றார்.இப்போதைக்கு ஆர்வமில்லை என்றான்.


அன்று மாலையில் மறுபடியும் உஸ்தாத் பிஸ்மில்லாகான் ஒலித்துக்கொண்டிருந்தார்.என்னை குறித்து நீங்கள் ஒன்றுமே கேட்கவில்லை என்றான்.நீங்கள் விரும்பினால் சொல்லுங்கள் என்றார்.என் தந்தை ஹரிஹரன் ஒரு கம்யூனிஸ்ட்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மாநில அளவிலும், பின்னர் சில காலம் மத்திய குழுவிலும் இருந்தார்.விஞ்ஞானமே இந்தியாவின் எதிர்காலம் என்று மிக தீவிரமாக நம்பினார்.இளமையில் கணிதத்தை மிக விரும்பி படித்திருக்கிறார்.கடைசி வரை கணிதம் சம்பந்தமான சஞ்சிகைகளை வாங்கி கொண்டிருந்தார்.நான் மிகப்பெரிய கணித நிபுனராக வேண்டும் என்று உள்ளளவில் விரும்பினார்.சிறுவயதில் நானும் அவரும் மிக நீண்ட தூரம் நடைபயணம் செல்வோம்.ஏதேதோ கேட்பேன்.ஏதேதோ சொல்வார்.ஒரு குழந்தை போல ஏதோ அதிசயம் போல சமயங்களில் அவர் இரவுகளில் நட்சத்திரங்களை பார்த்தவாறு அமர்ந்துவிடுவார்.சோவியத் ரஷியாவின் வீழ்ச்சிக்கு பின் மிகவும் மாறி போனார்.அவர் பற்றி கொள்ள எதுவும் இல்லாமல் அவதி படுவதை பார்க்க சகிக்கவில்லை.அப்போது பல கம்யூனிஸ்ட்கள் தமிழ் தேசியம் நோக்கி சென்றனர்.என் தந்தை காந்தியம் நோக்கி சென்றார்.நான் அப்போது இயற்பியல் இளங்கலை படித்துக்கொண்டிருந்தேன்.நான் ஆர்வத்தோடு எதைப்பற்றியேனும் அவரிடம் பேசுகையில் ஆர்வமில்லாமல் போனார்.பி.சி.ஜோஷி நீக்கப்பட்டு பி.டி.ரனதேவ் வராமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பார்.உண்மையில் முதலாளித்துவ சமூகத்திலும் , கம்யூனிச சமூகத்திலும் அந்நியமாதல் ஒரே மாதரிதான் இருக்கிறது என்பார்.அவர் கட்சி செயல்பாடுகளில் அவ்வளவு ஆர்வத்துடன் பின்னர் ஈடுபடவில்லை.காந்திய பொருளாதாரம் குறித்து என் தந்தை கடைசிக்காலத்தில் மிக தீவிரமாக வாசித்தார்.விஞ்ஞானம் இந்தியாவிற்கு ஒன்றும் செய்ய முடியாது என்றார்.இதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.நான் அவரிலிருந்து விலக ஆரம்பித்தேன்.அவரும் என்னுடன் உரையாடுவதில்லை.நான் உயர் ஆராய்ச்சிக்காக பூனே சென்று விட்டேன்.அந்த காலத்தில் அவரின் உயிர் போய்விட்டது.அவருக்கு அப்போது வயது அறுவது.பின்னர் நான் ஆராய்ச்சியில் தீவரமாக ஈடுபட்டேன்.மிக பிரம்மாண்டமான சம்பளத்துடன் அணுமின் நிலையம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன்.அங்கே தொழிலாளர்களுக்கு தினமும் சிறுநீர் பரிசோதனை நடைபெறும்.ஒரு நாள் இரண்டு தொழிலாளருக்கு கதிரியக்கத்திற்கு குறிப்பிட்ட அளவுக்கு மேல் பாதிக்கபட்டு விட்டதாக தெரிவிக்க பட்டது.அதன் பின் அவர்கள் தனிமை படுத்த பட்டார்கள்.அவர்கள் என்ன ஆனார்கள், எங்கே இருக்கிறார்கள் என்று ஒன்றுமே தெரியவில்லை.ஊடங்களில் இது குறித்த செய்தி ஒன்றுமேயில்லை.சட்டென்று எனக்குள் இருந்த எல்லா கேள்விகளும் எந்த பதிலும் அற்று பெரும் அச்சங்களாக மாறின.நான் ராஜினாமா செய்தேன்.அதன் பின் நான் எங்கும் வேலை செய்யவில்லை.இரண்டு வருடங்களாக வெறுமனே இருக்கிறேன்.நான் விரும்பி படித்த துறை.என் தந்தை கொண்ட அதே அவதியை நான் இப்போது அனுபவிக்கிறேன்.நான் தற்கொலை செய்து கொள்ள விரும்பினேன்.இயலவில்லை.காந்திய பொருளாதாரம் குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்.

என் மகனது பெயரும் ஹரிஹரன்.உங்கள் தந்தை போலவே அவனும் இப்போது உயிருடன் இல்லை.அவனுக்கு ஐந்து வயது இருந்த போது இறந்து போய்விட்டான்.அவனுடன் உங்கள் தந்தை போலவே நானும் நடைபயணம் செல்வேன்.அவன் கேள்வி கேட்டு கொண்டே இருப்பான்.நான் பதில் சொல்லிக் கொண்ட இருப்பேன்.அவன் இறப்பதற்கு சில காலம் முன்பு என்னிடம் கேட்டான் - நான் இறந்துவிடுவேனா என்று. அதற்கு என்னிடம் பதிலில்லை.ஒரு போதும் எந்த தந்தையும் சந்திக்க விரும்பாத கேள்வி.மரணம் குறித்து அவனுக்கு பிரக்ஞை எவ்வாறு உருவானது என்று எனக்கு தெரியவில்லை.மரணம் என்பதற்கு அவன் என்ன உருவம் கொடுத்திருப்பான் என்பதே என் எப்போதைக்குமான கேள்வி.என்னுடைய மனைவியை நான் காதலித்து திருமணம் செய்து கொன்டேன்.அவன் இறந்த அன்று அவளும் இறந்துவிட்டாள்.எனக்கு விவசாயம் தெரியாது.நான் இங்கு வந்து ஒரு வருடம் ஆகிறது.நானாகவே ஏதோ செய்து பார்த்துக்கொண்டிருக்கிறேன்.உண்மையில் நான் சம்பாதித்த பணத்தை வைத்துக்கொண்டு நான் ஒன்றுமே செய்யவிட்டாலும் இன்னும் அறுவது வருடங்கள் வாழலாம்,மிக செளகரியமாக.ஏதோ ஒரு உந்துதல்.ஒரு அழைப்பு.இங்கு வந்துவிட்டேன்.ஒரு வேலை நவீன மருத்துவம் கொண்டு என் மகனுக்கு நான் செய்த சிகிச்சை எனக்குள் ஏற்படுத்திய கசப்பு காரணமாக இருக்கலாம்.என் மனைவி அன்றே இறந்து போய்விட்டாள் என்று சொன்னேன் இல்லையா.அவள் தற்கொலை செய்துகொன்டாள்.பெண்களுக்கு குழந்தைகள் பிறந்தபின் கணவன் ஒரு பொருட்டே அல்ல.உண்மையில் எனக்கு இயற்கை விவசாயம் குறித்தோ , கிராமப் பொருளாதாரம் குறித்தோ முறையான சிந்தனை இல்லை.இந்தியா மிக வேகமாக ஒரு பாதையில் சென்று கொண்டிருக்கிறது.இதன் இழப்புகள் , பெறுதல்கள் யாரும் சொல்லாமல் அடுத்த பத்து வருட, இருபது வருட காலத்தில் அனைவருக்கும் தெரியும்.ஆட்சியாளர்கள் உட்பட.ஆனால் ஒன்று.கூர்ந்து கவனித்து கொண்டிருந்தால் மிக எளிதாக விவசாயத்தில் சென்றுவிடலாம்.கேவலம் என் முன்னோர்கள் இதைத்தானே செய்துகொண்டிருந்தார்கள்.நாம் அமர்ந்திருக்கும் இந்த மண்ணுக்கு கீழே ஏதோ தாதுப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கபட்டால் நாம் இங்கு இருந்து அகற்றப்படலாம்.அப்படி இல்லாமல் இருந்தால் மகிழ்ச்சி.இன்று இந்தியாவின் விளிம்புகள் நசுக்கப்படுவதில் தனக்கும் உண்டு பங்கு என்று நாம் குற்றவுனர்வு கொள்கையில் மற்றவை குறித்து பேசலாம்.மற்றபடி வேறு எதைப்பற்றியும் சொல்ல என்னிடம் கருத்துக்கள் இல்லை.உங்கள் கேள்விகளுக்கு நீங்கள் தான் பதில் தேட வேண்டும்.அதற்கு எங்குமே முன்முடிவான பதில்கள் இல்லை.தீவிர உடல் உழைப்பு இருந்தால் நன்றாக உறங்கலாம்.நான் இப்போது மிக நன்றாக உறங்குகிறேன்.இரவும்,இசையும், உறக்கமும் நமக்கு அளிக்கப்பட்ட கருணைகள்.அவ்வளவுதான்.பிசுபிசுக்கும் இருட்டில் ஷெனாய் கசிந்துகொண்டிருந்தது.




No comments: