டார்வினின் வால் – தூயன் – எதிர் வெளியீடு.
புகைப்படம் - Julia Margaret Cameron/ Adam Cuerden - Alfred Steiglitz Collection reference 1949.881, Art Institute of Chicago, Public Domain, https://commons.wikimedia.org/w/index.php?curid=131628151
டார்வினின் வால் – தூயன் – எதிர் வெளியீடு.
புகைப்படம் - Julia Margaret Cameron/ Adam Cuerden - Alfred Steiglitz Collection reference 1949.881, Art Institute of Chicago, Public Domain, https://commons.wikimedia.org/w/index.php?curid=131628151
புக் பிரம்மா
மூன்றாம் நாள் நிகழ்வில் தெலுங்கு சிறுகதைகள் பற்றிய அரங்குக்கு சென்றேன்.எவை
தெலுங்கு சிறுகதைகள் என்ற விவாதம் நிகழ்ந்தது.அசோகமித்திரன் ஐதராபாத் பற்றி
எழுதியதை சுட்டிக்காட்டி அவை தெலுகு சிறகதைகள் என்று கொள்ள முடியுமா என்ற கேள்வியை
தன் பேச்சில் கேட்டுக்கொண்டார் விவின மூர்த்தி என்ற எழுத்தாளர்.
அவர் பொதுவாக
தெலுகு பாஷையில் எழுதப்பட்ட சிறுகதைகள் தெலுகு சிறகதைகள் தான் என்றார்.தெலுங்கு
சிறுகதைகள் தொடங்கிய காலங்களில் எளிய மக்களின் கஷ்டங்களைப் பற்றி பேசின ,ஏழுபது
எண்பதுக்கு பிறகு எளிய மக்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசும் அதே
வேளையில் அவர்கள் அதை எதிர்த்து போராட வேண்டிய அவசியத்தையும் போராட்டங்களை
பற்றியும் பேசின என்றார். தெலுகு கதைகளின் முக்கிய விஷயம் அது சமாஜத்தோடு
(சமூகத்தோடு) எப்போதும் தொடர்பில் இருப்பது தான் என்றார்.அது வேறு ஏதோ ஒரு உலகத்தை
குறித்து பேசாமல் சமூகத்தை குறித்தே தன் கதைகளில் விவாதித்தது என்றார்.சில
குறைகளையும் சொன்னார், குறைகள் எனக்கு சரியாக புரியவில்லை.
முகம்மது காதர்
பாபு என்ற எழுத்தாளரிடம் இஸ்லாமியர்கள் ஏன் இஸ்லாமிய உலகத்தை பற்றி மட்டுமே
பேசுகிறார்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.அவர் தன் வாழ்க்கையிலிருந்து ஒரு பதிலைச்
சொன்னார்.தன் தாய் இறந்த பின்னர் நிறைய பேர் துக்கம் விசாரித்த போது பலருக்கும்
இஸ்லாத்தில் மரணத்திற்கு பின்னான சடங்குங்கள் , முறைகள் பற்றி எதுவும் தெரியவில்லை என்பதை
அறிந்து கொண்டதாகச் சொன்னார்.நாங்கள் இறந்தவர்களின் உடலை மசூதிக்கு எடுத்துச்
செல்வோம், நாற்பது நாட்கள்
கழித்து சில சடங்குகளை அனுசரிப்போம்.அதைப் பற்றி யாரும் அறியவில்லை.எங்களோடு
எங்கள் அருகில் இருக்கிறார்கள் , ஆனால் யாருக்கும் எதுவும் தெரியவில்லை , அப்படியென்றால்
ஒன்று நாங்கள் அவர்களுக்கு சொல்லவில்லை, அல்லது அவர்களுக்கு அதை அறிய அக்கறையில்லை , ஆகையால்
எங்களுக்கு இவை பற்றி சொல்லவே நிறைய இருக்கிறது.ஒரு எழுத்தாளரிடம் வந்து ஏன் இதைப்
பற்றி எழுதவில்லை , அதைப்பற்றி எழுதவில்லை என்று கேட்பது
அவசியமற்றது. ஒரு எழுத்தாளன் எதை எழுத விரும்புகிறானோ அதைத் தீவிரத்தன்மையோடு
எழுதினாலே போதுமானது என்று கோர்வையாகச் சொன்னார்.அவர் மிக நன்றாக பேசினார்.
அதே போல அவரிடம்
இப்படித்தான் எழுத வேண்டும் , அதாவது ஓடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து எழும்
குரலாக , ஓடுக்குதலுக்கு
எதிராக என்ற தன்மையில் தான் எழுத வேண்டும் என்ற நிர்பந்தம் உங்களுக்குள்ளேயே
இருக்கிறதா என்ற இன்னொரு கேள்வி கேட்கப்பட்டது. ஜீவித கதைகள் எப்போதும்
எழுதப்பட்டன.திருமணத்தின் போது மெஹந்தி அணிதல் போன்ற சிறு கொண்டாட்டங்களை எழுதலாம், எழுதப்பட்டுள்ளன.அதனால்
எப்போதும் வாத பிரதிவாதங்கள் உள்ள கதைகளைத்தான் எழுத வேண்டும் என்ற அவசியமில்லை , ஆனால் அப்படியான
ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கிறது என்பது உண்மைதான் , அதைத் தவிர்த்து எழுத வேண்டும் என்றார்.
எழுத்தாளர்
குப்பிலி பத்மா நான் ஒரு பியூட்டி பார்லரில் நிகழ்ந்த கதையை எழுதினால் இது
உங்களுக்கு நிகழ்ந்ததா என்பது போன்ற எதிர்வினைகள் வருகின்றன என்றார். இதைப்பற்றி
ஜா.தீபா கூட தமிழ் அரங்கில் சொன்னார்.
முகம்மது காதர்
பாபு தெலுங்கு சிறுகதைகளில் வஸ்துக்கள் (வஸ்து என்றால் பொருட்கள் என்று வகையில்
சொல்லப்படுகிறது என்று நினைக்கிறேன்) மாறியிருக்கின்றன , பிரயோகங்கள்
அதிகம் மாறவில்லை என்றார். (அப்படியாக நான் புரிந்துகொண்டேன்).
பூதுரி
ராஜிரெட்டி என்பவர் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.நல்ல நிகழ்வு.தெலுங்கில் கம்யூனிஸ
அமைப்பு தெலுங்கானா பகுதியில் வலுவாக இருந்ததால் ஆரம்ப கால தெலுகு நாவல்கள் , கதைகள் , சுயசரிதைகளில்
இடதுசாரி உலகிலிருந்து நிறைய பேர் எழுதியிருக்கிறார்கள் என்பது புரிந்தது.
அறுபதுகளில் ஒரு
நிலச்சுவான்தார் நக்ஸல்களால் கொல்லப்பட்டப் பின்னர் அவரது மனைவி தன் பதினான்கு
குழந்தைகளை தனியாளாக வளர்த்தெடுத்தார்.அவர் இந்தக் காலகட்டத்தில் குழந்தைகளை
வளர்த்துக்கொண்டு தன் கணவரின் கொலை வழக்கையும் எதிர்கொள்ள
வேண்டியிருந்தது.இவற்றைப்பற்றி அவர் ஒரு சுயசரிதை நூல் எழுதியுள்ளார் என்று
எழுத்தாளர் காத்யாயனி வித்மகே முந்தைய நாள் நிகழ்ந்த பெண்களின் சுயசரிதை என்ற
அரங்கில் பகிர்ந்துகொண்டார்.கட்சி சார் இடதுசாரி அமைப்புகள் பின்னர் வந்த நக்ஸல்
அமைப்புகள் ஆகியவை தெலுகு இலக்கிய உலகில் பெரும் பாதிப்பை எழுத்து முறையில்
சிந்தனையில் செலுத்தியுள்ளது என்று தோன்றியது.
இந்த புக் பிரம்மா நிகழ்வில் தெலுகு இலக்கிய உலகைப் பற்றிய அறிமுகத்தை ஏற்படுத்திக் கொண்டது எனக்கு உவப்பளிக்கிறது.
புக் பிரம்மா
நிகழ்வில் டீ குடிக்கச் சென்ற போது இருவரோடு உரையாட நேர்ந்தது.அதில் ஒருவர் நான்
ஆரம்ப நிலை வாசகன் , ஜெயமோகனை சந்திக்கத் தான் வந்தேன் என்றார்.
அந்தத் தான், எனக்கு ஆச்சரியமாகவும் வருத்தமாகவும் இருந்தது.எத்தனையோ அரங்குகள் , நிகழ்த்துக்கலைகள்
, எழுத்தாளர்கள்
இருக்க ஒருவரை மட்டும் சந்திப்பதால் என்ன பயன் என்று புரியவில்லை.பலருக்கு தமிழைத்
தவிர வேறு ஏதேனும் மொழியும் தெரியும்.வேறு மொழி அரங்குகளுக்கு செல்லலாம்.எத்தனையோ
தேர்வுகள்.
மத்தேயு
பத்தாவது அதிகாரத்தில் - 37வது வசனம் -
தகப்பனையாவது
தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது
மகளையாவது நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.
தாய் தந்தையரை
அதிகம் நேசிப்பவன் ,அவர்களுக்கு பாத்திரமானவன் தனக்கு பாத்திரன்
அல்ல என்கிறார் இயேசு கிறிஸ்து. தன் தாயை தந்தையை நேசிப்பவன் மரபை நேசிப்பவன்.மரபை
நேசிப்பவன் எப்படி தன்னை ஏற்க முடியும் என்கிறார் கிறிஸ்து.Kill your fathers என்ற பதம் உண்டு.
இலக்கியம்
வாசிக்கும் போது ஜெயமோகன் வாசிக்கப்படலாம்.ஜெயமோகனை வாசிப்பது இலக்கியத்தை
வாசிப்பது ஆகாது. அவர் ஒரு தரப்பு.முக்கியத் தரப்பு.ஆனால் அது போல பல தரப்புகள்
உண்டு.ஒரு போதும் பூமணியின் பிறகு போன்ற ஒன்றை ஜெயமோகன் எழுத முடியாது.அது வேறு
தளம் , வேறு
பார்வை.பூமணியை ஜெயமோகன் வழி அறிவதும் புரிந்துகொள்வதும் கூட பிழைதான்.
நகுலன்
உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் நகுலனை படித்து பின்னர் அதைத் தொகுத்து ஏன்
பிடிக்கவில்லை என்று உணர்ந்து கொள்ள வேண்டும். ஜெயமோனுக்கு பிடிக்காதவர்கள் தனக்கு
பிடிக்காதவர்கள் என்று கொள்ளக் கூடாது. நீங்கள் எதற்காக இலக்கியம் படிக்க
வருகிறீர்கள்.ஜெயமோகனை அறிந்து கொள்ளவா?அவரை அறிந்து கொள்வது எப்படி இலக்கியத்தை
அறிந்து கொள்வதாகும்.
எனக்கு
தஸ்தாயெவ்ஸ்கியை பிடிக்கும்.ஆனால் தஸ்தாயெவ்ஸ்கி ரஷ்ய இலக்கியம் அல்ல என்பதும்
தெரியும்.தஸ்தாயெவ்ஸ்கி ஒருவரை வைத்து ரஷ்ய இலக்கியத்தை நாம் பேச முடியாது.
ஜெயமோகன் ஒருவரை வைத்து மட்டும் தமிழ் இலக்கியம் பேச முடியாது.
புக் பிரம்மா
இரண்டாம் நாள் நிகழ்வுக்கு சென்றிருந்தேன்.நிறைய தமிழ் எழுத்தாளர்கள்.சிலரிடம்
அறிமுகம் செய்து கொண்டு முகமன் தெரிவித்தேன். நன்றாக ஒருங்கிணைப்பட்ட
நிகழ்வுகள்.குறை சொல்ல ஒன்றுமில்லை.நான் நான்கு நிகழ்வுகளுக்கு சென்றேன். இரண்டு
தமிழ் , இரண்டு
தெலுங்கு. தமிழில் சிறுகதைகள் பற்றிய அரங்கும் தலித் இலக்கியம் பற்றிய அரங்கும்
இன்று இருந்தன.தலித் இலக்கியம் பற்றி ஸ்டாலின் ராஜாங்கம், சுகிர்தராணி
பேசினார்கள். நன்றாக
பேசினார்கள்.கமலாலயன் ஒருங்கிணைத்தார்.சிறுகதைகள் குறித்த அரங்கில் சுநீல்
கிருஷ்ணன், கார்த்திக் பாலசுப்பரமணியன், தீபா பங்கு பெற்றனர். எம்.கோபாலகிருஷ்ணன்
ஒருங்கிணைத்தார்.சிறுகதைகள் குறித்த அரங்கு இன்னும் சற்று குவிமையம்
கொண்டிருந்திருக்கலாம் என்று தோன்றியது.
நான் தெலுங்கை
தாய் மொழியாக கொண்டிருந்தாலும் அதிகம் பேசுவதோ கேட்பதோ இல்லை.தெலுங்கு இலக்கியம்
குறித்த அறிமுகமும் இல்லை.எனக்கு சென்னைத் தெலுங்கு,தென் ஆற்காடு , வட ஆற்காடு
பகுதிகளின் தெலுங்கு புரியும். அரங்கில் பேசப்படும் தெலுங்கு விளங்குமோ என்ற
சந்தேகம் இருந்தது.சரி செல்வோம் என்று தோன்றியது.ஆச்சரியமாக அவர்கள் பேசுவது
நன்றாக புரிந்தது. தெலுங்கு நாவல்கள் குறித்த அரங்கில் நிறை கூட்டம்.அரங்கு
நிறைந்திருந்தால் எக்ஸ்ட்ரா சேர்கள் போட்டார்கள்.அரங்கில் சு.வேணுகோபலை
பார்த்தேன்.நன்றாக பேசினார்கள்.தெலுங்கில் தலித் நாவல்கள் ,அவை சினிமா
ஆகாமல் இருப்பதற்கான காரணங்கள், பிற மொழிகளுக்கு மொழியாக்கங்கள் செல்லாமல்
இருப்பதற்கான காரணங்களை பகிர்ந்து கொண்டார்கள்.
அதே போல மற்றொரு
அரங்கு தெலுங்கு மொழியில் பெண்களின் சுயசரிதைகள்.மிகச் சிறப்பான
ஒருங்கிணைப்பு.சி.மிருணாளினி என்பவர் தன் எண்ணங்களைத் திறம்பட தொகுத்து சரளமாக
பேசினார்.சுயசரிதையில் பாலியல் சார்ந்த பார்வைகளை பேசும் போது அதை சிலோகிக்கும்
நாம் பிற பலவீனங்களைப் பற்றி பேசுகிறோமா என்று கேட்டார்.அதாவது ஒருவர் தன்
பணியாளர்களை எப்படி நடத்தினார், குழந்தைகளை எப்படி நடத்தினார் என்பதைக் குறித்து
அதே போன்ற ஒரு வெளிப்பாட்டை அவர்கள் வைக்கிறார்களா? அப்படி இல்லையென்றால் பாலியல் சார்ந்த பார்வைகள்
மட்டும் ஏன் முன்வைக்கப்படுகின்றன என்று கேள்வி எழுப்பினார்.காத்யாயனி வித்மகே
ஆண்களின் சரிதை புற உலகை பற்றிப் பேசுகின்றன, பெண்களின் சரிதைகள் அக உலகம் குறித்த
சித்திரத்தை அளிக்கின்றன.இவை இரண்டும் சேர்ந்து ஒரு காலகட்டத்தின் பார்வையை
தருகின்றன என்றார்.
மேலும்
மிருணாளினி பேசும் போது நாம் என்னதான் சுயசரிதை எழுதினாலும் அதை நாம் மனதளவில்
சற்று எடிட் செய்து தான் பிரசுரிக்கிறோம் என்றார்.கணவர், அத்தை , மாமா , பிறர் என்று
எவரைப் பற்றியும் எழுதும் போது நாம் இந்தச் சமூகத்தில் அவர்களோடு ஜீவிக்க வேண்டிய
வகையில் தான் எழுத முடியும், அப்படி எழுவதே நல்லது என்றார்.சில உதாரணங்களைச்
சொல்லி எத்தனை தீவிரமான விஷயங்களையும் ஹாஸ்யத்தோடு சொல்ல முடியும் என்றார்.
சுநீல்
கிருஷ்ணனனோடும் , கார்த்திக் பாலசுப்பரமணியனோடும் சற்று நேரம் பேச
முடிந்தது.ஜெயமோனைச் சுற்றி பலர் நின்றுகொண்டும் பின்னர் அமர்ந்து கொண்டும் அவர்
பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.நான் செல்லவில்லை.
புத்தக
அங்காடியில் தமிழ் ஸ்டால்கள் அதிகம் இல்லை.மகனுக்கு சில காமிக்ஸ் புத்தகங்கள்
வாங்கினேன்.இனிமையான நாள்.
அபிலாஷ் பாரடைஸ் திரைப்படம் பற்றி எழுதியிருக்கிறார்.அவர் எழுதியுள்ளதற்கு மாறாக எனக்குத் திரைப்படம் பிடித்திருந்தது. இந்தத் திரைப்படம் போலிய பெண்ணியவாதத்தையோ அல்லது பெண்ணியவாதத்தையோ முன்வைக்கும் படம் அல்ல.
சீதையின் அக்கினிப்பிரவேசம் பற்றியும் ராமன் ராவணனை கொலை செய்ததை பற்றியும் கதையில் பலரும் பேசுகிறார்கள். இந்தக் கதையின் மையமான வாதம் அந்தப் பெண்ணின் பார்வை அல்ல.தமிழர்களோ இஸ்லாமியர்களோ சிங்களர்களோ கூட இல்லை. இதில் அந்த நாயகனின் உறுதித்தன்மையே மையக் கதையாடலாக இருக்கிறது. அவன் தொடர்ந்து உறுதியாக பிடிவாதமாக தன் களவாடப்பட்ட பொருள் குறித்த பதற்றத்தோடு இருப்பதையே கதை முதன்மைப்படுத்துகிறது .எனக்கு என் பொருள் வேண்டும் என்பதற்கு அப்பால் அவனால் சிந்திக்க இயலவில்லை.
முதலில் அந்தப் பெண்ணும் இயல்பாக அவனோடு காவல் நிலையம் செல்கிறாள்.அதுவரை அவளுக்கும் எந்தக் குழப்பமும் இல்லை.அங்கு அழைத்து வருபவர்களை அவளால் அடையாளம் காட்ட இயலவில்லை.தன் கணவரின் தீர்க்கமான முடிவு அவளைக் குழப்புகிறது. இங்கிருந்து தான் அவர்களுக்குள் மன கசப்பு உண்டாகுகிறது. அவன் அந்த விடுதியிலோ , காவல் நிலையத்திலோ ,அந்தத் தமிழர் தாக்கப்படும் போதோ , அவன் இறக்கும் போதோ, அது பெரிய சிக்கலாக உருவெடுக்கும் போதோ அந்த விடுதியின் உதவியாளரை காவல் துறை ஆய்வாளர் சந்தேகிக்கும் போதோ அவன் தன் பிடிவாதத்தை விட்டிருக்கலாம்.
அவன் தொலைத்தவை முக்கியமான பொருட்கள் தான். அவன் கைப்பேசியோடும் கணினியோடும் தான் அதிக நேரம் செலவிடுகிறான் என்பது காட்சிப்படுத்தப்படுகிறது. எல்லோருக்கும் வரும் பதற்றம் தான் அவனுக்கும். எப்படியாவது தொலைத்ததை பெற வேண்டும் என்ற எண்ணம் எவருக்கும் இருக்கும்.அதுவும் அது தன் தொழிலுக்கு முக்கியமானதாக இருக்கும் போது பதற்றமும் ஏக்கமும் மேலும் அதிகமாகவே இருக்கும்.
ஆனால் அந்த உறுதியிலிருந்தும் பிடிவாதத்திலிருந்தும் அவன் இறுதிவரை விலகி வருவதே இல்லை.தன் முன் நிகழும் எதையும் அவன் கண் கொண்டு பார்க்கவே இல்லை.அவன் அகம் புறத்தை பார்க்க மறுக்கிறது.அவன் இலங்கை சென்றாலும் விடுமுறையில் இல்லை.அவனது அழுத்தமே அங்கு நிகழும் அனைத்துக்கும் காரணம் என்பதும் அவனுக்குப் புரியவில்லை.அதை அவன் உணரவும் விரும்பவில்லை.மருத்துவமனைக்கு செல்பவன் அங்கிருந்து திரும்பிவிடுகிறான்.அவன் யதார்த்தத்தை எதிர் கொள்ளத் தயங்குகிறான்.
அவன் தன் பிடிவாதத்தை பொருந்தாத பழைய சட்டையை போல கழற்றியிருக்க முடியும்.ராமர் தன் பிடிவாதத்தை விட்டிருந்தால் லங்கை அழிந்திருக்காது , சீதையே ராவணனை கொன்றிருப்பாள் என்பதான புரிதலும் உண்டானது.
நாயகி நாயகனை கொல்லும் தருணம் ஒரு விபத்து தான். அது அவள் திட்டமிட்டு நிகழ்த்துவது அல்ல.அந்தத் தருணத்தில் தனக்கிருந்த பதற்றத்தாலும் எரிச்சலாலும் செயலின்மையாலும் தான் அவள் அவனை சுடுகிறாள்.இங்கே நாயகன் ராமனாகவும் இருக்கலாம் ராவணனாகவும் இருக்கலாம்.
இறந்து போன மனித உரிமை ஆர்வலர் கே.பாலகோபால் ஒரு பேட்டியில் பிடிவாதம் குறித்து பேசியிருப்பார்.பிடிவாதம் இயல்பில் ஒரு அருவெருக்கதக்க குணம்.நாம் மிகவும் உறுதித்தன்மையோடு இருந்தால் பிறருக்கு நம்மை பிடிக்காமல் போய்விடும்.ஆனால் மனித உரிமை ஆர்வலராக என்னுடைய பிடிவாத குணம் எனக்கு உதவுகிறது என்று சொல்லியிருப்பார்.
இந்தத் திரைப்படம் மற்றமை குறித்த அக்கறை அற்ற உறுதித்தன்மை குறித்தே பேசுகிறது. மேலும் ஒரு பெண்ணிற்கு முகமைகள் தேவையில்லை என்பதையும் சொல்கிறது.அதை இந்தக் கதை அந்தப் பெண் கதாபாத்திரத்தின் உருமாற்றமாக சொல்லவில்லை.அந்தப் பெண் இயல்பிலேயே அப்படியானவளாக சுய விருப்பு வெறுப்புகள் கொண்டவளாகவே இருக்கிறாள்.சீதை அழுது கொண்டுதான் இருந்திருப்பாள் என்று ஏன் சொல்கிறீர்கள் என்று வினவுகிறாள்.சமண ராமாயணத்தில் சீதை தான் ராவணனை கொல்கிறாள், ராமன் தேரோட்டியாக இருக்கிறான் என்கிறாள்.
பிடிவாதங்களை களைந்து மற்றமை மீது கொள்ள வேண்டிய அக்கறையே இந்தத் திரைப்படத்தின் கதையாடல்.நல்ல திரைப்படம்.
குறிப்பு : இந்தத் திரைப்படத்தை பற்றி எழுதும் எண்ணம் முன்னர் இல்லை. அபிலாஷ் எழுதியதை படித்தப் பின்னர் என் எண்ணங்களை தொகுத்துக் கொள்ள முடிந்தது.எழுதவும் வாய்த்தது.அவர் பதிவுக்கு நன்றி.
சமீபத்தில் எம்.டி.வாசுதேவன் நாயரின் நிர்மால்யம் திரைப்படம் பார்த்தேன். அவரின் முதல் படம். எத்தகைய தேர்ந்த இயக்குனராக அதில் மிளிர்ந்திருக்கிறார். அவருக்கு சினிமா குறித்த முழுமையான புரிதல் முதல் படத்தின் போதே இருந்திருக்கிறது. காட்சி கோணங்கள், சட்டகங்கள், ஒளியமைப்பு, படத்தொகுப்பு, இசை என்று அனைத்து துறைகளிலும் தேர்ந்த படம். கலைகள் , இசை , இலக்கியம் போன்றவற்றை போஷித்துவந்த நிலப்பிரபுத்துவ சமூகம் சோஷியலிச சமூகம் தோன்றும் போது தன் அக்கறைகளை மாற்றிக் கொள்கிறது. அப்போது அந்தக் கலைகளை மட்டுமே சார்ந்து இயங்கி வந்த மனிதர்கள் , அவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், விழுமியங்களின் வீழ்ச்சி ஆகியவற்றை நிர்மால்யம் முன்வைக்கிறது.